You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை மின் தடை: தரமற்ற கச்சா எண்ணெயால் தத்தளிக்கும் நாடு - மின்சார உற்பத்தி பாதிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
''கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணெயிலுள்ள கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றமையினால், அதனூடாக கிடைக்கின்ற ஃபேர்னஸ் எண்ணெய்யை மின் உற்பத்திக்காக பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக நினைக்கின்றேன்" என ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் குற்றச்சாட்டிற்கு, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்துள்ளார். டிவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் பதிலளித்திருந்தார்.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் சட்ட ரீதியில் பதில் வழங்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்தார்.
லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான நிதி இல்லாமை ஆகிய காரணங்களினால் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் வசம் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டு நேரம் இன்று முதல் மேலும் அதிகரிப்பு
இலங்கையின் மின்சார உற்பத்தியின் பிரதான மின் உற்பத்தி நிலையமாக கருதப்படும் நுரைசோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி இன்று செயலிழந்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்பிறப்பாக்கிகள் காணப்படுகின்ற நிலையில், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக இலங்கையின் மின்சார தேவைக்கு 900 மெகாவோர்ட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.
எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி ஏற்கனவே செயலிழந்திருந்தது.
இவ்வாறான பின்னணியில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியும் இன்று செயலிழந்துள்ளது.
இதன்படி, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி மாத்திரமே செயற்பட்டு வரக்கூடிய நிலையில், இலங்கையின் மின்சார தேவைக்கான 300 மெகா வோல்ட் மின்சாரத்தை மாத்திரமே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தற்போது வழங்க முடிகின்றது.
இதனால், இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய மின்வெட்டு நேர அட்டவணையை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மின்வெட்டு, பொருட்களின் விலை உயர்வு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என இலங்கை பல்வேறு பிரச்னைகளை கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்தது.
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து, அவரை பதவி விலக கோரி, கடந்த மார்ச் மாதம் முதல் ஜுலை மாதம் வரையான மார் 4 மாத காலம் பாரிய போராட்டங்கள் இடம்பெற்றன.
இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கையில் தொடர்ந்தும் இலத்திரனியல் முறையான க்யூ.ஆர் முறைப்படி எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த நிதித் தொகையானது இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாட்டை எட்டும் பட்சத்தில், இந்த நிதித் தொகை விரைவில் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
இலங்கைக்கு சுமார் 50 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடன் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்