சென்னை மழை: இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை?

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜல், தானே, நீலம், வர்தா, ஒக்கி, கஜா ஆகிய புயல்கள் தமிழக மக்களால் மறக்க முடியாதவை. அதில், 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரை கடந்து சென்ற வர்தா புயல், சென்னையைத் தாக்கிய மிகப்பெரிய புயல்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

192 கிமீ வேகத்தில் வீசிய சுழல் காற்று சென்னையில் நீண்டகாலமாக இருந்த மரங்களைச் சாய்த்தன. பெருநகரத்தின் பல பகுதிகளில், மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்து, மின்சார விநியோகம் தடைபட்டது.

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத பேரிடராக இருந்தது. அந்த பேரிடருக்கு பிறகு, சென்னையில் வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் நகர்ப்புற ஏழை மக்களிடையே ஒவ்வோர் ஆண்டும் புயல், கடும் மழைப்பொழிவு என்பவை ஏற்பட்டாலே ஓர் அச்சம் ஆழ்மனதில் எழுந்து விடுகிறது.

குறுகிய காலகட்டத்தில் அதிதீவிர மழைப்பொழிவை எதிர்கொள்வதன் விளைவாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு, நீர் மூலம் பரவும் நோய்கள் போன்றவற்றின் அபாயங்களும் பல்வேறு சிரமங்களுக்கு மக்களை ஆளாக்குகின்றன. தீவிர நகரமயமாக்கல் இதற்கொரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் அது மட்டுமே காரணமில்லை. நகரத் திட்டமிடுதல், இயற்கையோடு இயைந்து போகாத பலவீனமான கட்டமைப்புகள் போன்றவையும் இவற்றுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

இந்திய பெருநகரங்களின் சவால்கள்

இந்தியாவில், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நீர்சார் பேரிடர்கள் அதிகம் நிகழக்கூடிய மாவட்டங்களில் வசிப்பதாக ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சில்(Council on Energy, Environment and Water) என்ற அமைப்பு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. அதிலும் இந்திய தென் மாநிலங்கள் தான் உச்சகட்ட காலநிலை நிகழ்வுகளால் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

அத்துடன், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் வெள்ளப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் அதேவேளையில், மத்திய இந்தியாவின் பகுதிகள் உச்சகட்ட வறட்சியை எதிர்கொள்கின்றன. அசாம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பிகார் ஆகிய மாநிலங்களிலும், வெள்ளம், வறட்சி, புயல் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயங்கள் மிக அதிகமாக உள்ளன.

வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்றவை இயற்கையான நிகழ்வுகள் தான். ஆனால், அந்த வெள்ளம் மனித தலையீடுகளால் நிலத்தின் சூழலியல் சிதைக்கப்படும்போது தான் தொடர்ச்சியான பேரிடர்களாக மாறுகின்றன. அதன் விளைவாக இந்தியாவில் 20 இந்தியர்களில் 5 பேர் வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றில் ஏதாவதொரு பேரிடரால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

தமிழக தலைநகரான சென்னையில் 2015இல் ஏற்பட்ட வெள்ளம், 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சி ஆகியவற்றிலிருந்து, சென்னை பெருநகரம் காலநிலை நெருக்கடிக்கான உலகளாவிய விவாதங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்த ஆண்டின் மழைக்காலத்தில் பெங்களூரில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புவி வெப்பமடைவதாலும் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாவதாலும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளுக்கு வழிவகுத்து, பெங்களூரு போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு என்பது இனி ஒவ்வோர் ஆண்டும் நடக்கக்கூடிய பொதுவான நிகழ்வாக மாறலாம்.

முன்னரே கூறியதைப் போல், வெள்ளம் ஏற்படப் பல காரணிகள் இருப்பினும், காலநிலைக்கு ஏற்ற உள்கட்டமைப்பு இல்லாதது, வெள்ளத்தின் தீவிரத்தை அதிகரிப்பதை சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகியவற்றில் காண முடியும்.

செப்டம்பர் மாதத்தில் உலக வானிலை அமைப்பு வெளியிட்ட யுனைடெட் இன் சயின்ஸ் அறிக்கை, "நகரங்களில் ஏற்படும் காலநிலை நெருக்கடி அதிக மழைப்பொழிவு, துரிதப்படுத்தப்பட்ட கடல் மட்ட உயர்வு, வெள்ளம், கோடையில் சராசரியை விட அதிக வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப அலை நிகழ்வுகள், கடுமையான வறட்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்," என்று எச்சரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், குறிப்பாக அசாமில் இதுபோன்ற நகர்ப்புற வெள்ளங்கள் பெரிய சேதங்களை ஏற்படுத்தின. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களையும் இதற்கு உகந்த சான்றாகக் குறிப்பிடலாம்.

2022ஆம் ஆண்டின் உச்சகட்ட காலநிலை நிகழ்வுகள்

அக்டோபர் 10, 2022 வரையிலான பேரிடர் மேலாண்மை பிரிவின் தரவுகள்படி, இப்போது உத்தர பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், 16 மாவட்டங்களில் 777 கிராமங்கள் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன, 12,325 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகள் மற்றும் மின்னல் போன்ற பிற தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியா முழுவதும் இழப்புகளின் தடங்களை விட்டுச் செல்கிறது, 114 நாட்களுக்கு நீடித்தது தென்மேற்குப் பருவமழை.

வடகிழக்கு இந்தியாவில், அசாம், மேகாலயா மாநிலங்களில் ஜூன் மாதம் சீசன் தொடங்கியபோதே வெள்ளப் பேரிடர்களும் தொடங்கின. அதற்கு அடுத்த இரண்டு மாதங்களில் தலைகீழாக, அந்தப் பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தன.

ஜூலை மாதத்தில், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் வெள்ளத்தை எதிர்கொண்டன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை தரவுகள், இந்த ஆண்டில் 396 மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றன.

அக்டோபர் 10 வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகளில் 719 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மின்னல் தாக்கியதில் 555 பேரும் நிலச்சரிவு காரணமாக 183 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 162 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சீசனில் மட்டும் 408 மாவட்டங்கள், திடீர் வெள்ளம், மின்னல் தாக்குதல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பருவமழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் வேளாண் நிலங்கள் சேதமடைந்துள்ளன.

வடகிழக்குப் பருவமழைக்கு சென்னை தயாராக உள்ளதா?

கடந்த மே மாதம், தமிழ்நாடு நீர்வளத் துறைக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சுமார் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நகரமெங்கும் மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

"திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகள் சென்னையில் இயற்கையாக மழைநீரை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்ட மண் நிறைந்த பகுதியாக இருந்தன. ஆனால், அவை இப்போது கட்டடங்களாகவும் சாலைகளாகவும் மாறி விட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அடிப்படையில் நிலத்தடி நீர் மீள்நிரப்புப் பகுதி இல்லை. ஆனால், அந்தப் பகுதி களிமண் நிறைந்தது. ஆகவே, எவ்வளவு மழைநீர் பெய்தாலும் அதைப் பஞ்சு போல் ஈர்த்துக் கொள்ளக் கூடிய தன்மை உண்டு. ஆனால், சுமார் 70 சதவிதம் பகுதி அங்கு முன்பு இருந்ததைப் போல் இல்லை.

கடற்கரையைப் பொறுத்தவரை, மெரினா, பட்டினம்பாக்கம் போன்ற பகுதிகளில் அதிகமான மண் பரப்பு இருப்பதால் அந்த நிலம் மழைநீரை நன்கு உள்வாங்கிக் கொள்கின்றன. ஆனால், பெசன்ட் நகர், திருவான்மியூர் என்று வந்துவிட்டால், அங்கெல்லாம் கடற்கரைக்கு மிக நெருக்கமாக கட்டடங்கள் வந்துவிட்டன. சென்னையின் நிலவியல் அமைப்பை இப்போது கருத்தில் கொண்டால், பெரிய பெரிய நிலத்தடி நீர் மீள்நிரப்பு கட்டமைப்புகளை அமைப்பது சிறிதளவு நன்மையையே வழங்கும். அதைவிட, அனைத்து கட்டடங்களிலுமே மழைநீரைப் பிடித்து நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்யும் கட்டமைப்புகளை உருவாக்கினால் அது நன்றாகப் பயனளிக்கும்.

எங்கு பார்த்தாலும் சாலைகள், கற்களால் அமைக்கப்பட்ட தரைகள், கட்டடங்கள் என்று மாறிவிட்டதால் நீர் மண்ணுக்குள் செல்வதற்கான வசதியே எங்குமில்லை. இப்போதுள்ள சூழலில் அதைப் பெரியளவில் உருவாக்கி பராமரிப்பதைவிட, அனைத்து வீடுகளிலும் கட்டடங்களிலும் சின்னச் சின்ன கட்டமைப்புகளை உருவாக்கி, நிலத்தடி நீர் மீள்நிரப்பு செய்தால் அதன்மூலம் நிலத்தின் மேற்பரப்பில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க முடியும்," என்று கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ.

பேராசிரியர் இளங்கோ கூறுவதைப் போல், அனைத்து திட்டங்களையும் பிரமாண்டமாகவே மேற்கொள்வது அதிக ஆற்றல் மற்றும் உழைப்பு விரயத்திற்குக் கூட வழிவகுக்கலாம். குழாய் வழித்தட இணைப்பு, சிறுபாலங்கள் என்று நகரம் முழுவதையும் ஒரே இணைப்புக்குள் கொண்டு வர முயல்வதைவிட, இயற்கைக்கு உகந்த வகையில், சிறு சிறு அளவில் அந்தந்தப் பகுதிகளிலேயே மேலாண்மை செய்யக்கூடிய வகையிலான மையப்படுத்தப்படாத கட்டமைப்புகளை உருவாக்குவது, நிர்வகிக்க எளிதாகவும் பெரும் கட்டமைப்புகளைவிட அதிகம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

130 கிமீ மழைநீர் வடிகால் அமைப்பு கட்டி முடிக்கப்பட்டு, 1,400 கிமீட்டருக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த முறை வெள்ளச் சேதம் கட்டுப்படுத்தப்படும் என்று முதலமைச்சரும் அதிகாரிகளும் நம்புகின்றனர். ஆனால், காலநிலை நெருக்கடியால் ஒரே நாளில் ஒரு வாரம், ஒரு மாதம் பெய்யக்கூடிய அளவிலான மழைப்பொழிவு கூட கொட்டித் தீர்க்கும் சூழலில், வடிகால் அமைப்பை உருவாக்குவது மற்றும் தூர்வாரும் நடவடிக்கைகள் மட்டுமே போதாது.

சமூக-சூழலியல் ரீதியாக இயற்கையோடு இயைந்த நடவடிக்கைகளும் நீண்டகால அடிப்படையிலான காலநிலை செயல்பாட்டிற்கு அவசியம். ஆற்றல், சுற்றுச்சூழல், நீருக்கான மன்றம் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய உணர்திறன் மிக்க பகுதிகளை மாவட்டவாரியாகப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.

அசாம் மாநிலத்திலுள்ள தேமாஜி, தெலங்கானாவிலுள்ள கம்மம், ஒடிசாவிலுள்ள கஜபட்டி, ஆந்திராவிலுள்ள விஜயநகரம், மகாராஷ்டிராவின் சங்லி, அசாமிலுள்ள நாகாவுன் ஆகிய மாவட்டங்கள் முதல் இடத்தைப் பகிர்ந்துள்ளன. சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. தரநிலையின் மூன்றாவது இடத்தை, பிகார் மாநிலத்தின் மாதேபுரா மற்றும் மணிபூர் மாநிலத்திலுள்ள கிழக்கு இம்பால் மாவட்டங்கள் பகிர்ந்துள்ளன.

நகர்ப்புற காடுகள், பசுமை நிறைந்த திறந்தவெளிகள், பசுமை வழித்தடங்கள் போன்றவை அவசியம். பெருநகரங்களின் கரிம உமிழ்வு அளவைக் கட்டுப்படுத்துவதில் நகர்ப்புறக் காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நதிகள், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் நடவடிக்கைகளோடு சேர்த்து, வெள்ள வடிநிலங்களை வரையறுத்துப் பாதுகாத்தல், அலையாத்திக் காடுகள், உப்பளங்களை மேம்படுத்துதல் போன்றவற்றை, நகர நிலவியல், பரப்பளவு, சமூக-பொருளாதார நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும்.

மண்ணுக்கேற்ற தாவரங்களின் முக்கியத்துவம்

நகர்ப்புற காடுகள், பசுமை போர்வைகள் என்று வரும்போது, என்ன வகையான மரங்களை நடுகிறோம் என்பதை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

வர்தா புயலின்போது சென்னையில் விழுந்துகிடந்த பெரும்பான்மையான மரங்கள் அயல் தாவரங்களே. பல இடங்களில் நாம் பார்க்கும் குல்முஹர் மரத்தை அதற்கு சான்றாகச் சொல்லலாம். அடர்ந்த ஆரஞ்சு நிறத்தில் இலைகளைவிட அதிக பூக்களோடு இருக்கும். இது சூறாவளிக் காற்றுக்குத் தாக்கு பிடிக்காது, விழுந்துவிடும்.

தமிழகத்தின் கிழக்குக் கடலோரங்களில் மண்ணுக்கே உரித்தான குறிப்பிட்ட உலர்ந்த பசுமை மாறாக் காடுகள் உள்ளன. அந்தத் தாவரங்கள் மண்ணுக்குப் பழக்கப்பட்டவை, எவ்வளவு புயல் அடித்தாலும் கிளைகள் முறிந்து விழுமேயொழிய, மொத்தமாகச் சாய்வது அரிது. அவை கோடை காலத்திலும் நிழலையும் குளிர்ச்சியையும் தரும். அதற்கு சிறந்த சான்றாக சென்னை நிலப்பரப்புக்கு உகந்த புன்னை மரங்களைச் சொல்லலாம். அவை ஆழமாக வேரூன்றி மண்ணை இறுகப் பிடித்து வைக்கின்றன. இந்தத் திறன் அயல் தாவரங்களுக்குக் கிடையாது, மொத்தமாகச் சாய்ந்துவிடும்.

