'இந்திய ரூபாய் சரியவில்லை; டாலர்தான் உயர்கிறது' - நிர்மலா சீதாராமன் சொன்னது சரியா?

பட மூலாதாரம், @nsitharamanoffc/twitter
- எழுதியவர், எம். ஆர். ஷோபனா
- பதவி, பிபிசி தமிழ்
"இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது," என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அலுவல்முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ''அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைகிறது. இப்படி வலுவடையும் அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் நாணயங்களும் பலவீனமடைக்கின்றன. நான் இதிலுள்ள நுட்பங்கள் குறித்து பேசவில்லை. ஆனால், வலுவடையும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தாக்குப்பிடித்து நின்றுள்ளது. மற்ற வளர்ந்து வரும் சந்தைகளின் நாணயங்களை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
அக்டோபர் 16ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 82.42 ஆகவுள்ளது. இந்தியா ரூபாய் மதிப்பு சரியவில்லை என நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ரிசர்வ் வங்கியின் முயற்சி என்ன ஆனது?
இதுகுறித்து பிபிசி தமிழின் கேள்விக்கு பதில் அளித்த பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம், "இதனை நகைச்சுவையாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு சரிந்ததில்லை. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பினை ஒரளவு சீராக கொண்டு வர இந்திய ரிசர்வ் வங்கி முயற்சி செய்தது. ஆனால், அப்போதும் இந்த வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. மற்ற நாடுகளின் நாணயங்களும் வீழ்ந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.
அமெரிக்காவில் 'குவாண்டிடேட்டிவ் ஈசிங்' செய்தபோது இந்த மதிப்பு குறைவில்லை. இப்போது அங்கு குவாண்டிடேட்டிவ் டைட்டனிங் (quantitative tightening) செய்கிறார்கள். அதனால், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏற்படுகிறது என்கிறார்கள். ஆனால், இந்த சதவீதம்தான் அதிர்ச்சியளிக்கிறது.
அடுத்து, ரூபாயின் மதிப்பை பொருத்தவரையில், பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் சீரான நிலையில் இருக்க வேண்டும். இதுதான் ரிசர்வ வங்கியின் செயல்திட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான், நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகள் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லாமல், நம்பகமாக தங்களை தொழிலை மேற்கொள்ளமுடியும்," என்கிறார்.

குவாண்டிடேட்டிவ் ஈசிங் - டைட்டனிங்: பொருள் என்ன?
குவாண்டிடேட்டிவ் ஈசிங் மற்றும் டைட்டனிங் என்பவை எதிரெதிரான பணவியல் நடவடிக்கைகள். ஈசிங் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நாட்டின் மத்திய வங்கி அரசுப் பத்திரங்கள், நிதிச் சொத்துகளை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக பணத்தை அளிக்கும். இந்தப் பணம் பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப்படும். இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டவேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
மாறாக, நாட்டில் பணவீக்கம் நிலவும்போது அரசு பத்திரங்கள், நிதி சொத்துகளைத் தந்துவிட்டு, மத்திய வங்கியானது பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும். குவாண்டிடேட்டிவ் டைட்டனிங் என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் நோக்கம், புழங்கும் பணத்தின் அளவைக் குறைத்து, அதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே ஆகும்.

ஆனால், நிர்மலா சீதாராமன் பேசியது நூறு சதவீதம் சரி என்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி. "அவர் கூறியது எப்படி சரி என்றால், கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கக்கூடிய பல சிக்கல்கள் காரணமாக, மற்ற நாடுகளில் பண மதிப்பு குறைகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பண மதிப்பு கூடுகிறது. இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் ," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"மேலும், யூரோ, பவுண்ட் என பிற நாணயங்களுடன் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது," என்கிறார் நாராயண திருப்பதி.
பணவீக்கம் அதிகரிக்கும்
ஆனால் இதன் காரணமாக, நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம் . "நம் நாட்டுக்குத் தேவையான 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ரஷ்யா ஓரளவு நிலையான விலையில் கச்சா எண்ணெயை இந்தியாவுக்குத் தருகிறது. மேலும், கச்சா எண்ணெயின் விலை உயரவில்லை. இதனால் இந்த துறையில் பெரிய பாதிப்பு இல்லை.


ஆனால், மற்ற அனைத்து துறைகளும் பணவீக்கத்தை எதிர்கொள்கின்றன. மக்கள் ஏன் தங்கம் வாங்குகிறார்கள்? பணவீக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி இது. அதனால், தங்கம் அதிகம் இறக்குமதி ஆகிறது. அதற்கு அடுத்து, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் பொருட்களில் மூலப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இந்த துறைகளில் பாதிப்புகள் ஏற்படும்," என்கிறார் அவர்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி கூறுகையில், "பணவீக்கம் உலகம் முழுவதும் அதிகமாகத்தான் இருக்கிறது. ஏதோ இந்தியாவில் மட்டும்தான் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது என்பது போல நாம் பேசுவது தவறு. இதுநாள் வரை இந்தியா மற்ற நாடுகளின் சந்தையை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியா தன்னுடைய உற்பத்தியை பெருக்கிக் கொண்டுள்ளது. அதனால்தான், தொலைநோக்கு பார்வையுடன், 25 ஆண்டுகளுக்கான பொருளாதார திட்டங்களை இந்தியா உருவாக்கியுள்ளது. அதனால், வரும் ஆண்டுகளில், விவசாயம் உட்பட பல துறைகளில் இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பட மூலாதாரம், @narayanantbjp/twitter
ஏனென்றால், முன்பு நாமும் சீனாவும் ஒரே பொருளாதார நிலையில் இருந்தோம். ஆனால், சீனா கடந்த 25 ஆண்டுகளில் தனது பொருளாதாரத்தை பன் மடங்கு உயர்த்தியது. இப்போது இந்தியா அதை நெருங்கிக் கொண்டிருக்கிறது," என்கிறார் அவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 62 ரூபாயாக இருந்தது. அப்போது, அதனை நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாயின் வீழ்ச்சியாக விமர்சித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியபாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா,"பத்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மட்டும் வீழ்ச்சியடைந்தது. அது மற்ற நாடுகளை பாதிக்கவில்லை. ஆனால், தற்போது நிலைமை வேறு. சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன," என்றார்.

பட மூலாதாரம், @SuryahSG/twitter
நாடுகளிடையே ஒப்பிடுகையில், இந்தியா சிறப்பாக செயல்படுவதாக நாராயணன் திருப்பதி கூறுகிறார். "கடந்த ஆண்டு இலங்கையிலும், நமது நாட்டிலும் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் இருந்தது. ஆனால், இப்போது அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், இங்கு அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன. சர்வதேச சந்தையின் தாக்கத்தினால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், இதனை இந்தியா சிறப்பாகவே கையாள்கிறது," என்கிறார்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (current account deficit) அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம். "இதுவரை நம்முடைய நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது சாதகமாகவே இருந்தது. இதில் இரண்டு வகை உண்டு. உள்முகப் பற்றாக்குறை (internal deficit), வெளிமுக பற்றாக்குறை (external deficit). முன்பு உள்முகப் பற்றாக்குறை மட்டும் அதிகமாக இருந்தது. இப்போது இரண்டும் அதிகரித்துள்ளன. இது பொருளாதாரத்தை எல்லா வகையிலும் உடனடியாக பாதிக்கும்," என்கிறார் ஜோதி சிவஞானம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









