You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை வங்கியில் கொள்ளை: 32 கிலோவில் இதுவரை 28 கிலோ நகைகள் மீட்பு
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் நகைக்கடன் கிளையில் சனிக்கிழமை 32 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய சந்தேக நபரான முருகன் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் 10 கிலோ நகையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அந்த வங்கியில் நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டதால், 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள முருகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 15 நபர்களிடம் நான்கு தனிப்படையினர் விசாரணை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை, சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியரான முருகன், தன்னுடன் இரு நபர்களை அழைத்து வந்து வங்கி மேலாளர் மற்றும் பிற அலுவலர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர்.
நகைகளை களவாட முருகன் மற்றும் அவரது நண்பர்கள் திட்டமிட்டதாகவும் இதற்காக வங்கியின் பாதுகாவலருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அவர் மயங்கியதும் பிற ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் வங்கிக் கிளையில் தங்களுடைய நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அந்த வங்கியை முற்றுகையிட்டு தங்களுடைய நகையின் நிலையை கேட்டறிய வந்திருந்தனர்.
வங்கி நிர்வாகம் உறுதி
இந்த நிலையில், நகைகடன் வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நகையை கொள்ளையடித்தகாக சொல்லப்படும் நபர்கள் பற்றிய சிசிடிவிகாட்சிகள் கண்டறியப்பட்டுள்ளதால், நகை மீட்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெடரல் வங்கியில் பணிபுரிந்த ஊழியரான முருகன் என்பவர் தன்னுடன் இரு நபர்களை அழைத்துவந்து வங்கி மேலாளர், பிற அலுவலர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகைகளை களவாட திட்டமிட்ட முருகன் மற்றும் நண்பர்கள், வங்கியின் பாதுகாவலருக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துவிட்டு, அவர் மயங்கியதும், பிற ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, அவர்களை கட்டிப்போட்டு நகைகளை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, நகை ருட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் முருகன் பற்றிய முழுவிவரங்களை சேகரித்துள்ளதாக கூறினார்.
'நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். நகைகளை அடமானத்தில் வைத்த வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். முருகனின் உறவினரான பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகிறோம். அத்துடன், கொள்ளை அடித்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற இடங்களில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்து, அவர்களை கைது செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதனால், கொள்ளைபோன நகைகள் மீட்கப்படும், கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம்,''என்றார்.நகை கொள்ளை தொடர்பாக இதுவரை 15 நபர்கள் மீது விசாரணை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் பரிசாக தரப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
கொள்ளை போன நகைக்கு வங்கியே பொறுப்பு
கொள்ளை போன நகைகளின் பாதுகாப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், ''வங்கியில் வைக்கப்படும் நகைகளுக்கு வங்கிதான் பொறுப்பு. வங்கியின் அலட்சியத்தால் வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கிகள் பணம் செலுத்தவேண்டும். இந்தத் தொகை வங்கி லாக்கரின் ஆண்டு வாடகையின் 100 மடங்குக்கு சமமாக இருக்கும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதோடு, வங்கியில் சிசிடிவி காட்சிகள் 180 நாட்களுக்கு வைத்திருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது,''என்கிறார்.
மேலும் இதுபோன்ற நகை கொள்ளையால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்காக, வங்கிகள் பெரும்பாலும் நகைகளை மீட்பது அல்லது அதற்கான பணத்தை பெற்று தருவதில் முழுகவனம் செலுத்துவார்கள் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்