You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து தடுப்பு மையத்தில் உள்ள 13 தமிழர்கள் எப்போது தாயகம் திரும்புவர்? கவலையில் குடும்பங்கள்
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
துபாயில் இருந்து மியான்மர் நாட்டுக்கு சட்டவிரோத வேலைக்காக கடத்தப்பட்டு மீண்டும் தாய்லாந்து திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட 16 இந்தியர்களை, அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களை மீட்கும் நடவடிக்கை தற்போது எந்த அளவில் உள்ளது?
மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து தப்பித்து, தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்தபோது அதன் ராணுவத்தால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு உள்ளூர் காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் துபாயில் இருந்து தாய்லாந்துக்கு வந்ததற்கான பயணச்சீட்டு மற்றும் விசா இருந்ததால், அவர்களை 'தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக மியான்மர் எல்லைக்கு சென்று திரும்பியவர்கள்' என அடையாளப்படுத்தி வழக்கு தொடர்ந்தது தாய்லாந்து காவல்துறை.
இதுபோன்ற வழக்கில் வெளிநாட்டினர் சிக்கினால், அவர்களிடம் உரிய அபராதத்தை வசூலிக்கும் தாய்லாந்து அரசு அதன் பிறகு அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும். இந்த அபராதத் தொகையை 'பிடிபட்ட நபர்கள்' அவர்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் செலுத்தலாம் அல்லது அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காட உரிமை பெற்ற வழக்கறிஞர்கள் மூலமாகவும் செலுத்தலாம். பெரும்பாலும் இந்த தொகையை இளைஞர்களை வேலைக்கு பணியமர்த்தும் முகவர்களே செலுத்தி விட்டு அவர்களை வெளியே கொண்டு வர முயற்சி எடுப்பர்.
இந்த நிலையில், சமீபத்தில் பிடிபட்ட 16 இந்தியர்களிடமும் அபராதத் தொகையை செலுத்த ரொக்கம் இல்லாததால் அதற்கு ஏற்பாடு செய்யும்வரை அவர்களை தடுப்பு மையத்தில் வைக்கும்படி தாய்லாந்து குடிவரவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அபராதத் தொகையை செலுத்த போதிய பணம் கைவசம் இல்லாததால் இந்திய இளைஞர்கள் குடிவரவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்தத் துறையினர் அந்த இளைஞர்களை தனித்தனியாக விசாரித்தனர். அதைத்தொடர்ந்து முதலில் இந்திய இளைஞர்களை சிறையில் வைத்தும் பிறகு சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்படும் மையத்துக்கும் தாய்லாந்து அதிகாரிகள் மாற்றினர்.
முதல்வர் கடிதம் - வேகமெடுத்த நடவடிக்கை
சமீபத்திய தகவலின்படி, பிடிபட்டுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாங்காக்கில் உள்ள சாதோர்ன் மாவட்டத்தின் சோய் சுவால்ப்லூ என்ற இடத்தில் உள்ள குடிவரவுத்துறை தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, தங்களை மீட்கக் கோரி இளைஞர்கள் வெளியிட்ட காணொளி ஒன்று கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதன் பிறகே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி அந்த இளைஞர்களை மீட்கும்படி கேட்டுக் கொண்டார்.
சிறை போன்று நாலாபுறமும் மிக நீளமான பெருஞ்சுவர் எழுப்பப்பட்டிருக்கும் அந்த மையத்தில், பிடிபட்டவர்கள் சட்ட ரீதியாக உதவிகளைப் பெறுவதற்காக அலுவல்பூர்வமற்ற வகையில் செல்பேசி பயன்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கின்றனர். அந்த செல்பேசி மூலம் தான் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயரதிகாரிகளையும் இந்திய தூதரக அதிகாரிகளையும் 13 தமிழர்களும் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
அவர்களில் சிலரிடம் பிபிசி தமிழ் தொடர்ந்து பேசி வருகிறது. பிடிபட்டவர்களில் ஒருவரான அருண் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நம்மிடம் பேசுகையில், "முதலாவதாக நாங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் அதிக கட்டுப்பாடுகள் இல்லை. வெளியில் இருந்து யாரும் எங்களை சந்திக்க முடியாது. ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டுமே கட்டண அடிப்படையில் செல்பேசி பயன்படுத்த அனுமதிப்பர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நாங்கள் அந்த மையத்தில்தான் வைக்கப்பட்டு இருந்தோம். கடைசி வாரத்தில்தான் எங்களுக்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்பு ஒன்றின் மூலம் வாரத்தில் ஒரு நாளுக்கு மட்டும் வெளி உணவுப்பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது," என்று கூறினார்.
வேறு மையத்துக்கு திடீர் மாற்றம்
"கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்களை இரு வளாகங்கள் தள்ளி அமைந்திருக்கும் வேறொரு மையத்துக்கு தாய்லாந்து குடிவரவுத்துறை அதிகாரிகள் மாற்றினர். அந்த மையம், கிட்டத்தட்ட சிறைச்சாலை போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது." என்று அங்கிருக்கும் தமிழர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
அவர்களுடன் நமது செய்தியாளர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பேசியபோது, "தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், உளவுப்பிரிவு உயரதிகாரி ஒருவர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். நாங்கள் தமிழ்நாடு திரும்ப அரசு எல்லா உதவியும் எடுக்கும் என்று எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், எப்போது தாயகம் திரும்புவோம் என்றுதான் தெரியவில்லை," என்று கூறினார்.
இதற்கிடையே, தாய்லாந்து மையத்தில் உள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்று சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஜெசிந்தா லாசரஸிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"கடந்த இரண்டு வாரங்களாக இது தொடர்பாக தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய வெளியுறவுத்துறையுடன் தமிழக அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. சில நிர்வாக அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் அதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று ஜெசிந்தா தெரிவித்தார்.
"தற்போது பிடிபட்டுள்ள 16 இந்தியர்களுக்கு முன்பாகவே எட்டு தமிழர்கள் தாய்லாந்தில் சிக்கியிருந்தபோது அவர்களை மும்பை வழியாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல, மிகவும் விரைவாக 13 தமிழர்களை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்," என்று ஜெசிந்தா கூறினார்.
இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரிடம் பேசினோம். "மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிடிபட்டுள்ள இந்தியர்கள் வெளிநாட்டு மண்ணில் உள்ளனர். அதுவும் அவர்கள் துபாயில் இருந்து தாய்லாந்துக்கு சென்று விட்டு அங்கிருந்து மியான்மருக்கு முறையான அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் தாய்லாந்துக்குள் நுழைந்தபோது பிடிபட்டிருக்கிறார்கள். இரு நாடுகளுடனான சிறந்த நல்லுறவைப் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் தாய்லாந்தில் சிக்கியவர்கள் கடைசியாக தங்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேசியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வேறு தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதால் இரு தரப்புக்கும் இடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் நிலையை அறிய அவர்கள் அரசின் பல நிலைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர், தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறையில் ஏதும் நடந்து விடக்கூடாது கவலைப்படுவதாக நம்மிடம் தெரிவித்தனர்.
பயணச்சீட்டை முன்பதிவு செய்வது யார்?
இந்த நிலையில், தடுப்பு முகாமில் உள்ள இந்தியர்கள் அனைவரிடமும் வரும் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்படும் விமானத்தில் அவர்களுக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்படி தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல் அனுப்பியிருப்பதாக பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ளது.
பாங்காக்கில் இருந்து இடைநில்லா விமான சேவை மூலம் சென்னைக்கு வர 3.30 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி இந்த ஒரு வழிப்பயணத்துக்கான செலவு தலா ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை உள்ளது. ஒருவருக்கு ரூ. 15 ஆயிரம் என கணக்கிட்டாலும் 13 பேர் சென்னை வருவதற்கான பயணச்சீட்டு செலவு ரூ. 1,95,000 முதல் ரூ. 2,34,000 வரை ஆகும்.
சிறை போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த வளாகத்தில் இருந்தபடி இந்தியர்களால் தாயகம் புறப்படுவதற்கான பயணச்சீட்டுகளை எவ்வாறு முன்பதிவு செய்ய இயலும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. தாய்லாந்தில் உள்ள மீட்கப்பட்ட தமிழர்களின் பயணச் செலவை மாநில அரசே ஏற்கும் என்று சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியிருந்தார்.
அதன்படி, தடுப்பு முகாமில் உள்ள 16 பேரில் 13 தமிழர்களுக்கான பயணச்சீட்டை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதாக சம்பந்தப்பட்டவர்களிடம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு முகாமில் மேலும் நான்கு தமிழர்கள்
தாய்லாந்தில் உள்ள தடுப்பு முகாமில் தற்போது உள்ள 16 இந்தியர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். கன்னியாகுமரி, கோவை, கரூர், வேலூரை சேர்ந்த தலா இருவர், அரியலூர், புதுக்கோட்டை, தென்காசி, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, தாய்லாந்து தடுப்பு மையத்தில் கன்னியாகுமரி, தஞ்சாவூரைச் சேர்ந்த தலா ஒருவர், திருநெல்வேலியைச் சேர்ந்த இருவர் என மேலும் நான்கு தமிழர்கள் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக அவர்கள் அந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களும் 13 தமிழர்களைப் போலவே வெளிநாடு வேலைவாய்ப்பு தகவலை நம்பி தாய்லாந்து சென்றதும் அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து 'வேலைவாய்ப்பு முகவர்கள் அல்லது ஆலோசகர்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்ளப்படுவோர் மூலம் தாய்லாந்து வரை வந்த அவர்கள், அபராதம் செலுத்திய பிறகே நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை தாய்லாந்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த தமிழர்கள் தொடர்பான தகவலை 'பிபிசி தமிழ்' தமிழ்நாடு அரசிடம் பகிர்ந்திருக்கிறது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி முகவர்களை கைது செய்ய நடவடிக்கை
இது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய வெளியுறவுத்துறையில் விசாரித்தபோது, 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் தொடர்பான மீட்புப் பணி குறித்த தகவல் மட்டுமே தங்களிடம் உள்ளதாகவும் மேலும் நான்கு தமிழர்கள் அல்லது எத்தனை பேர் அங்கு உள்ளனர் என்ற விவரம் தங்களிடம் எழுத்துபூர்வமாக இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோத வெளிநாட்டு வேலைகளுக்கு இந்திய இளைஞர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்த முகவர்களை கண்டறிய மாநில உளவுப்பிரிவு தீவிரம் காட்டி வருகிறது.
தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை தொடர்பு கொண்ட உளப்பிரிவு அதிகாரிகள், அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இந்த மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு துணையாக செயல்பட்ட முகவர்கள் யார் என்ற தகவல்களை பெற்றுள்ளனர். அந்த முகவர்களை கைது செய்ய மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்