"நாட்டு மரங்கள் என்பவை, அந்த மண்ணிலேயே பரிணமித்து வளர்ந்தவை. அவைதான் இந்தச் சூழலியலுக்கு ஒரு புயலையோ, சூறாவளிக் காற்றையோ, மண் அரிப்பையோ தாங்கி நிறக்கூடிய மரங்கள். அதை வர்தா, கஜா போன்ற பல புயல்களில் நாம் பார்த்தோம். கஜா புயலின்போது தென்னை மரங்கள் அத்தனையும் சாய்ந்தன. ஆனால், அவ்வளவுக்கும் நடுவே விழாமல் நின்றவை பனை மரங்கள்," என்று தாவரவியல் பேராசிரியரும் ஆய்வாளருமான முனைவர். நரசிம்மன் பிபிசி தமிழுக்காகப் பேசியபோது கூறினார்.

இங்கிருக்கும் மரங்களின் இலைகள் கீழே விழும்போது, "மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அந்த இலைகளுக்குப் பழக்கப்பட்டவை. வேறு புதிய வகை மரத்தின் இலைகளுக்கு அவை பழக்கப்பட்டிருக்காது. அது மண் வளத்தைப் பாதிக்கும். வெறும் மரத்தை மட்டும் பார்க்காமல், மரத்தால் மண்ணுக்கு என்ன பயன் எனப் பார்க்கவேண்டும்." யூகலிப்டஸ் போன்ற மரங்களை வளர்ப்பதால், அதைச் சுற்றி வேறு எந்த மரமும் வளராது. "அதனால் நிலச்சரிவு போன்ற பேரிடர்களின் போது மண்ணைப் பிடித்து வைக்க நாட்டு மர வேர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதோடு நாட்டு மரங்கள் மண்ணுக்குரியவை என்பதால் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை," என்று கூறுகிறார்.

"அயவாகை போன்ற அயல் மரங்களை நடும்போது, அதில் எந்தவித உயிரினங்களுக்கும் பயன் இருக்காது. வெறும் அழகியல் மட்டுமே இருப்பதோடு, வளரும் பகுதியின் பன்மைத்துவத்திற்கு இடையூறும் செய்கிறது," என்று கூறும் நரசிம்மன், நாட்டு மரங்களால் மண் வளம், உயிரினப் பன்மை, வேர்களின் ஆழம் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதால், காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பேரிடர்களான வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவை பெரும் பயனளிக்கின்றன," என்கிறார்.

"அண்மைக் காலங்களில் நாட்டு மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு அதிகரித்துள்ளது, அரசும் அவற்றை நடுகிறார்கள். ஆனால், நாம் நடவேண்டிய அளவுக்குப் போதுமான நாட்டு மர விதைகள் கிடைப்பதில்லை, குறைவாகவே கிடைக்கின்றன. வனத்துறையிடமே கூட நிறைய நாட்டு மர விதைகளின் கையிருப்பு இல்லை.

அதைக் கவனித்து, நிறைய நாட்டு மர விதைகள், அதிலும் நிறைய மர வகைகளோடு இருக்க வேண்டும். அனைத்து நிலப்பகுதிகளிலும் ஒரே வகையை நட்டுவிட முடியாது. நாட்டு மரங்களாகவே இருந்தாலும் அதில் பன்மைத்துவம் வேண்டும்," என்று கூறுகிறார்.

கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் நகர்ப்புறங்களில் வெளியாகும் கரிமத்தை உறிஞ்சுவதில் ஆழமான ஆய்வுகள் இல்லையென்றாலும், நாட்டு மரங்களுக்கு அயல் மரங்களை விட அதிகளவிலான கரிமத்தைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை இருப்பதாகவும் அதற்கான அடிப்படை அவற்றின் தகவமைப்பில் இருப்பதாகவும் உணர்த்தும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன என்று கூறினார் பேராசிரியர் நரசிம்மன்.

சூழலியல் சேவைகளின் முழு சுழற்சியை, நிலவியல் அமைப்புக்கு ஏற்ப மேற்கொள்ளும் தாவரங்கள், நில அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தி, இயற்கையோடு இயைந்த வளம்குன்றா வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதே காலநிலை நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதில் நீண்டகால பயன்களைக் கொடுக்கும் என்று சமூக-சூழலியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: