You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் இந்த தீர்ப்பினால், விடுதலை பெற இருக்கிறார்கள்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளன் கடந்த மே மாதம் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாரோ அதே அடிப்படையிலேயே மீதமுள்ள இந்த ஆறு பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேறு எந்த வழக்கிலாவது இவர்கள் சிறையில் இருப்பது தேவை இருந்தால் ஒழிய இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நளினி, ரவிச்சந்திரன் சிறை நடத்தையில் திருப்தி
மனு தாரர்களான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் நன்னடத்தையை வெளிப்படுத்தியிருப்பதையும், இவர்கள் மிக நீண்ட காலம் சிறையில் இருப்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"நளினி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கணினி பயன்பாட்டில் அவர் பிஜி டிப்ளமா முடித்துள்ளார். ரவிச்சந்திரனின் சிறை நடத்தையும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. சிறையில் அவர் பி.ஜி. டிப்ளமா உள்ளிட்ட பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்தார். பல்வேறு அறப் பணிகள் செய்தார்," என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
பேரறிவாளன் வழக்கை அடிப்படையாக கொண்டு தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி இந்த இரண்டு பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
கடந்த மே மாதம் அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில், 2018ம் ஆண்டு இவர்களை முன்விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் 6 பேர் சிறையில் இருந்துவந்தனர்.
நான்கு இலங்கை நாட்டவர்
தற்போது விடுதலையாகும் 6 பேரில், நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு இலங்கைக்கு திரும்பிச் செல்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு
"மீதம் சிறையில் இருக்கும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்க முடியாததும், முழுவதும் தவறானதும் ஆகும். காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்தியாவின் ஆன்மாவுக்கு இசைவாக செயல்படாதது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு
முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991 மே 21ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். புலனாய்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கண்டறிந்தது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு சம்பவத்திலேயே இறந்துவிட்டார். கொலைச் சதியின் பின்னணியில் இயங்கியதாக சிபிஐ கண்டறிந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை போலீஸ் சுற்றி வளைத்த நிலையில் அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தலை மறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர பல்வேறு காரணங்களுக்காக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு இதற்கென அமைக்கப்பட்ட தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28-ம் தேதி மரண தண்டனை விதித்தது.
தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான அமர்வு நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டுமே மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒருவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.
மீதமிருந்த 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனை முதலில் உச்ச நீதிமன்றத்தால் 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களில் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை அடைந்தார். இப்போது மீதம் இருந்த 6 பேரும் விடுதலை பெறுகிறார்கள்.
(செய்தியாளர் சுசித்ரா மொகந்தி அளித்த உள்ளீடுகளுடன்... )
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்