You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது என்ற குழப்பத்திற்குள் செல்லாமல், பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறை.
ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
"ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது?"
அப்போது, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, "பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்தும் ஆளுநர் இதுதொடர்பாக முடிவெடுக்கவில்லை" என தெரிவித்தார்.
மேலும், "32 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் பேரறிவாளன் நன்னடத்தையுடனும், முன்மாதிரி நபராகவும் செயல்பட்டுள்ளார். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்" என கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் ஏன் அவர் (பேரறிவாளன்) சிக்கிக்கொள்ள வேண்டும்? நாமே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதிக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துவிவேதி, "இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கான உரிய அதிகாரம் கொண்ட அரசு எது என்பதுதான் இங்கு சர்ச்சையாக உள்ளது.
"அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை அழித்துவிடும்"
அரசமைப்புச் சட்ட விஷயங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், சில காரணங்களுக்காக, அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படலாம், ஆனால் மீண்டும் மசோதாக்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும்" என தெரிவித்தார்.
"யார் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குள் செல்லாமல், அவரை விடுதலை செய்வதற்கு நாம் ஏன் உத்தரவிடக்கூடாது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதற்கு, "இதுகுறித்து ஆளுநர் முடிவு எடுக்காமல், எந்த விதியின் அடிப்படையில் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு நடராஜ், "சட்டப்பிரிவு 72" என பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய், "32 ஆண்டுகளாக அவர் சிறைத்தண்டனை பெற்றுவருகிறார். இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகள் மூலம் பலன் பெற்ற மற்றவர்களிடமிருந்து அவர் எந்த விதத்தில் வேறுபடுகிறார் என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்" என கூறினர்.
"அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா?" எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
"ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத விவகாரம் அவர் பார்வைக்கு அனுப்பப்பட்டால், அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் உள்ளது. மாறாக, ஆளுநர் முடிவெடுத்திருந்தால், தன் அதிகாரத்தை மீறுவது போன்றதாகும்" என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
"இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால், ஒவ்வொரு குற்ற வழக்கையும் மத்திய அரசு விசாரிக்க வேண்டியிருக்கும்" என, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள்,"ஆளுநர் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, எத்தனை முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது? ஆளுநர் அமைச்சரவையின் முடிவில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், அவர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். இது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை அழித்துவிடும்" எனக்கூறினர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்