காந்தி முதல் முறையாக டில்லி சென்று நூறாண்டுகள்
இந்தியாவின் தேசத்தந்தை என்று அறியப்படும் காந்தியடிகள் புதுடில்லிக்கு முதல் முறையாக விஜயம் செய்து நூறாண்டுகள் ஆகின்றன.

பட மூலாதாரம், gandhi museum delhi
இதையொட்டி புதுடில்லியிலுள்ள தேசிய காந்தி அருங்காட்சியகம் பல சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் முறையாக டில்லிக்குச் சென்ற காந்தி, அங்குள்ள புனித ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் தங்கி மாணவர்களுடன் உரையாடினார்.
அந்தக் கூட்டத்தில் காந்தி அரசியல் ஏதும் பேசவில்லை, மாறாக இறை நம்பிக்கை குறித்தே பேசினார் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார் காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை.
இறை நம்பிக்கை எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும், நேர்மையாக இருந்தால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் மையப்படுத்தியே அவர் டில்லியில் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரை இருந்தது எனவும் அவர் கூறினார்.
பயமில்லாமல் எப்படி வாழ்வது எனும் செய்தியை இந்தியர்கள் மத்தியில் எடுத்துச் செல்லவே காந்தி ஆரம்பத்தில் முயன்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து, இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பதை முதலில் புரிந்து கொண்டு, பின்னர் அரசியலில் ஈடுபடலாம் என்ற கோபாலகிருஷ்ண கோகலே அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே அவர் புதுடில்லிக்கான பயணத்தை மேற்கொண்டார் என்கிறார் அண்ணாமலை.
காந்தியின் நெருங்கிய நன்பரான சி எஃப் ஆண்ட்ரூஸ் அவர்கள் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பேராசிரியராக இருந்ததும் டில்லியில் தங்கியிருந்ததும், காந்தி டில்லிக்கு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார் அவர்.
தென் ஆப்ரிக்காவிலிருந்து 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தார் காந்தி.












