சுதந்திர தினம்: 'காந்தி பாகிஸ்தானின் பாபு' என்று கோட்சே அளித்த வாக்குமூலத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், HULTON ARCHIVE
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர்
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய துணைக் கண்டம், பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாகப் பிரிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ரத்தம் தோய்ந்த இந்தப் பிரிவினையால் இரு நாடுகளும் புண்பட்டிருந்தன. இருப்பினும் இரு நாட்டு தலைவர்களின் பேச்சில் கசப்பு இருக்கவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளின் சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாமல் பேசப்படும் பிரிவினை மற்றும் ஜின்னா, காந்தி குறித்த சில முக்கியத் தகவல்களை இங்குப் பார்ப்போம்.
முகமது அலி ஜின்னா இந்தியா பற்றி என்ன கூறினார்?
அப்போது பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியாக இருந்தது. அங்கு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் நிறுவனர் மற்றும் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னா, அமெரிக்க தூதர் பால் ஆல்லிங்கிடம் 1948 மார்ச் மாதத்தில், பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் "அமெரிக்கா மற்றும் கனடா போல" இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார்.
சுமார் 9,000 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த இரு நாடுகளிலும் மகிழ்ச்சி நிலவும் பொருட்டு, இவற்றுக்கு இடையே சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தில் ஒத்துழைப்பு இருக்கும் என்பதாக இந்த அறிகுறி இருந்தது.
இந்திய பிரிவினைக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு முகமது அலி ஜின்னா ராய்ட்டர்ஸ் செய்தியாளர் டான் கேம்பிளுக்கு பேட்டி அளித்தார்.
"பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பு மற்றும் நம்பகமான உறவை ஜின்னா விரும்பினார். இந்தியப் பிரிவினை, நிரந்தரப் பகைமை மற்றும் பதற்றம் காரணமாக ஏற்படவில்லை.
மாறாக, பரஸ்பர பதற்றங்களுக்கு அது முற்றுப்புள்ளி வைத்தது என்று அவர் கருதினார்," என்று 1947 மே 22ஆம் தேதி டான் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"இஸ்லாம் உலகுக்கு அமைதியை நிம்மதியை தந்தது"
அவுட்லுக் இதழில் எழுதிய கட்டுரையில், மகாத்மா காந்தியின் பேரனும் 'The Good Boatman: A Portrait of Gandhi and Understanding the Muslim Mind' நூலின் ஆசிரியருமான ராஜ்மோகன் காந்தி, '40களின் பிற்பகுதியிலும், 50களின் தொடக்கத்திலும் காந்தி இருந்திருந்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டிருக்கும்' என்று எழுதியிருந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளரான சுதீந்திர குல்கர்னி, 'மியூசிக் ஆஃப் தி ஸ்பின்னிங் வீல்' என்ற நூலை எழுதியவர். மேற்கத்திய நாடுகள் பயங்கரமான இருளில் இருந்தபோது, கிழக்கில் ஒளிர்ந்த இஸ்லாம் எனும் நட்சத்திரம், கலங்கிய உலகுக்கு ஒளியையும் அமைதியையும் நிம்மதியையும் தந்தது. இஸ்லாம் சண்டையிடும் மதம் அல்ல என்று காந்திஜி கூறினார் என்று குல்கர்னி குறிப்பிட்டுள்ளார்.
"இஸ்லாத்தின் விரைவான பரவல் பலப் பிரயோகம் காரணமாக ஏற்பட்டதல்ல என்ற முடிவுக்கு நான் வந்தேன். மாறாக, அதன் எளிமை, அறிவுபூர்வமான போதனைகள், தீர்க்கதரிசியின் உயர்ந்த ஒழுக்கம் ஆகியவற்றின் காரணமாக பலர் இஸ்லாத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்."


'காந்தி உண்மையில் பாகிஸ்தானின் பாபு (Bapu)'
"காந்திக்கும் ஜின்னாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர அரசுகள் என்ற கொள்கையை காந்தி ஆதரித்தார். ஜின்னாவிடம் "நீங்கள் விரும்பினால் அதை பாகிஸ்தான் என்று அழைக்கலாம்" என்று சொல்லும் அளவுக்கு லாகூர் தீர்மானத்தை அவர் ஏற்றுக் கொண்டார். 'எனவே நான் ஒரு வழியைப் பரிந்துரைத்தேன். அவசியம் என்றால், இரண்டு சகோதரர்களிடையே பிரிவினை நடக்கட்டும்' என்று காந்தி கூறினார்," என்று குல்கர்னி தெரிவித்துள்ளார்.
தான் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் 'இந்தியாவும் பாகிஸ்தானும் எனது நாடுகள்' என்று அறிவித்தார். பாகிஸ்தானுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க மாட்டேன். புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா இரண்டாகப் பிரிந்தாலும், இதயத்தில் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் ஒருவருக்கொருவர் உதவி செய்தும் மதித்தும், வெளியுலகில் ஒற்றுமையாக இருப்போம் என்றும் கூறும் துணிச்சலைக் காட்டினார் என்று குல்கர்னி குறிப்பிட்டார்.
இந்திய அரசு பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55 கோடி ரூபாய் மற்றும் ராணுவ தளவாடங்களைத் தர மறுத்தபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காந்திஜி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் வழங்குவதாக ஜனவரி 16ஆம் தேதி இந்திய அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. இந்தக் 'குற்றத்திற்காக,' 1948 ஜனவரி 30 ஆம் தேதி நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார்.
"காந்தியை (Bapu) பாபு என்று அழைக்கிறார்கள், ஆனால், உண்மையில் அவர் பாகிஸ்தானின் பாபு. அவரது உள் குரல், அவரது ஆன்மீக சக்தி, அவரது தத்துவம், அனைத்தும் ஜின்னாவின் முன் தூளாகிவிட்டன" என்று கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
காந்தி படுகொலைக்குக் காரணமான மற்றுமொரு சம்பவம்
இது தொடர்பான மற்றொரு சம்பவமும் காந்தியின் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான அம்ஜத் சலீம் அல்வி.
பிரிவினையின் போது வங்காள முஸ்லிம்களை இந்துக்களின் வெறுப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக, ஹுசைன் ஷாஹீத் சுஹ்ரவர்தி (கிழக்கு வங்காள முதல்வர்) காந்தியை வங்காளத்திற்கு அழைத்துச் சென்றார்.
"இதனால்தான் வங்காளம் இனப்படுகொலையில் இருந்து தப்பித்தது. காந்தி டெல்லியிலும் ரத்தக்களறியை நிறுத்தினார். இந்தியாவில் இருந்து இந்துக்களைக் கொண்டுவந்து லாகூரில் மாடல் டவுனில் குடியேற்றி, அங்கிருந்து ஒரு முஸ்லிம் குழுவை அழைத்து வந்து அவர்களின் மூதாதையர் வீடுகளில் கொண்டு சேர்க்க காந்தி திட்டமிட்டார்."
"காந்தியின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக சுஹ்ரவர்தி 1948 ஜனவரி இறுதியில் லாகூர் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். இதன் போது அதிகாரிகளைச் சந்தித்து பேசினார். அவர் கிளம்பிச் சென்ற இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு காந்தி படுகொலை செய்யப்பட்டார்."

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES
காந்தியின் படுகொலைக்கு பாகிஸ்தானிலும் இரங்கல்
காந்தியின் மறைவுக்கு பாகிஸ்தானிலும் அதிகாரபூர்வமாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எல்லா அரசு அலுவலகங்களும் 1948 ஜனவரி 31 ஆம் தேதி மூடப்பட்டன. பாகிஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் அன்றைய பதிப்பில் 'நாளிதழின் அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்' என்ற அறிவிப்பு வெளியானது.
பாகிஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் ஃபைஸ் அகமது ஃபைஸ், காந்தியின் மரணம் குறித்து எழுதிய தலையங்கத்தில், 'இந்த நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட இந்தத் தலைவர் தொட்ட உயரத்தை வெகு சில தலைவர்களே எட்டியுள்ளனர்' என்று குறிப்பிட்டார். காந்தியின் மறைவு ஒரு கூட்டு இழப்பு என்பதை எல்லை தாண்டிய நண்பர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம் என்றும் அவர் எழுதினார்.
காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஜின்னா, தான் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "காந்தி மீதான தாக்குதல் மற்றும் அவரது மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும் இந்துக்களிடையே பிறந்த மாமனிதர்களில் அவரும் ஒருவர்," என்று தெரிவித்தார்.
"அவர் தனது மக்களின் முழு மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இது இந்தியாவுக்கு ஒரு மாபெரும் இழப்பு. அவரது மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம்," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், COURTESY THE PARTITION MUSEUM, TOWN HALL, AMRITSAR
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காந்திக்கு அஞ்சலி
1948 பிப்ரவரி 4ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற அமர்வில், அவைத் தலைவர் லியாகத் அலி கான், " நான் ஆழ்ந்த வருத்தத்துடன் காந்திஜியின் துயர மரணத்தைப் பற்றிப் பேச இங்கே நிற்கிறேன். அவர் நம் காலத்தின் மாமனிதர்களில் ஒருவர்" என்று கூறினார்.
"காந்தியடிகள் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாதது அவரது மறைவுக்குப் பிறகாவது நடக்கட்டும். அதாவது, இந்தத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படட்டும் என்று நாம் பிரார்த்தனை செய்வோம்," என்று கூறி அவர் தனது உரையை முடித்தார்.
"ஜின்னா இந்துக்கள் அல்லது இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல"
முகமது அலி ஜின்னா 1948 செப்டம்பர் 11 ஆம் தேதி காலமானார். 1948 செப்டம்பர் 13 ஆம் தேதி, 'தி இந்து 'நாளிதழின் தலையங்கம் 'மிஸ்டர் ஜின்னா' என்ற தலைப்பில் வெளியானது.
காந்திஜிக்குப் பிறகு பிரிக்கப்படாத இந்தியாவின் மிக சக்திவாய்ந்த தலைவர் என்று ஜின்னா நினைவுகூரப்பட்டார்.
"ஜின்னாவுக்கு மனக்கசப்பு இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் (பாகிஸ்தான், இந்தியா) இடையே ஒரு வலுவான நட்பு சாத்தியம் மட்டுமல்ல, அவசியமானது என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை" என்று தலையங்கம் கூறியது.
ஜின்னா 'இந்துக்கள் அல்லது இந்தியாவுக்கு' எதிரானவர் அல்ல என்று குல்கர்னி கூறுகிறார். "1948 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் உள்ள டாக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ஜின்னா, இந்து சமூகத்திடம் 'பதற்றப்பட வேண்டாம், பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டாம், ஏனெனில் பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடாக இருக்கும். இந்துக்களும் முஸ்லிம்களைப் போல சமமான உரிமைகளைப் பெறுவார்கள்' என்று உறுதியளித்தார்," என்று சுட்டிக்காட்டுகிறார்.


இருநாடுகளுக்கு இடையே விசித்திரமான நெருக்கம்
சுதந்திரத்திற்குப் பிறகு ஆரம்பக் காலங்களில் தலைவர்களின் உறவுகள் மட்டுமன்றி, கடந்த காலத்தில் ஒன்றிணைந்து பணிபுரிந்திருப்பதால் அதிகார வர்க்க உறவுகளும் நன்றாகவே இருந்தது என்று பல்லவி ராகவனின் ஆய்வு தெரிவிக்கிறது.
பல்லவி ராகவன் தனது 'Animosity at Bay: An Alternative History of the India-Pakistan Relations, 1947-1952' என்ற புத்தகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஐந்து வருட உறவுகளை ஆய்வு செய்தார்.
பிரிவினையால் எழுந்த பிரச்சனைகள் அதாவது சிறுபான்மையினரின் உரிமைகள் அல்லது மக்கள் இடம்பெயர்ந்த பிறகு விட்டுச் சென்ற சொத்துக்கள் போன்றவற்றுக்குத் தீர்வு காண, இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் விசித்திரமான நெருக்கம் மற்றும் நம்பமுடியாத தீவிர முயற்சிகள் காணப்பட்டன என்று புத்தகம் கூறுகிறது. தெற்காசியாவில் இத்தகைய புரிதல் ஆச்சரியத்தை அளித்தது.

பட மூலாதாரம், KEYSTONE/HULTON ARCHIVE
"பகை நீங்கவில்லை ஆனால் சம்பிரதாயப் போக்கு வந்துவிட்டது"
இருப்பினும் அது வெறும் 'சடங்கு' மட்டுமே என்று வரலாற்றாசிரியர் மெராஜ் ஹசன் கூறுகிறார்.
"ஆரம்பத்தில் [காஷ்மீர் தொடர்பாக] ஒரு போர் நடந்தது. பாகிஸ்தான் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பும் என்று இந்தியத் தலைவர்கள் கூறினர். போர் முடிந்ததும், நேரு-லியாகத் ஒப்பந்தம் இதற்கு வழி வகுத்தது."
இது வெறும் சம்பிரதாயம் என்றும் அது இன்னும் தொடர்கிறது என்றும் மெராஜ் ஹசன் கருதுகிறார்.
"லியாகத்துக்கும் நேருவுக்கும் இடையிலான ஒரு சந்திப்பில் சண்டை ஏற்படும் நிலை உருவானது. மனக் கசப்பு நீங்கவில்லை, ஆனால் சம்பிரதாயம் வந்துவிட்டது."
பிரிவினையை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார் சுதேந்திர குல்கர்னி.
"பாகிஸ்தான் ஒரு தனி மற்றும் சுதந்திர நாடு, அது தொடரும். இந்தியாவில் வாழும் மக்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ஒற்றுமையாகவும் நிலையானதாகவும் ஜனநாயகமாகவும் செழிப்பாகவும் இருக்க வேண்டும் என்று மனதார விரும்ப வேண்டும்."
"வரலாற்றில் இருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டு, காந்தி, ஜின்னாவின் கனவுகளைப் பின்பற்றி நல்ல அண்டை வீட்டாரைப் போல வாழத் தொடங்க வேண்டும்," என்று கூறுகிறார் குல்கர்னி.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













