You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபாவளி ஷாப்பிங்: சோழன் புடவை, நைரா குர்தி - இந்த ஆண்டின் இளையோர் விருப்பம் என்ன?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் புதிய படங்கள் வெளியாவது போலவே, புதிய ரக ஆடைகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். அந்த வரிசையில் இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் படத்தின் தாக்கத்தால் உருவான சோழன் புடவை, வடஇந்திய நடிகை நைராவின் டிசைன் குர்தி என தொடங்கி செம்பு கரை வேட்டி வரை பல ரகங்கள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழக அரசின் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்டெக்ஸ் கடையில், சோழர் காலத்து சின்னங்களை கொண்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி பட்டுபுடவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.15,000 முதல் ரூ.1.50லட்சம் வரையிலான சோழர் சின்னங்களை கொண்ட புடவைதான் இந்த ஆண்டு அதிகளவில் மக்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு பொது மேலாளர் ரவி.
திருபுவனம் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மணி, லதா தம்பதியின் கைவண்ணத்தில் சுமார் மூன்று மாத உழைப்பில் இந்த சோழன் புடவை உருவாகியுள்ளது. "எங்கள் கூட்டு முயற்சியில் இந்த புடவையை நெய்துள்ளோம். பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே இந்த புடவை தயாராகிவிட்டது.
இந்த ஆண்டு இந்த புடவை நல்ல வரவேற்பை பெறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சோழர் காலத்து அரசு சின்னங்கள், தஞ்சை பெரிய கோயில் சிலைகள், ராஜராஜசோழன், தலையாட்டி பொம்மை, கோயில் தூண், வில்,வாள், புலி, விளக்கு உள்ளிட்ட 32 சின்னங்களை புடவையில் நெய்திருக்கிறோம்,''என்கின்றனர் மணி - லதா தம்பதி.
அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக பிரத்யேகமாகவும் புடவைகளை தயாரித்துள்ளது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். பலர் கோ-ஆப்டெக்ஸ் புடவைகளை ஆன்லைன் வாயிலாக தங்கள் சொந்தங்களுக்கு அனுப்புகிறார்கள்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பாளர் தீபிகா, ''டென்மார்க், ஸ்வீடன் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ஸ்காண்டிநேவியன் மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்டு, அங்கு பயன்படும் வண்ணங்கள் மற்றும் பூ வடிவங்களை கொண்டு இந்த ஆண்டு பட்டு புடவைகளை வடிவமைத்துள்ளளோம்," என்றார்.
"பட்டுப்புடவை என்பது இந்திய மக்களுக்கு நெருக்கமானது. ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் புடவை அணிய விரும்பும் ஸ்காண்டிநேவியன் மக்கள், அந்த நாட்டில் அதிகம் பயன்படுத்தும் பேஸ்ட்டல் வண்ணங்களில் புடவையை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு, வெளிர் நிறங்களில் பட்டுபுடவை அறிமுகம் செய்துள்ளோம்,''என்கிறார்.
நைரா குர்திகள்
சென்னை தி நகர் பகுதியில் எந்த கடையிலும் கடந்த ஒரு வாரமாக கூட்டம் குறைந்தபாடில்லை. குழந்தைகள், இளம்பெண்கள், ஆண்கள் என எல்லா தரப்பினருக்கும் புதிய டிசைன் ஆடைகள் குவிந்துள்ளன.
சென்னை சில்க்ஸ் கடையில் நைரா குர்திகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகிறார் ரவீந்திரன்.
''நைரா குர்தி என்பது வட இந்திய சீரியல் நடிகை நைரா என்பவர் அணியும் குர்தி வகை. அதை அணியும்போது, ஸ்லிட் பகுதியில் இருந்து கட் இருக்கும். இதுவரை வந்த குர்திகளில் இடுப்பு பகுதிக்கு கீழ்தான் ஸ்லிட் இருக்கும். நைரா டிசைனில், குர்திக்கு ஏற்றார் போல, பிரின்டெட் பேன்ட் அணிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு பல பெண்கள் இதை வாங்குகிறார்கள்.
பொதுவாக, மேல் சட்டையில் டிசைன் அதிகமிருக்கும், பேன்ட் டிசைன் இல்லாமல் எளிமையாக இருக்கும். பிரின்டெட் பேன்ட் அணிவதற்கு ஏற்ப நைரா குர்தி இருப்பதால் இந்த ஆண்டு ஹிட் இதுதான்,''என்கிறார் ரவீந்திரன்.
புடவையில் சாப்டி சில்க், ஜிம்மிஜூ மற்றும் சிம்மர் ஷிபான் வகை புடவைகள் அதிகளவில் விற்பனையாகுவதாக கூறுகிறார் அவர். பட்டுப்புடவையை பொறுத்தவரை சாப்டி சில்க் வகையில் தினமும் குறைந்தது 1,000 புடவைகளை தி நகர் கிளையில் மட்டும் விற்பனை ஆவதாக சொல்கிறார் ரவீந்திரன்.
"சாப்டி பட்டு புடவைகளில் ஒரு இன்ச் பார்டர் முதல் ஐந்து இன்ச் பார்டர் வரை உள்ள புடவைகள் உள்ளன. இந்த புடவை பட்டு, பருத்தி மற்றும் பாலிஸ்டர் என்ற கலவையாக தயாரிக்கப்பட்டுள்ளதால், எளிமையாக உடுத்திக்கொள்ளலாம். புடவை மடிப்பு கலையாமல் இருக்கும் என்பதால் அதிக கிராக்கி உள்ளது. ரூ.4,000 முதல் ரூ.15,000 வரை சாப்டி சில்க் புடவை கிடைக்கிறது.
ஜிம்மிஜூ என்ற புடவை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாடின் துணியில் தயாரிக்கப்பட்டது. பளபளப்பாக இருக்கும், அதில் நல்ல எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் இருக்கும்,''என்கிறார் ரவீந்திரன்.
டெரகோட்டா கவுன்கள்
சேலைகள், சுடிதார்கள் மற்றும் லெஹெங்கா வகைகளை இளம்பெண்கள் தேர்வு செய்கிறார்கள். அதேபோல அனார்கலி வகை ஆடைகளில் நீளமான கவுன் விதத்தில் பருத்தி மற்றும் ரேயான் துணிகளில் விற்கப்படுகின்றன. ஓவர்கோட் அனார்கலி கவுன்களும், எம்பிராய்டரி வேலைப்பாடு மற்றும் பட்டுநூல் வேலைபாடுகள் கொண்ட துப்பட்டா கொண்ட அனார்கலி கவுன்கள் ரூ.2,000 இருந்து ரூ.13,000வரை கிடைக்கின்றன. அதில் டெரகோட்டா என்று சொல்லப்படும் செம்மை நிறம் மற்றும் பீச் என்று சொல்லப்படும் ஆரஞ்சு மற்றும் வெளிர் மஞ்சள் கலந்த நிறம் கொண்ட கவுன்கள் அதிகமாக விற்பதாக சொல்கிறார் கோவையை சேர்ந்த ஸ்ரீ டெக்ஸ் நிறுவன உரிமையாளர் உமா கௌரி.
போத்தீஸ் கடையில் தனது 7 வயது மகள் நேஹாஸ்ரீக்கு சோலி சுரிதார், 12 வயது மகன் வருணுக்கு பிரிண்டெட் ஓவர்கோட் உடையை வாங்கிய ராம்கி-ஸ்னேஹா தம்பதியிடம் பேசினோம். ''நாங்கள் இரண்டு மணிநேரமாக பலவிதமான உடைகளை பார்த்தோம். இந்த சோலி சுரிதார் மிகவும் பிடித்திருக்கிறது. சுடிதார் போல துப்பட்டா உள்ளது. அதே சமயம், பட்டு பாவாடை போன்ற பெரிய நீளமான பாவடை வடிவில் சுடிதார் உள்ளது. இடுப்பில் அளவுக்கு ஏற்ப சுருக்கி கட்ட அழகிய ரோப் உள்ளது. மகனுக்கு, பிரிண்டெட் ஓவர்கோட் தேர்வு செய்தோம். சட்டை பிளைனாக, கோட் எடுப்பான கலரில் உள்ளது. வித்தியாசமான டிசைனாக உள்ளது. இருவருக்கும் ரூ.6,000 பட்ஜெட் போட்டோம். சரியாக அமைந்துவிட்டடத்து,''என்கிறார் ராம்கி -ஸ்னேஹா.
ஆண்களுக்கு, பாரம்பரியமான உடையாக அறியப்படும் வேட்டி சட்டையில், ராம்ராஜ் நிறுவனம் ஒரே பேக்கில் கோல்ட், சில்வர், காப்பர் பார்டர் என்ற மூன்று வகையான வேட்டிகள் சேர்த்து ரூ.1,275க்கு விற்பனை செய்கிறது. வெள்ளை அல்லது வண்ண சட்டைகளுக்கு ஏற்றவாறு ஜரிகை பார்டர் வேட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. உதயம் நிறுவனம் வெளியிட்டுள்ள தீபாவளி வேட்டி ரகத்தில், பருத்தி வேட்டியில், பேன்சி பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பேன்சி பார்டர் வேட்டி, அதற்கான செக் டிசைன் பருத்தி சட்டை என இரண்டும் காம்போ ஆபர் என ரூ. 1,285க்கு கிடைக்கிறது.
பூப்போட்ட 'பேன்ட்'கள் பெண்களுக்கு மட்டுமல்ல
வேட்டிகளுக்கு மாற்றாக, பட்டு குர்தா, பைஜாமா,ஷெர்வானி போன்ற உடைகளும் தமிழகத்தில் ஆண்கள்வாங்கும் ஆடைகளாக மாறியுள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் செய்த கல்லூரி மாணவன் செந்தில் குமார் ரூ.2000 ரூபாய்க்கு ட்ரெண்டியாக உடை வாங்கியதாக கூறுகிறார்.
''நான் இந்த ஆண்டு தீபாவளிக்கு பருத்தி துணியாலான பச்சை வண்ண குர்தா வாங்கியுள்ளேன். அதில் ஜரிகை காலர், கை பட்டை பகுதியில் ஜரிகை உள்ளது. ஏற்கெனவே என்னிடம் உள்ள ஜீன்ஸ் பேன்ட் மேட்ச் செய்து போட்டுக்கொள்வேன். குர்தா அணிவது நம் ஊர்களிலும் அதிகரித்துள்ளது. என் கல்லூரியில் என் நணபர்கள் சிலர், பூ எம்பிராய்டரி போட்ட குர்தா கூட அணிகிறார்கள். இதுபோன்ற டிசைன் பெண்கள் அணிவார்கள் என்ற எண்ணம் மாறிவிட்டது. எங்களுக்கும் பேஷன் காலெக்ஷனில் பலவிதமான உடைகள் வந்துவிட்டது. கடைகளுக்கு ஏறி இறங்காமல், அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினேன்,'' என்கிறார் செந்தில் குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்