நூர் இனாயத் கான் வாழ்க்கை வரலாறு: ஹிட்லருக்கு எதிராக ஆங்கிலேயர்களின் உளவாளியாக மாறிய திப்பு சுல்தானின் வழித்தோன்றல்

நூர் இனாயத் கான்

பட மூலாதாரம், SHRABANI BASU

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 55ஆவது கட்டுரை இது.)

நூர் இனாயத் கான், ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிபணிய மறுத்த மைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வழித்தோன்றல் ஆவார். திப்பு சுல்தான் 1799 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு உயிரிழந்தார்.

நூரின் இந்தப் பின்னணியை பார்க்கும்போது, இரண்டாம் உலகப் போரின்போது அவர் எப்படி ஒரு பிரிட்டிஷ் உளவாளியாக மாறியிருப்பார் என்றும் தன் மரணத்திற்குப்பிறகு அவர் 'வார் ஹீரோவாக' எப்படி ஆனார் என்பதையும் கற்பனை செய்வது கடினமாக உள்ளது.

அவர் தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்துக்கொண்டார், தன்னுடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை எவ்வாறு கழித்தார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நூரின் வாழ்க்கையைப் பற்றி 'The Spy Princess: The Life of Noor Inayat Khan' என்ற புத்தகத்தை எழுதியுள்ள ஷ்ராப்னி பாசு, "நூர் இசையின் மீது காதல் கொண்டிருந்தார். பாடல்களை எழுதினார். வீணை வாசித்தார். குழந்தைகளுக்காக கதைகளும் எழுதினார்,"என்று குறிப்பிட்டார்.

நூர் இனாயத் கான்

பட மூலாதாரம், SHRABANI BASU

பிரிட்டிஷ் ராணுவம்

நூர் 1914 இல் மாஸ்கோவில் பிறந்தார். ஆனால் பிரான்சில் வளர்ந்து, பிரிட்டனில் வாழ்ந்தார். அவரது தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் மற்றும் சூஃபித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவரது தாயார் அமெரிக்கர். ஆனால் அவரும் பின்னர் சூஃபித்துவத்தை ஏற்றுக்கொண்டார். இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் குடும்பம் பாரிஸில் வசித்து வந்தது.

ஆனால் ஜெர்மன் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். நூர் இனாயத் கானின் நினைவாக ஷ்ராபனி பாசு ஓர் அமைப்பையும் நடத்தி வருகிறார். "நூர் பிரிட்டிஷ் ராணுவத்தில் தன்னார்வலராக சேர்ந்தார். தன்னை ஏற்றுக்கொண்ட நாட்டிற்கு உதவ விரும்பினார். பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதே அவரது நோக்கமாக இருந்தது," என்று அவர் கூறினார்.

பின்னர் அவர் விமானப்படையின் பெண்கள் துணை பிரிவில் சேர்ந்தார். இது 1940களில் நடந்தது. பிரெஞ்சு மொழி பேசும் அவரது திறமை, சிறப்பு செயல்பாட்டு நிர்வாக உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த ரகசிய அமைப்பு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலால் உருவாக்கப்பட்டது. அதன் பணி ஹிட்லரின் நாஜி படைகள் ஐரோப்பாவில் முன்னேறும்போது, அவர்களுக்கு எதிரான கொரில்லா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும்."

உளவு நடவடிக்கை

"மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது 1943இல் நூர், பிரிட்டிஷ் ராணுவத்தின் ரகசிய ஏஜெண்டாக ஆனார்."நூர் ஒரு சூஃபி. அதனால் அவருக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. ஆயினும் இந்தப் போரில் பங்குகொண்டே ஆக வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார்," என்று ஷ்ராப்னி பாசு குறிப்பிட்டார்.

நூரின் சித்தாந்தத்தின் காரணமாக அவர் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு ஏற்றவர் அல்ல என்று அவரது சக ஊழியர்கள் நினைத்தனர். தான் பொய் பேச முடியாது என்றும் கூட அவர் ஒரு சந்தர்ப்பத்தில், சொன்னார்.

"தனது உண்மையான பெயரைக் கூட பயன்படுத்தாமல் போலி பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு ரகசிய ஏஜெண்ட் அவர். அப்படி இருக்கும்போது இந்த சித்தாந்தங்கள் அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கமுடியாது என்று சிலர் நினைக்கக்கூடும்," என்று பாசு கூறுகிறார்.

