காந்தி ஜெயந்தி ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். சீருடையோடு கலந்துகொண்ட புதுவை அமைச்சர்கள்

காந்தி பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். நடத்தத் திட்டமிட்டிருந்த ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், பாஜக கூட்டணி அரசாங்கம் ஆட்சி நடத்தும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதில் முன்னாள் காங்கிரஸ்காரர்களான அமைச்சர்கள் நமசிவாயம் உள்ளிட்டோர் காக்கி கால் சட்டை, வெள்ளை சட்டை, குல்லாய் சகிதமாக முழு ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பங்கேற்றனர்.
காந்தியின் 153வது பிறந்த நாள், இந்திய விடுதலையின் 75வது ஆண்டு, வள்ளலார் பிறந்து 200 ஆண்டு ஆவது ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சித்தன்குடி காமராஜர் சாலையிலிருந்து இந்த ஊர்வலத்தை மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைபொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு, பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் ஆகியோர் இந்த ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் பங்கேற்றனர்.
ஆனால், புதுச்சேரி அரசாங்கத்துக்கு தலைமையேற்று நடத்தும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் யாரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷின் வீதி என நகரின் முக்கியத் தெருக்கள் வழியாக சுமார் 4 கி.மீ. தூரம் சென்ற ஊர்வலம் கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே நிறைவடைந்தது.
சுமார் 1,000 போலீசார் இந்த ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற கட்சிகளின் மனித சங்கிலி

முன்னதாக, திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சியினர் புதுவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மா காந்தியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்து, கலவரத்தை ஏற்படுத்த நினைப்பதாக புதுவையில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பாஜக சார்பு அமைப்புகளை விமர்சித்தனர்.
புதுச்சேரி இந்த மனித சங்கிலி மத நல்லிணக்கப் போராட்டம் அண்ணா சிலையில் இருந்து அண்ணா சாலை, காமராஜர் சிலை வரை நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மனித சங்கிலி மதநல்லிணக்க போராட்டம் நடைபெற்ற கொண்டிருக்கும் போது அருகே காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வந்தனர். அந்த சமயத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநர் மற்றும் முதல்வரை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதால், போலீசார் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது என்ன?

பட மூலாதாரம், EPA
1925ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் வரலாறு சர்ச்சைகள் நிறைந்தது.
தீவிர இந்து மதவாதக் கோட்பாடுகள் உடைய இந்த அமைப்பு மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு பிறகு மீண்டும் தடை நீக்கம் பெற்று இயங்கி வருகிறது.
இந்திய விடுதலைக்குப் பிறகு, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக இந்த அமைப்பு குற்றம்சாட்டப்பட்டு முதல் முறையாக இந்த அமைப்பு 1948ல் தடை செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டது.
பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்து, எதிர்க்கட்சி அரசுகளைக் கலைத்து, எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தபோது, 1975ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுடன் உறவை வளர்த்துக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். அதை வைத்து தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்திக்கொண்டது. பிறகு இந்தத் தடையும் நீக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டில் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில்தான் இந்து அவதாரக் கடவுளான ராமர் பிறந்ததாக கூறி அந்த இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 1980களில் மிகப்பெரிய இயக்கத்தைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். 1992ல் இந்த மசூதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தீவிர இந்து மதவாத அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் இந்த தடை ரத்து செய்யப்பட்டது.
ஆனால், இந்த அமைப்பு தொடர்ந்து பிரிவினைக் கருத்தியலோடும், தீவிரத் தன்மையோடும் செயல்படுவதாகவும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராக வெறுப்பைப் பரப்புவதாகவும் இதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த அமைப்பின் தொண்டர்கள் காக்கி சீருடை அணிகிறவர்கள். தாங்கள் செயல்படும் பகுதிகளில் சிறு குழுக்களாக இணைந்து பூங்காக்கள், மைதானங்கள் போன்ற இடங்களில் இவர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சிக் கூடல்களுக்கு 'ஷாகா' என்று பெயர். ஷாகா என்ற வடமொழி சொல்லுக்கு 'கிளை' என்று பொருள். இந்த ஷாகா கூட்டங்கள், இந்த அமைப்பின் கிளைக் கூட்டங்கள் என்ற பொருளில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் உறுப்பினர்களின் பட்டியலை எழுத்துப்பூர்வமாகப் பராமரிக்காத இந்த அமைப்பு, தங்களுக்கு இந்தியா முழுவதும் 50 ஆயிரம் ஷாகாக்கள் இயங்குவதாக கூறுகிறது.
இந்து ஆண்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருக்க முடியும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இணைய தளம். பெண்களுக்கு ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்ற தனி அமைப்பு செயல்படுகிறது.
இந்தியாவை ஆளும் பாஜக இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தமது வழிகாட்டி அமைப்பாக, தாய் அமைப்பாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பெரிய பாஜக தலைவர்கள் பெரும்பாலோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்தவர்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்திய அளவில் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல இந்துத்துவ அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல்/ மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந் நிலையில், காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்திருந்தது.
இதனால் இன்று திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. ஆனால், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தடை ஏதும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









