டி20 உலகக் கோப்பை 2022: அதிரடி காட்டிய சூர்யகுமார்; 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
கிரிக்கெட் காலண்டரில் 2022ம் ஆண்டு விராட் கோலிக்கானது மட்டுமல்ல.. 360 கோணங்களில் தனது அதிரடியான ஷாட்களால் அடித்து பலரையும் அன்னார்ந்து பார்க்க வைத்த சூர்யகுமாருக்கும் இது ஒரு சிறந்த ஆண்டு. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம் ஒன் சைடட் கேமாக இருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் ரசிகர்களை இருந்த இடத்திலேயே கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் போற்றும் அளவுக்கு தனது பேட்டிங்கை கூர் தீட்டியிருக்கிறார் சூர்யகுமார்.
'எனக்கு உதவியது ரப்பர் பால் கிரிக்கெட்'
டி20 கிரிக்கெட்டில் சொற்பமான வீரர்கள் மட்டுமே சூர்யகுமார் இப்போது ஆடுவதை போல மிரட்டியிருக்கிறார்கள் என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டுள்ளார். ரப்பர் பந்துகளை வைத்துதான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடினேன். பலமுறை பந்தடிபட்டுள்ளது. அந்த கிரிக்கெட்தான் இப்போது என்னை சிறப்பான ஷாட்களை ஆட வைத்திருக்கிறது. உலகத்தில் ஒரேயொரு 360 டிகிரி கிரிக்கெட் வீரர் தான் இருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். அவரைபோல நானும் விளையாட முயற்சிப்பேன் என்கிறார் சூர்யகுமார் யாதவ். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் ரன் ரேட்டை எகிற வைத்திருக்கிறது. 3 முறை அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார். நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் ஜொலிக்கிறார் சூர்யகுமார் யாதவ். எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலும் சூர்யா எதிரணி பவுலர்களை கடுமையாக அச்சுறுத்துவார் என்றே எதிர்பார்க்கலாம். இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதைத் தாங்கிப் பிடித்து உச்சிமுகர சூர்யகுமாருக்கு அத்தனை தகுதிகளும் உள்ளன.
இன்றைய போட்டி சுருக்கம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் 15, கோலி 26 ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல், சூர்யகுமார் இருவரும் எதிரணி பந்துவீச்சை பொளந்து கட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
51 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் விக்கெட் இழந்தாலும் இறுதிவரை களத்தில் நின்ற சூர்யகுமார் 25 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரிகள் விளாசி 61 ரன்கள் குவித்தார். பண்ட் 3, ஹர்திக் 18 ரன்களில் விடைபெற்றனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே 115 ரன்களில் ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்களையும் ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்களும், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தினேஷ் கார்த்திக் Vs ரிஷப் பண்ட் - யார் பெஸ்ட்?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்கம் முதலே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அணியில் ஜடேஜா இல்லாததால் ஃபினிசர் ரோலில் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்துவது இந்திய அணியின் திட்டம். இருப்பினும் இதுவரை நடந்த ஆட்டங்களில் அவர் பெரியளவில் ரன் குவிப்பில் பங்களிக்கவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அவர் சோபிக்காதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்த போட்டியில் அவர் 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பண்ட் இதுவரை ஒரு போட்டிக்கூட விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவறான ஷாட் ஆடி 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அரையிறுதி ஆட்டங்களில் விக்கெட் கீப்பராக ரோஹித் சர்மா யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர், போட்டியை முடித்துக் கொடுப்பவர் என்கிற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்தியா - இங்கிலாந்து கடந்து வந்த பாதை
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 தோல்வியும் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. அயர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது பல விமர்சனங்களுக்கு வித்திட்டது. அதேசமயம், இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாடுமா?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப்-ஏ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தும், 2வது இடத்தை இங்கிலாந்தும் பிடித்துள்ளது. பி பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. வரும் 9ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெல்லும் பட்சத்தில் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