ஜெர்மனியில் ஒரு சித்திரவதை முகாம்

பட மூலாதாரம், HORACE ABRAHAMS/KEYSTONE/GETTY IMAGES

படக்குறிப்பு, ஜெர்மனியில் ஒரு சித்திரவதை முகாம்

ஆபத்தான பங்கு

இப்படி இருந்த போதிலும், அவருடைய குணாதிசயங்கள் மன உறுதியுடன் இருக்கும் ஒருபெண்ணின் குணங்கள் என்று நூரின் உயர் அதிகாரிகள் கருதினர் என்று பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவணங்கள் கூறுகின்றன. அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு மிகவும் ஆபத்தானது. நூர் ரேடியோ ஆபரேட்டராக பயிற்சி பெற்றார். 1943 ஜூன் மாதம் அவர் பிரான்சுக்கு அனுப்பப்பட்டார்.

இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு சிக்கியவர்கள் என்றென்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் அபாயத்தில் இருந்தனர். இந்த மின்னணு சிக்னல்களின் அடையாளம் மற்றும் அதன் மூலத்தை ஜெர்மன் ரகசிய போலீஸ் 'கெஸ்டாபோ' எப்போது வேண்டுமானாலும் கண்டுபிடிக்கும் ஆபத்து இருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட ஆபத்தான பணியை வைத்துப்பாக்கும்போது அவர் பிரான்சில் ஆறு வாரங்களுக்கு மேல் வாழ முடியாது என்று பலர் நம்பினர் என்று பாசு கூறுகிறார். நூருடன் பணிபுரிந்த மற்ற ஏஜெண்டுகள் விரைவில் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் நூர் அப்போதும் வெற்றிகரமாக தப்பித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது பாரிஸில் நாஜிக்கள்.

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின் போது பாரிஸில் நாஜிக்கள்.

வஞ்சகத்தால் பாதிப்பு

இதற்குப் பிறகும் ஜெர்மன் காவல்துறையின் கண்களில் மண்ணைத்தூவி நூர் பிரான்சில் தனது நடவடிக்கையைத் தொடர்ந்தார். ஆனால் 1943 அக்டோபரில் நூர் வஞ்சகத்தால் வீழ்ந்தார். "அவரது கூட்டாளி ஒருவரின் சகோதரி ஜெர்மானியர்களிடம் நூர் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தினார். நூர் அழகாக இருந்ததாலும், அனைவரும் அவரை விரும்பியதாலும் அந்தப்பெண் பொறாமைகொண்டார்," என்று ஷ்ராப்னி பாசு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜெர்மன் போலீசார் அவரை ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைது செய்தனர். ஆனால் நூர் எளிதில் சரணடையவில்லை. அவர் போராடினார். ஆறு ஆஜானுபாகுவான போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து அவரை கட்டுப்படுத்தினர் என்று பாசு குறிப்பிட்டார். இரண்டு முறை அவர் தப்பிக்க முயன்றார், ஆனால் வெற்றிபெறவில்லை.

பிரிட்டிஷ் நடவடிக்கை பற்றிய தகவலைப் பெற ஜெர்மன் ஏஜெண்டுகள் நூரை சித்திரவதை செய்தனர். "ஆனால் அவர்களால் நூரின் உண்மையான பெயரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றுகூட அவர்களுக்குத் தெரியாது," என்கிறார் ஷ்ராப்னி பாசு.

நூர் இனாயத் கான்

பட மூலாதாரம், HULTON ARCHIVE/GETTY IMAGES

பெண் உளவாளி

ஆனால் நூரால் தனது குறிப்பேடுகளை அழிக்க முடியவில்லை. அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜெர்மானியர்கள் சில பிரிட்டிஷ் ஏஜெண்டுகளை கைது செய்தனர். கைதியாக ஒரு வருடம் கழித்த பிறகு, அவர் தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டார்.

பின்னர் அவரையும், வேறு மூன்று பெண் உளவாளிகளையும் நாஜிகள் சுட்டுக் கொன்றனர். இறக்கும் போது அவருக்கு வயது 30 மட்டுமே. அவர் இறக்கும் போது சுதந்திர கோஷத்தை எழுப்பியதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நூரின் துணிச்சலுக்காக அவருக்கு மரணத்திற்கு பிந்தைய விருதாக பிரான்சில் 'வார் கிராஸ்' விருது வழங்கப்பட்டது. அவருக்கு பிரிட்டனில் 'கிராஸ் செயின்ட் ஜார்ஜ்' வழங்கப்பட்டது. மகளிரைப் பொருத்தவரை நான்கு பெண்கள் மட்டுமே இதுவரை இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: