You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை" - ஆர்டிஐ பதில்
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, குத்தகை நிலம் மறுமதிப்பீடுக்கான ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் அசையா சொத்துகள், கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மூலம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை தணிக்கையின்போது சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
இதற்கு முன்பு, 1997ஆம் ஆண்டு, மீனாட்சி அம்மன் கோவில் நகைகள் அப்போது பணியில் இருந்த துணை ஆணையர் மற்றும் நகை சரிபார்த்தல் குழுவினர் மூலமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், நகை மறுமதிப்பீடு குழுவில் இருந்த தொழில்நுட்ப வல்லுநர் (Gem specialist) குளறுபடி செய்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் அப்போதைய நகை மறுமதிப்பீடு தொடர்பான அறிக்கை தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றிருக்கிறார் காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ். அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. அதன் விவரம்:
"திருக்கோவிலின் பசலி 1420 முதல் பசலி 1427 வரையிலான தணிக்கை அறிக்கையின் நகலை பெற்றுள்ளேன். அதில் 1997இல் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகள் மறுமதிப்பீட்டில் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்து 550 மதிப்பிலான நகைகள் குறைவாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த இழப்பீட்டை குறிப்பிட்டு பொறுப்பு நிர்ணயம் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மேற்கண்ட தொகையை வசூல் செய்ய அப்போதைய உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வைர கிரீடம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது வரை வைர கிரீடம் குறித்த ஆவணங்களும் இழப்பீட்டினை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூல் செய்ததற்கு உண்டான ஆவணங்களும் தணிக்கைக்கு தாக்கல் செய்யப்படாமல் உள்ளன," என்கிறார் தினேஷ்.
குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம் எங்கே?
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்து இனங்களின் வாடகைதாரர்கள் மற்றும் சில்லரை குத்தகைதாரர்கள் என அனைவரிடமிருந்தும் ஒப்பந்த பத்திரம் தற்போது வரை எழுதிப் பெறாதது, இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு முரணானதாகும் என்கிறார் தினேஷ்.
குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரங்கள் உடனடியாக எழுதப்பட்டு அதை முறையாக பதிவு செய்து தணிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தற்போது வரை ஒப்பந்த பத்திரம் எழுதப்படாமல் உள்ளது ஆர்டிஐ பதிலில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
தணிக்கை ஏன்?
இந்திய வருமான வரி சட்டத்தின்படி (Income Tax Act) ரூ. 2 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ள எல்லா அறநிலையங்களும் ஒரு பட்டய கணக்காளர் (Chartered Accountant) மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டும். அதன்படி தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமாக நிலம், அசையும், அசையா சொத்துக்கள், விலை உயர்ந்த நகைகள் உள்ளிட்டவை மதிப்பீடு விவரம், அவற்றின் தற்போதைய நிலை, அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை மற்றும் நிலுவை குறித்து தெரிந்து கொள்வதற்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் தொகை, கோவில் நிர்வாகத்தின் வரவு-செலவுகளை உள் தணிக்கை மூலம் தணிக்கை செய்து அந்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்த தணிக்கை மூலம் கோவில்களின் நிதி நிலைமையை எளிதாக கணக்கிட முடியும். அதே சமயத்தில் நிதியை கையாள்வதில் ஏற்படும் தவறுகளையும் அறிந்து கொள்ள முடியும். இந்து சமய திருக்கோவிலின் கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைத் தணிக்கை அலுவலருக்கு உதவியாக இரண்டு துணை தலைமை தணிக்கை அலுவலர்கள், 18 மண்டல தணிக்கை அலுவலர்கள், 28 உதவித் தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
இதேபோல,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து அவற்றின் விவரம், தணிக்கை ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நகை மதிப்பீட்டாளர்கள் நகைகளை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து இருப்பு நகைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட நகைகளை, முறையாக ஆய்வு செய்து நகை பதிவாளர் மற்றும் கோவில் இணை ஆணையர் இணைந்து கையெழுத்திட்டு இருப்பு நகைகளை, தணிக்கை ஆவணங்களில் பதிவேற்றி முறையாக பராமரிக்க வேண்டும். இவற்றை ஒவ்வோர் ஆண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் என 2019ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.
கோவில் நிலங்களுக்கு ஆதார பதிவேடு இல்லை
மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் பொதுவான கோவில் நிலங்கள், அறிக்கையில் மட்டுமே உள்ளன. இதனால், இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்கள் குறித்த முழுமையான விவரங்கள், தணிக்கைக்கு தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இது தொடர்பான விவரங்களை அறிய முடியவில்லை என்றும் ஆர்டிஐ பதிலில் கூறப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த பொருட்களின் நிலை
மீனாட்சியம்மன் கோவிலுக்கு மட்டுமில்லாமல், அதன் உப கோயில்களிலும் நாள்தோறும் சுவாமிகளுக்கு சாத்தப்படக்கூடிய நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கையாளுகின்ற பொறுப்பு வாய்ந்த நபர்களிடமிருந்து, உரிய பதிவேட்டில் கையொப்பம் பெறப்படுகின்றதா என்பதையும், மீண்டும் அவை பாதுகாப்பாக பெறப்படுகின்றனவா என்பதையும் அறியும் கோப்புப் பதிவேடுகள் தணிக்கைக்கு தாக்கல் செய்யப்படவில்லை.
ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாமல் உள்ளதால், சாத்துபடியாக வழங்கப்படும் நகை மற்றும் விலை உயர்ந்த நகைகள் திரும்பப் பெறப்பட்டு, உரிய அலுவலர்களால் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டதா என்பதை தணிக்கையில் அறிய முடியவில்லை என்கிறது ஆர்டிஐ பதில்.
மேலும், கருவறையில் ஸ்தானிக் பட்டர்கள் கையாளும் நகைகளும், விலை உயர்ந்த ஆபரணங்களான வைரம் மற்றும் வைடூரியங்களுக்கும் பொறுப்புத் தொகை பெறப்பட்டது என்பதை அறிய தணிக்கையில் முடியவில்லை என ஆர்டிஐ பதிலில் தெரிய வந்துள்ளது.
"கோவில் சொத்து பதிவேடு தயார் செய்யப்பட்டு, சுமார் 25 ஆண்டுகளாகியும் புதிய சொத்து பதிவேடு தயார் செய்யப்படாமல் உள்ளன. இதனால், வருடாந்திர சேர்த்தல் மற்றும் நீக்கல் பட்டியல் தயாரிக்க இயலாமல் போய் விடுகிறது. இதேபோல், திட்ட பதிவேடு தயார் செய்யப்பட்டு 23 வருடங்களுக்கு மேலாகியும், திட்ட பதிவேடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப புதிய திட்டம் தயார் செய்ய முடியாமல் முடங்கி போய் உள்ளது," என்கிறார் தினேஷ்.
குறைபாடு என்ன?
இந்த நிலையில், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி ஆர் ரமேஷ் பிபிசி தமிழிடம் இந்த விவகாரம் குறித்து பேசினார்.
"செயல் அலுவலர் கோயில் சொத்துக்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அதில் உண்மையான குத்தகைதாரர் இருக்கின்றாரா, கோவில் சொத்து எந்த நோக்கத்திற்காக குத்தகைக்கோ வாடகைக்கோ கொடுக்கப்பட்டுள்ளதோ அதற்காக முறையாக பயன்படுத்தப்படுகின்றதா இல்லையா அல்லது கோவில் சொத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் வந்துள்ளனவா என்பதைப் பார்த்து அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கைகள் குறித்து தணிக்கையில் ஒன்றும் சொல்லப்படவில்லை. தணிக்கையாளர்கள் சொத்துக்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் தெரியவில்லை. இது பெரும் குறைபாடு," என்கிறார்.
இதேவேளை, கோவில் நகை விஷயங்களில் கையாடல் அல்லது முறைகேடு நடைபெற்றது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது யாரா இருப்பினும் நிச்சயம் கடுமையான தண்டனை சட்ட ரீதியாக வழங்கப்படும் என்கிறார் மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம். மேலும், குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதி பெறப்படுவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அப்போதைய காலகட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, இதுபோன்ற குளறுபடி நடைபெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், தற்போதைய நடைமுறையில் இது போன்ற குறைபாடுகளோ குளறுபடிகளோ ஏதுமில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கு முறையான ஆவணங்கள் உள்ளன என்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவை பிபிசி தமிழிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தற்போது என்னிடம் இல்லை.அதனால் இது குறித்துப் பேச விரும்பவில்லை," என்று மட்டும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்