You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எப்படி உருவானது? இதன் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
- எழுதியவர், ஃபைசல் முகமது அலி
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே நாளில் சோதனை நடத்தியது.
இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.
இது தொடர்பான செய்தி:
முன்னதாக, ஜூலை 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியின் பாட்னா வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரண்டு இந்திய விரோத சதிகளை கண்டுபிடித்ததாக பிகார் காவல்துறை கூறியது. அதையடுத்து இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.
அதையொட்டி, பி.எஃப்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து வெளியிட்ட விரிவான செய்தியை தற்போது மறுபகிர்வு செய்கிறோம்:
பி.எஃப்.ஐ. தொடர்பான நிதி விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரிக்கும் என்று ஏஎன்ஐ செய்தி முகமை கூறியது.
பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப்பில் அம்பலமான இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்று தோன்றுகின்றன. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர் என்று பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். தில்லன் பிபிசியிடம் கூறினார்.
தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), ரகசிய அமைப்பை உருவாக்கத் தயாராகி வருவதாக போலீஸார் தங்கள் எப்ஐஆரில் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்கு பழிவாங்குவதுதே இதன் நோக்கம்.
இது தவிர இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியில் மேலும் இரண்டு விவகாரங்கள் வெளியாகியுள்ளன. இவை இரண்டு வாட்ஸ்அப் குழுக்களுடன் தொடர்புடையவை. அவற்றில் ஒன்று பாகிஸ்தானில் இருந்து ஏமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் எண்களைக் கொண்டிருந்தது. இரண்டாவது குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மொத்தம் எட்டு எண்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வாட்ஸ்அப் குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எம்.எஸ்.தில்லன் விவரித்திருந்தார். கைது செய்யப்பட்ட மர்கூப் அகமது டேனிஷ், பாகிஸ்தானின் தீவிர அமைப்பான தெஹ்ரீக்-இ-லப்பைக் உடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பேராசிரியரின் கையை வெட்டியது, குன்னூரில் ஆயுதப் பயிற்சி, தமிழகத்தில் தஞ்சாவூரில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்ட பிஎஃப்ஐக்கு எதிரான பல்வேறு வன்முறை வழக்குகள், என்ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் விசாரிக்கப்படுகின்றன.
இவர்களில் பலர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பிஎஃப்ஐ உடன் தொடர்பு உள்ளது. பிஎஃப்ஐ தொடர்பான பண பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
பிஎஃப்ஐ தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறது
பிஎஃப்ஐ மறைவிடத்திலிருந்து கிடைத்த 'இந்தியா 2047: Toward Rule of Islamic India' என்ற ஆவணம், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான சதி என்று காவல்துறை கூறுகிறது. அதே நேரத்தில் "போலீசார் தங்களை சிக்க வைக்க பொய் கதையை புனைவதாக" பிஎஃப்ஐ தெரிவிக்கிறது.
"பாப்புலர் ஃப்ரண்டை பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இது," என்று அந்த அமைப்பின் தேசியச் செயலர் முகமது ஷகீஃப்பின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இது ஒரு அரசியல் தந்திரம், ஒரே இடத்தில் இருந்து இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. .
"சச்சர் கமிஷன்-மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டது. 2016 ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லியில் நீதிபதி ராஜீந்தர் சச்சர் இந்தப்பரிந்துரைகளை சமர்ப்பித்தார்," என்று அந்த அமைப்பு கூறுகிறது.
15 ஆண்டுகளாக செயல்படுகிறது
2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே PFI கண்காணிப்பின் கீழே உள்ளது. 2008ல் அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (NIA), அன்றிலிருந்து பிஎஃப்ஐமீது ஒரு கண் வைத்திருக்கிறது.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த மலையாள மொழிப் பேராசிரியர் டி.ஜே.ஜோசப் தொடர்பான வழக்கு, மன்மோகன் சிங் அரசில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது 2011ல் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.
2010 ஜூலை 4 ஆம் தேதி நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பேராசிரியர் டி.ஜே.ஜோசப், "தேவாலயத்தில் இருந்து திரும்பும் போது ஒரு தனிமையான இடத்தில் நான் சுற்றி வளைக்கப்பட்டேன். என் வலது உள்ளங்கை கோடரியால் தாக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் ஏற்கனவே மூன்று முறை அத்தகைய முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதற்கு முன்பு மூன்று முறை வெவ்வேறு காரணங்கள் காட்டி என் வீட்டிற்கு வந்தார்,"என்று பிபிசியிடம் கூறினார்.
பேராசிரியர் ஜோசப் கல்லூரித் தேர்வுக்கான கேள்விகளைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதில் இஸ்லாம் மதத்தின் நம்பிக்கைப்படி கடைசி இறை தூதரான முகமது நபி இழிவுபடுத்தப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ' A thousand cuts, an innocent Question and deadly answers,' என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
கல்லூரி நிர்வாகம் தன்னை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்தது மட்டுமல்லாமல், தன் மீது எஃப்ஐஆர் பதிவும் செய்ததாக அவர் தொலைபேசியில் கூறினார்.
தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டார்
பேராசிரியர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரின் விசாரணை முடிந்துவிட்டது. என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 13 பேருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. 18 பேர் விடுவிக்கப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
பல விவகாரங்கள் குறித்து பிஎஃப்ஐ வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கைகளில், பேராசிரியரைத் தாக்கியதில் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதை உள்ளூர் தொண்டர்களின் எதிர்வினை என்று கூறி மூடிமறைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.
"சம்பவம் நடந்த உடனேயே, அப்போதைய பிஎஃப்ஐ தலைமை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை அமைப்பிலிருந்து நீக்கியது,"என்று அந்த அமைப்பின் இளம் பொதுச் செயலாளர் அனீஸ் அகமது பிபிசி உடனான உரையாடலில் தெரிவித்தார்.ஆனால் இந்தச் சம்பவத்தைத் தவிர வேறு பல வன்முறைச் சம்பவங்களிலும் பிஎஃப்ஐ-இன் பெயர் மீண்டும் மீண்டும் வருகிறது.
"பிஎஃப்ஐ மற்றும் வன்முறையின் சில கதைகள் பரப்பப்பட்ட அப்பட்டமான பொய்கள்" என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சமூகவியலாளர் ஜே ரகு கூறுகிறார். அதே நேரத்தில் ஜெர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் வால்டர் எமெரிக், "இது மிகவும் சிக்கலான வழக்கு. இதில் உறுதியான முடிவுகளை எட்டுவது கடினம்," என்கிறார்.
வால்டர் எமெரிக் ஆக்ஸ்போர்டு அறிஞராக, 'கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்திய முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட மாற்றம்' என்பது குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் அடிப்படையில்,'Islamic movements in india, moderation and its discontent' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
வால்டர் எமெரிக் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கேட்டதாகக் கூறுகிறார். " சில சமயங்களில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க முடியும் என்று நிரூபிக்க வன்முறையில் ஈடுபட்டதாக சில முன்னாள் பிஎஃப்ஐ ஆர்வலர்கள் என்னிடம் கூறினார்கள். முஸ்லிம்களின் தெருக்களையும் இடங்களையும் பாதுகாப்பதிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்று காட்ட இவை செய்யப்படுகின்றன. ஆனால் அவர்களால் அத்தகைய வழக்குகளுக்கான எந்த ஆதாரத்தையும் என்முன்னே வைக்க முடியவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு அமைப்பின் உயர் தலைமை ஒப்புதல் அளிக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் நிகழ்வுகள் எதுவும் எனக்கு முன் வரவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
"அவர்கள் சிறிதளவு வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அவ்வளவு மோசமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆர்எஸ்எஸ்காரர்கள் பிஎஃப்ஐ ஆட்களைத் தாக்கத் துணிய மாட்டார்கள்," என்று ரகு கூறினார்.
பிஃஎப்ஐ என்பது என்ன?
கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.
வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை தலையை அறுத்து படுகொலை செய்தது, தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு பணம் வரும் வழிகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
ஆர்எஸ்எஸ் - பிஎஃப்ஐ ஒப்பீடு
தெற்கு கேரளாவின் ஆலப்புழையில் பிஎஃப்ஐ இன் அரசியல் பிரிவாகக் கருதப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் பாரதீய ஜனதா கட்சியின் ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளர் ரஞ்ஜீத் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்டார்.
சமூக நலக் குறியீடுகளில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேரளாவில் அரசியல் கொலைகள் தொடர்கின்றன. ஆர்எஸ்எஸ், சிபிஎம், பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளின் பெயர்கள் காவல்துறையால் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன.
கேரளாவில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள பிகாரில், பிஎஃப்ஐ மீது பாட்னா காவல்துறை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பிகார் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங், "இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் பிடிபடும் போதெல்லாம், பாகிஸ்தானின் ஏஜெண்டுகளின் வடிவில் உள்ள அனைவருமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த இந்துக்கள்", என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
"நிதீஷ் ஆர்எஸ்எஸ்ஸை வளர அனுமதித்துள்ளார். அதற்கு பயந்தவர்கள் கூட தங்களுக்கென ஒரு அமைப்பை விரும்புகிறார்கள். நாம் தாக்கப்படும்போது இதன்வாயிலாக, நம்மை, நம் மக்களை காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்,"என்று ஏஎன்ஐ செய்தி முகமையின் வீடியோவில், ஜக்தானந்த் சிங் கூறுவதைக் கேட்கலாம்.
பாஜகவின் தாய் அமைப்பாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஜக்தானந்த் சிங் ஒப்பிட்டுப் பேசிய விதமானது ஒரு பெரிய புயலை கிளப்பக்கூடும். முன்னதாக, ஆர்.எஸ்.எஸ்-பி.எஃப்.ஐ இரண்டுமே செயல்படும்விதம் ஒன்றுபோல இருப்பதாக பட்னாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு மாபெரும் சர்ச்சை வெடித்தது.
ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று PFI கூறியது.
செய்தியாளர் சந்திப்பின் போது கேள்விகளுக்கு பதிலளித்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எம்.எஸ்.தில்லன், அமராவதி, உதய்பூர் அல்லது நூபுர் ஷர்மாவுடன் எந்த வகையிலும் முதல் வழக்கை தொடர்புபடுத்தவில்லை.அதே நேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் மற்றும் நுபுர் ஷர்மா விவகாரங்களுக்கு எதிராக, பிரதமரின் வருகையின் போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சம்பந்தப்பட்டவர்கள் போராட்டம் நடத்த விரும்பியதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் ராஜஸ்தானின் உதய்பூர் ஆகிய நகரங்களில் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டனர். உதய்பூரில் கொலையாளிகள், நூபுர் ஷர்மாவின் அறிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கை இது என்று கூறி படுகொலை வீடியோவை வெளியிட்டனர். உதய்பூரில் தையல்காரரான கன்ஹையா லால் தேலி, நூபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.
பாட்னாவின் செய்தியாளர் சந்திப்பில் பயிற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வழக்கமான ஆயுதங்களான தடிகள், ஈட்டிகள் போன்றவற்றைப் பற்றி பேசினார்.
இருப்பினும் காவல் நிலைய அதிகாரி எக்ரார் அகமது பதிவு செய்த எப்ஐஆரில், ஆயுதப் பயிற்சி மற்றும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
குன்னூரில் உள்ள நாரத்தில் ஆயுதம் மற்றும் வெடிபொருள் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கு, 2013 ஜூலையில் தன்னிடம் வந்ததாக NIA இணையதளம் தெரிவிக்கிறது.
ஆயுதப் பயிற்சியை PFI திட்டவட்டமாக மறுக்கிறது. "ஆரோக்கியமான மக்கள், ஆரோக்கியமான தேசம்" என்ற முழக்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அமைப்பால் யோகா முகாம் நடத்தப்படுகிறது. 2013 ஏப்ரலில் இது நெரிசல் மிகுந்த பகுதியில், வெளியே வளாகம் இல்லாத இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறை தனது தொண்டர்கள் மீது UAPA இன் பிரிவுகளை சுமத்தி வழக்கு பதிவு செய்தது."என்று அந்த அமைப்பு கூறுகிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 22 பேரில் சிலருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், சிலருக்கு ஐந்தாண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பிஎஃப்ஐ சுற்றிவளைக்கும் முயற்சி உள்ளதா?
புல்வாரி ஷெரீஃப் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் ஒருவரான அதர் பர்வேஸ், சிமியின் முன்னாள் தீவிர உறுப்பினர் என்று கூறப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு சட்ட உதவிக்காக அவர் பணியாற்றினார் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது. அவர் SDPI கட்சியின் பாட்னா மாவட்ட பொதுச்செயலாளரும் ஆவார்.
பிஎஃப்ஐ இன் அரசியல் பிரிவாக கருதப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டாளரான நூருதின் ஜங்கியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நூருதீன் ஜங்கி பிகாரின் தர்பங்கா தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும் அவர் சில டஜன் வாக்குகள் மட்டுமே பெற்றார்.
" இந்த நேரத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவாதமும் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது. பி.எஃப்.ஐ அமைப்பை விடுங்கள். ஆனந்த்... மற்றும் பீமா கோரேகானுடன் தொடர்புடையவர்கள்.. என்ன குற்றம் செய்தார்கள்? அவர்கள் ஏன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த சம்ஷுல் இஸ்லாம் வினவினார்.
PFI க்கு எதிராக வேண்டுமென்றே பல வழக்குகள் போடப்படுவது போலத்தெரிகிறது என்பதை வால்டர் எமெரிக் ஒப்புக்கொள்கிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்வி ராமண்ணாவின் டிவிஷன் பெஞ்சில் நடந்த விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, PFI அமைப்பை தடை செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரித்தார் என்று பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
PFI அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை, உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு பரிந்துரை அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரை இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.
தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த PFI இன் நிறுவனர்களில் ஒருவரான பேராசிரியர் பி.கோயா, "தடை என்பது ஒரு அரசியல் முடிவு, அதில் எந்த அர்த்தமும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்பட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் ஒருமுறை அல்ல இரண்டு முறை தடை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்