குயில்லன் பார்ரே குறைபாடு: தன்னம்பிக்கையுடன் வெல்லும் ரோசி அயன்குட்டி

ரோசி அயன்குட்டி
படக்குறிப்பு, ரோசி அயன்குட்டி
    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழ்

"உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். நாளை நமக்காக என்ன இருக்கிறது என்று தேட தொடங்கினால் நீங்கள் நிச்சயமாக வெற்றியை சுவைப்பீர்கள்," என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோர் ரோசி அயன்குட்டி.

தன்னுடைய 20ஆவது வயதில் குயில்லன் பார்ரே குறைபாடு (Guillain-Barre syndrome) என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் இருந்திருக்கிறார் இவர். இன்னும் 2 நாட்களில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் சொல்ல, விதியை தன் தன்னம்பிக்கையால் வென்று இன்று 'சர்வதேச இமேஜ் கன்சல்டன்ட்' ஆக உயர்ந்திருக்கிறார் ரோசி அயன்குட்டி. பிபிசி தமிழுக்காக தன்னுடைய தன்னம்பிக்கை கதையை பகிர்ந்து கொண்டார் ரோசி அயன்குட்டி.

சென்னையில் பிறந்த ரோசி கல்லூரியில் பிஏ ஆங்கிலம் பட்டப்படிப்பை முடித்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் 2008 ஆம் ஆண்டு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். எல்லோரையும் போல் வாழ்வின் மீதான பெருங்கனவுடன் நம்பிக்கையாய் வேலை பார்க்கத் தொடங்கியுள்ளார் ரோசி.

"எனக்கு கல்லூரியில் படிக்கும் போதே ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும் என்பதால் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் எனக்கு கால்கள் வலிக்க தொடங்கின. கல்களை மடித்து உட்கார முடியாமல் இருந்தது. சாதாரணமாக நடக்கும் போதே கால்கள் தொடர்ந்து வலிக்க ஆரம்பித்தன. நான் விளையாட்டுப் பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவள். எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பேன். அதிக வேலைப்பளுவினால் கால்கள் வலித்திருக்கலாம் என்று நினைத்து அதை பெரியதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று நினைத்தேன்," என்கிறார் ரோசி.

"ஆனால் அந்த வலி சரியாகவில்லை. மருத்தவரிடம் சென்று காண்பித்த போது அவரும் பல பரிசோதனைகள் மேற்கொண்டார். 3 மாத சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு பிறகே நான் Guillain-Barre syndrome என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மிக மிக அரிதான நோய் என்றும் இது 4 லட்சத்தில் ஒருவருக்கு தான் வரும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நான் உட்பட என் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்." என்று கண்களில் சோகத்துடன் கூறினார் ரோசி.

குயில்லன் பார்ரே குறைபாடு என்பது என்ன?

ரோசி அயன்குட்டி

ஜிபிஎஸ் என மருத்துவத்துறையினரால் அழைக்கப்படும் குயில்லன் பார்ரே குறைபாடு, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நம் நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு அரிய வகை நோய். இந்த நோய் வந்தால் கால்கள் மற்றும் கைகள் தான் முதலில் பாதிக்கப்படும்.

இந்த நோயால் ரோசி பாதிக்கப்பட்டது தெரிந்ததும் உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். GBS நோயால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளார் ரோசி. ஒரு கட்டத்தில் கால்கள் முழுவதுமாக மரத்து போக காலை மடக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது.

"கால்கள் முதலில் மரத்து போக ஆரம்பித்ததும் கைகளிலும் வலி பரவத்தொடங்கியது. அது அப்படியே தொடர்ந்து முகம் வரை வலி என்னை படுத்தி எடுத்தது. ஒரு கட்டத்தில் என் நாக்கில் உள்ள சுவை அரும்புகள் செயலிழக்க தொடங்கியது. எந்த சுவையையும் என்னால் உணரவே முடியவில்லை. அதையெல்லாம் தாண்டி இறுதியாக என்னுடைய உதடுகள் ஒரு புறம் மேல்நோக்கியும் மற்ற பகுதிகள் கீழ் நோக்கியும் இழுக்க தொடங்கின. முகத்தில் பக்கவாதம் வந்தால் எப்படி இருக்குமோ அது போன்று வலியால் துடித்தேன். 20 வயதில் கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கிய எனக்கு தொடங்கிய வேகத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியை என்னால் தாங்கவே முடியவில்லை " என்று சொன்னார் ரோசி.

ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு முகம் செயலிக்க தொடங்கியதும் ஒரு கட்டத்தில் ரோசியால் பேசவே முடியவில்லை. படுப்பதற்கும் , கழிவறை செல்வதிற்கும் மற்றவர்களின் துணை இல்லாமல் எந்த பணியையும் செய்ய முடியவில்லை. தன் முகம் மாறியதும் மொத்த தன்னம்பிக்கையும் இடிந்து போனது. இனி தன்னுடைய வாழ்க்கை இப்படிதான் இருக்குமா.. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே வாழ்வது என மனதளவில் சோர்ந்து போனார் ரோசி. ஆனால் அவரின் குடும்பம் அவரை மொத்தமாக அரவணைத்து கொண்டது. மொத்த உறுப்பினர்களும் அவரை மனதளவில் தேற்றியிருக்கிறார்கள்

"மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே ஒரு நாள் எனக்கு உணவுக் குழாய் மொத்தமாக மூடிக்கொண்டது. ஒரு சொட்டு தண்ணீர் கூட உள்ளே செல்லவில்லை. மருத்துவர்கள் என் குடும்பத்தினரிடம் இன்று இரவு நான் உயிரிழந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை எனக்கு சொல்லவில்லை. மருத்துவர்களை சந்தித்துவிட்டு வந்ததும் என் குடும்பத்தினரின் முகம் ஏதோ சரியில்லை என்று உணர்த்தியது. வாழ்க்கை மீது அந்த நேரத்தில் பயம் ஏற்பட்டது. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நான் தெளிவாக இருந்தேன். எது நடந்தாலும் சரி என்னுடைய தன்னம்பிக்கை மட்டும் விட்டு விட கூடாது என்று முடிவெடுத்தேன். எதுவாக இருந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்று திடமாக நம்பினேன். மருத்துவரின் எச்சரிக்கையை மீறி எனக்கு பருக கொஞ்சம் தண்ணீர் குடுங்கள் என கேட்டேன். என் குடும்பத்தினர் முதலில் பயந்தார்கள். பின்னர் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார்கள். உடம்பின் மொத்த சக்தியையும் திரட்டி 2 சொட்டு நீரை பருகினேன். எனக்கு அது கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று மருத்துவர்களிடம் கேட்க, அவர்கள் தயக்கத்தோடே என்னை அனுப்பினார்கள். நான் உயிருடன் இருக்க வேண்டும்.. கனவுகளை வெல்ல வேண்டும்.. சாதனைகள் புரிய வேண்டும் என் மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தேன் " என மனதில் நம்பிக்கையுடன் பேசினார் ரோசி.

ரோசிக்கு தன்னம்பிக்கை ஊட்டிய சமூகம்

ரோசி அயன்குட்டி

வீட்டிற்கு ரோசியை கூட்டி வந்ததும் அவரை ஒரு குழந்தை போல் பாவித்து அனைத்து பணிகளையும் செய்த குடும்பத்தினர் அவருடைய தன்னம்பிக்கைக்கும் துணை நின்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தன் நம்பிக்கை மீட்டெடுத்த ரோசி தொடர் மருத்துவ சிகிச்சைக்கு நடுவில் கூட தன்னுடைய வேலையை மொத்தமாக விடவில்லை. ஒரு வருடம் மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு பின்னர் தான் கொஞ்சம் சரியானதும் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கு அவருடைய கனவு அவரை துரத்தி இருக்கிறது. ஒரு வருடம் வாய் பேச முடியாத நிலையில் இருந்தவர் அதிகம் பேச ஆசைப்பட்டுள்ளார். தன் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் மூலம் தன்னுடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துள்ளார்.

" தொடர் சிகிச்சைக்கு பிறகு நான் சிறிது குணமானதும் என் பணியை தொடர்ந்து செய்து வந்தேன். 2011 இல் என்னுடைய அலுவலகத்தில் என் கணவரை முதன்முதலாக சந்தித்தேன். 2014 இல் திருமணம் செய்து கொண்டோம். 2015 ஆண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே சுகப்பிரவத்திற்கு நான் முயற்சி செய்தால் கோமா நிலைக்கு போய்விடுவேன் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் சுகப்பிரசவம் என்பதில் உறுதியாக இருந்தேன். 2 குழந்தைகளையும் சுகப்பிரசவம் மூலமாக பெற்றெடுத்தேன். திருமணத்திற்கு பிறகு என் கணவரும் , மாமியாரும் பெருமளவில் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகளில் நான் பல பொறுப்புகளில் இருந்து கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறேன். Image Consulting இல் சர்வதேச பயிற்சியாளராக இருக்கிறேன். பல்வேறு நாடுகளில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சிகளை வழங்கி வருகிறேன். தனியாக பயிற்சி நிறுவனத்தையும் நான் நடத்தி வருகிறேன். என்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து தொழில்முனைவோராக உருவாக்குகிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் ரோசி அயன்குட்டி.

ஒரு இரவில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் சொன்னபிறகும் கூட தன் முயற்சி மற்றும் மனதிடத்தால் இன்று பல பெண்களுக்கும் முன் உதாரணமாக இருக்கிறார் ரோசி அயன்குட்டி. இன்றைய தலைமுறைக்கு அவர் சொல்வது இதுதான்.

உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். நாளை நமக்காக என்ன இருக்கிறது என்று தேட தொடங்கினால் நீங்கள் நிச்சயமாக வெற்றியை சுவைப்பீர்கள்..

காணொளிக் குறிப்பு, மலைவாழ் கர்ப்பிணிகளுக்காக உருவாக்கப்பட்ட "சேவ் மாம்" செயலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: