அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற தீர்ப்பு: ஓபிஎஸ் என்ன செய்வார்? எடப்பாடி என்ன செய்வார்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழு குறித்து தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பால் நடத்தப்பட்ட பொதுக் குழு செல்லுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

1. என்ன வழக்கு இது?

ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூட்டப்பட்டதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில், ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக் குழு செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கு முன்பு பொதுக் குழு கூட்டப்பட்ட தினமான ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே நீடிக்கும் என ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்குச் சாதகமான தீர்ப்பாக பார்க்கப்பட்டது.

இதற்குப் பிறகு இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதனை எடப்பாடி கே. பழனிச்சாமி நிராகரித்தார். தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தனி நீதிபதியின் உத்தரவு ரத்துசெய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக் குழுக் கூட்டம் செல்லுபடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். ஆகவே, இந்தத் தீர்ப்பு எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

"எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக் குழு செல்லும் என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது. ஆகவே ஒற்றைத் தலைமை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது" என தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை கூறினார்.

2. இந்த தீர்ப்பின் தாக்கம் என்ன?

இந்தத் தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தீர்ப்பின் முழுவிவரம் இன்னும் வெளியாகாத நிலையில், அந்தத் தரப்பு என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்தத் தீர்ப்பு நீதிமன்றங்கள் தொடர்பாக ஒரு சங்கடமான நிலையை உருவாக்கியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"முதலில் தனி நீதிபதி சதீஷ், பெரும்பான்மை ஜனநாயகமே சரி என்று கூறினார். அவரது கருத்தைத்தான் இந்தத் தீர்ப்பு எதிரொலிக்கிறது. ஆனால், தனி நீதிபதியின் தீர்ப்பும் டிவிஷன் பெஞ்சின் தீர்ப்பும் மாறிமாறி வந்துகொண்டிருப்பது மக்கள் மனதில் குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தும். இதனால், நீதிமன்றத்தின் செயல்பாடு மக்களிடம் கடுமையாக விமர்சிக்கப்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் இனி எப்படி செயல்பட வேண்டும் என்ற முறைய உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலிலேயே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரிக்குபடி செய்யலாம்" என்கிறார் அவர்.

3. ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்வார்?

ஓ. பன்னீர்செல்வம் இனி மேல் முறையீடு செய்யலாம் என்றாலும், மேலும் சில வாய்ப்புகளும் அவரிடம் இருக்கின்றன என்கிறார் குபேந்திரன். "இதன் பிறகு அவர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். ஆனால், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் திருப்பி அனுப்பியது. இப்போது மேல் முறையீடு என்பதால் விசாரிக்குமா என்று தெரியவில்லை. அப்படியே விசாரித்தாலும் என்ன தீர்ப்பு வரும் என்பதும் தெரியவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். தேர்தல் ஆணையத்தை அணுகி சின்னத்தை முடக்கலாம். இந்த வழக்கில் முதல் வெற்றி தி.மு.கவுக்குதான். இரண்டாவது வெற்றி பா.ஜ.கவுக்கு. மூன்றாவது வெற்றிதான் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு" என்கிறார் குபேந்திரன்.

4. எடப்பாடி என்ன செய்வார்?

ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால், விரைவில் அந்தத் தேர்தலை நடத்த எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முயலக்கூடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: