குழந்தைத் திருமண பிரச்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒரே ஆண்டில் 4 குழந்தைத் திருமண வழக்குகளில் கைது
சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், தமது 13 வயது மகளுக்கு குழந்தைத் திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேச தீட்சிதர் என்பவரும் கைதாகியுள்ளார். குழந்தைத் திருமணம் செய்த குற்றத்துக்காக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஓராண்டில் கடலூர் மாவட்டத்தில் 23 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பிபிசியிடம் தெரிவித்திருந்தார். இந்த 23 வழக்குகளில் நான்கு குழந்தைத் திருமண வழக்குகள் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது தொடரப்பட்டுள்ளன.
''கடந்த 10 மாதத்தில் மாவட்டம் முழுவதும் 23 குழந்தை திருமணங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தொடர்பாகக் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா ஒரு வழக்கு, அக்டோபர் மாதம் இரண்டு வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகள் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்று பிபிசி தமிழிடம் பேசிய கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சித்ரா கூறினார்.
சனிக்கிழமையன்று நடந்த கைது இந்த ஆண்டின் நான்காவது சம்பவம். முதல் மூன்று சம்பவங்களின் விவரங்கள் கீழே.
சம்பவம் 1:
கடந்த ஜூன் 3ஆம் தேதி சிதம்பரம் கோவில் தீட்சிதரின் 17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் வந்தது.


இந்த தகவலின் அடிப்படையில் சமூகநலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவராமன் என்பவரின் மகன் கபிலன் என்பவருக்கும் கோவில் தீட்சிதர் பெண்ணான 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்தது தெரிந்தது.

இதுதொடர்பாக மாப்பிள்ளை, அவருடைய தந்தை, சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் 2:
சிதம்பரம் கோவில் மற்றொரு தீட்சிதரான சோமசேகர் தீட்சிதரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கு 14 வயதே ஆகியிருந்த நிலையில், இவரை கடந்த ஆண்டு 24 வயதான பசுபதி தீட்சிதர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தாக புகார் வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்று சிறுமியிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருமணம் நடந்ததாக சிறுமி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை பசுபதி தீட்சிதர், மாப்பிள்ளையின் தந்தை கணபதி உட்பட 3 பேரை கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் 3:
இதேபோன்று, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதருடைய 13 வயது மகளுக்கு, 19 வயது தீட்சிதருடன் திருமணம் செய்து வைத்துள்ளதாக மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் திருமணம் செய்துகொண்டு மாப்பிள்ளை பத்ரீசன், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் தீட்சிதர், தாய் சித்ரா, மாப்பிள்ளையின் சகோதரர் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர் மற்றும் சிறுமியின் தாயார் தங்கம்மாள் உட்பட 6 பேர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் மாப்பிள்ளையின் சகோதரர் சூர்யா மற்றும் சிறுமியின் தாயார் இருவரையும் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த மாப்பிள்ளை, அவரது தந்தை மற்றும் தாயார் உட்பட மூன்று பேரை கடந்த 8ஆம் தேதி கைது செய்தனர்.
இறுதியாக கடந்த 2021 ஜனவரி 25ஆம் தேதியன்று சிதம்பரம் கோயில் செயலாளரின் 13 வயது சிறுமிக்கும் அதே கோவில் தீட்சிதருடைய 15வயது சிறுவனுக்கும் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமி மற்றும் சிறுவனின் தந்தை இருவர் மீதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இந்தியாவில் குழந்தை திருமண பிரச்னை
ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட குழந்தைத் திருமண ஒழிப்பில் உலக நாடுகளின் நிலை குறித்த அறிக்கை, "இந்தியா குழந்தைத் திருமணம் மூலம் திருமணமான 22 கோடியே 30 லட்சம் பேரைக் கொண்ட நாடு. உலகளவில் அதிக குழந்தை மணப்பெண்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாது இடத்தில் உள்ளது," என்று கூறுகிறது.

பட மூலாதாரம், Arijit Mondal / getty images
18 வயதுக்குக் கீழே உள்ளவருக்கு திருமணம் செய்து வைப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் இப்போது 15-19 வயதுக்குட்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 16 சதவீதம் பேருக்கு திருமணமாகியுள்ளது. இதுதொடர்பாகக் கிடைத்த ஆதாரங்கள், சிறுமியின் ஒப்புதல் இன்றியே குடும்பத்தினரால் இந்தத் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதாகக் கூறுகின்றன என்று ஐ.நா குழந்தைகள் நல அமைப்பு கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 47 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உலகளவில் கடந்த பத்தாண்டுகளில் சிறு வயதில் திருமண உறவுக்குள் தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
கோவிட் பேரிடர் காரணமாக, உலகளவில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள், வளரிளம் பருவ சிறுமிகள் பள்ளிப் படிப்பை இழந்துள்ளனர். அதில் 11 கோடி பேர் குழந்தைத் திருமண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்










