You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிஎஃப்ஐ மீதான தடையை எஸ்டிபிஐ கட்சி மீது ஏன் பிரயோகிக்க முடியாது?
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் கட்டமைப்பு வலுவாக உள்ளதால் பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டாலும், அந்த அமைப்பு இந்தியாவின் தென் மாநிலங்களில் முற்றிலும் அழிந்து விட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தத் தடையை தாங்கள் எதிர்பார்த்ததாக அரசியல் விமர்சகர்களும், எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நிர்வாகிகளும் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தனர்.
"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தீவிர மதவாத அமைப்பாகக் குறிப்பிடுவது மிகவும் கடினம். காரணம், சிறுபான்மையினர், பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி), பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் அவர்களுக்கு சமூக அடித்தளம் இருக்கிறது. அந்த அமைப்பின் பொருளாதார மற்றும் அரசியல் வாதங்கள் இந்தியாவின் சாதாரண மக்களிடையே குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன," என்கிறார் அரசியல் விமர்சகர் என்.பி.செக்குட்டி.
"பிஎஃப்ஐ அமைப்பை முற்றிலும் ஒழிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் மிகத்தெளிவான பொருளாதார மற்றும் அரசியல் திட்டமிடலைக் கொண்டுள்ளனர். முஸ்லிம் அல்லாத குழுக்கள் மற்றும் மதசார்பற்ற அரசியல் முழக்கத்தை ஏற்று தங்கள் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும், உலகமயமாக்கல் மூலம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் என்ற கோஷத்தையும் அவர்கள் பயன்படுத்தினர்," என்கிறார் செக்குட்டி.
"தடை என்பது அடையாளமாக மட்டுமே உள்ளது. குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக பிரச்னைகளை சந்தித்து வருவதால், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்தத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் கூறுவது போல 'தேசிய பாதுகாப்பு' காரணம் அல்ல" என பிபிசி இந்தி சேவையிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் தஸ்லீம் அகமது ரஹ்மானி தெரிவித்தார் .
ஆர்.எஸ்.எஸ்.க்கு சவால் விடும் வகையில் உருவான பி.எஃப்.ஐ., சில ஆண்டுகளுக்கு முன்பு யோகாவை இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல என்று கூறி யோகாவின் பயன்பாட்டை ஊக்குவித்தது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போலவே ஒரே சீருடை அணிந்து அவர்கள் அணிவகுப்பிலும் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களில் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் எஸ்டிபிஐ கட்சியினர் சில இடங்களில் வென்றுள்ளனர். "சட்டசபை தேர்தல்களில் அவர்கள் எந்த இடத்திலும் வெல்லவில்லை. ஆனால், போட்டியிட்ட இடங்களில் 2000 முதல் 3000 வாக்குகள் அவர்களால் வாங்க முடிந்தது. பிரதான கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்க அவை போதும். அதனால்தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு இது கவலையளிக்கிறது" என்கிறார் செக்குட்டி.
செக்குட்டி கூறியது 2004ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வகித்த பங்கைப் போன்றது. அதன் வேட்பாளர்கள் 1500 முதல் 3000 வாக்குகள்வரைப் பெற்றதால் 23 இடங்களில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வெற்றியைப் பாஜகவிடமும், மதசார்பற்ற ஜனதா தளத்திடமும் பறிகொடுத்தது.
சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணிகளுக்கும் இதே மாதிரியான அனுபவம், கேரள சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களின் போது ஏற்பட்டது.
கர்நாடகாவில் 2013 சட்டமன்ற தேர்தலில் மைசூரு தொகுதியில் பலம்பொருந்திய காங்கிரஸ் கட்சியை எஸ்.டி.பி.ஐ. தோற்கடித்தது. பல வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிட்டது.
"2014ஆம் ஆண்டு மலப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரிதாகவே வெற்றிபெற முடிந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் அமைப்புகளுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி அமைத்திருப்பதால் முஸ்லீம் அதிகமுள்ள வடக்கு மலபார் பகுதிகள் எஸ்.டி.பி.ஐ.க்கு சாதகமாக மாறியுள்ளன" என்கிறார் செக்குட்டி.
"பி.எஃப்.ஐ. அமைப்பிற்கு வலுவான தொண்டர் படை உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் நாம் பார்த்திராத மிகப்பெரிய பேரணியை நடத்த அண்மையில் வடக்கு கேரளாவில் நடைபெற்ற மாநாடு உதவியது. அதே மாதிரியான மாநாடு ஆழப்புலாவிலும் இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. அங்கும் அதேபோல மிகப்பெரிய பேரணி நடந்தது. கேரளாவின் வடக்குப்பகுதி, முஸ்லிம் மலபார் பகுதி என்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது" என அரசியல் பார்வையாளரும் ஊடகவியலாளருமான சி.தாவூத் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.
பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள், ஓ.பி.சி.களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கடந்த காலங்களில் தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டதையும் செக்குட்டி குறிப்பிடுகிறார். 2000-2006 வரை நடந்த அந்தப் பிரசாரம், அரசுப் பணியிடங்களில் கேரள அரசு மாற்றங்கள் கொண்டுவர வழிவகுத்தது. ஓபிசி, தலித்துகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருடனான கூட்டணி, அந்த அமைப்பை நல்ல நிலையில் நிறுத்தியுள்ளது.
"பி.எஃப்.ஐ. அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிதித்தேவையைப் பாதிக்காது. முஸ்லிம்களிடம் உள்ள பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக அவர்களால் எளிதாக நிதித்திரட்ட முடியும். அந்த அமைப்பின் மீது பெரிய அளவிலான அனுதாபம் உள்ளது" என்கிறார் தாவூத்.
பி.எஃப்.ஐ. தொண்டர்கள் வன்முறைச் செயல்களிலோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளிலோ ஈடுபட மாட்டார்கள் என தாம் நினைப்பதாகக் கூறும் தாவுத், அவர்கள் பெரிய அரசியல் சக்தியாக மீண்டும் வெளிப்படும் தருணத்திற்காக காத்திருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தடை பி.எஃப்.ஐ. மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ரஹ்மானி தெரிவிக்கிறார். "எஸ்.டி.பி.ஐ.யின் 60 சதவிகித நிர்வாகிகள் பி.எஃப்.ஐ. அமைப்பின் நிர்வாகிகள். எஸ்.டி.பி.ஐ. கட்சியால் அரசியல் லாபம் இருப்பதால் மத்திய அரசு எஸ்.டி.பி.ஐ. கட்சியைத் தடை செய்ய விரும்பாது" என அவர் கூறினார்.
பி.எஃப்.ஐ. மீதான தடையை வரவேற்றுள்ள பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, "தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்க வேண்டுமென்பதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியை மத்திய அரசால் தன்னிச்சையாக தடை செய்ய முடியாது," எனக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்