75ஆவது இந்திய சுதந்திர தினம்: தேசிய கொடியை இடுப்புக்கு கீழ் அணிவது குற்றம் - விதிகள் சொல்வது என்ன?

இந்திய சுதந்திர தினம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டு இது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக, இந்திய அரசு அறிவித்த 'வீடுதோறும் மூவர்ணம்' என்ற திட்டத்துக்குப் பிறகு இன்னும் வேகமாக தேசிய கொடி குறித்த பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. அத்துடன், மூவர்ண கொடியை அடையாளப்படுத்தும் வகையில் படங்களை வரைந்து கொள்வது, கொடியுடன் செல்ஃபி படமெடுப்பது என இந்த திட்டத்தில் கலந்து கொள்வதற்கு வழிமுறைகளையும் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

அப்படியானால், தேசிய கொடியின் மூவர்ணத்தில் உடை அணியலாமா? அதற்கு அரசின் அனுமதி உண்டா? இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பின்னணி என்ன?

இந்தியாவின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வோர் வீட்டிலும் மூவர்ண தேசிய கொடியை பறக்க விடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, மூவர்ண தேசிய கொடி மீதான குடிமக்களின் பற்று ஆழமாகும் என்றும் இது குடிமக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசு தெரிவித்தது.

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் இதற்காக ஒரு திட்டத்தையும் இந்திய அரசு தீட்டியிருக்கிறது. இந்த திட்டத்தின்மூலம், இந்தியாவில் 20 கோடி இல்லங்களில் கொடியேற்றுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 'வீடுதோறும் மூவர்ணம்' (Har Ghar Tiranga ) என்ற தேசிய அளவிலான பிரசாரத்தை இந்திய அரசு துவங்கியது. இதில் குடிமக்களாகிய அனைவரும் பங்கேற்க முடியும்.

எப்படியெல்லாம் பங்கேற்கலாம்

  • வீடுகளில் கொடியேற்றுவது
  • மூவர்ண தேசிய கொடியுடன் செல்ஃபி எடுத்து அனுப்புதல் மற்றும் Har Ghar Tiranga வலைதளத்தில் பதிவேற்றுதல்
  • நண்பர்களுக்கு மூவர்ண கொடி குறித்த செய்திகளை அனுப்புதல்
  • தொப்பிகள், பட்டங்கள் போன்ற பொருட்களில் மூவண்ணத்தை பயன்படுத்துதல்
  • மூவர்ண கொடி இடம்பெற்ற தொப்பி, குல்லா, டர்பன் ஆகிய பிராந்திய பயன்பாட்டு பொருட்களை பயன்படுத்துதல்
  • முகத்தில் மூவர்ணத்தை வரைந்து கொண்டு செல்ஃபி எடுத்து பகிர்தல்
வீடுதோறும் மூவண்ணம்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, வீடுதோறும் மூவண்ணம்
  • மூவர்ணம் கொண்ட உடையணிந்து படமெடுத்தல்
  • வலைதளத்தில் மூவர்ண கொடியை உங்கள் இருப்பிடமாக செல்பேசியில் பின் செய்தல் (அதாவது மேப்பில் லொக்கேஷன் குறிப்பது போல, உங்கள் லொக்கேஷனில் இருந்து நீங்கள் குறிக்க வேண்டும். உங்களைக் குறிப்பதற்கான லோகோவாக இந்திய தேசிய கொடி இருக்கும்)
  • ஏதாவதொரு நினைவுச்சின்னத்தின் முன்பு நின்றுகொண்டு கொடியைப் பிடித்தபடி செல்ஃபி எடுத்தல்

இவற்றின் மூலம் நீங்கள் இந்த பிரசாரத்தில் பங்கு பெறலாம் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

இடுப்புக் கீழ் அணியும் தேசிய கொடி ஆடை

மூவண்ண ஆடை
படக்குறிப்பு, மூவர்ணத்தில் மேலாடை, இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடை

இந்த நிலையில், கொடிகளின் விற்பனை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. சாலையோர கடைகள் முதல் தபால் நிலையங்கள் வரை தேசிய கொடி விற்பனை களைகட்டியுள்ளது.

இதற்கிடையில் இந்த பிரசாரத்துக்காக மூவர்ணத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள், சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கவனிக்க முடிகிறது. இதில் இடுப்புக்கு கீழே அணியும் விதமான உடைகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இப்படி பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டா? இது சட்டபூர்வமானதா?

மேப்பில் பின் செய்தல்

பட மூலாதாரம், harghartiranga.com

படக்குறிப்பு, வரைபடத்தில் குறித்தல்

தேசியகொடியை இப்படி பயன்படுத்தலாமா?

தேசிய கொடியை பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள், இந்தியாவின் கொடி சட்டம் (2002) மற்றும் தேசத்தின் கௌரவத்தை இழிவுபடுத்தல் தடுப்புச் சட்டம் (1971) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டன.

அதன்படி, காலையில் ஏற்றிய தேசிய கொடி, மாலையில் இறக்கப்பட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் கொடி பறக்கக்கூடாது. கையால் செய்யப்பட்ட காதி துணியில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும், உடையாகவோ உடையின் ஒரு பகுதியாகவோ, அலங்காரமாகவோ மூவர்ண கொடியை பயன்படுத்தக்கூடாது ஆகிய அறிவுறுத்தல்கள் இருந்தன.

ஆனால், இந்த விதிகளில் சமீபத்தில் இந்திய அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி, தேசிய கொடி இரவு நேரங்களிலும் பறக்கலாம் என்றும் பாலிஸ்டர் துணிகளால் ஆன, இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தது.

கொடி சட்டம் 2002

பட மூலாதாரம், MHA.NIC.IN

படக்குறிப்பு, கொடி சட்டம் 2002 - திருத்தங்களுக்கு பின்

எவை கூடாது?

திருத்தங்களுக்குப் பிறகான புதிய விதிகளின்படி, இந்திய மூவர்ண தேசிய கொடியை அலங்காரமாகவோ, ஆடையின் பகுதியாகவோ, சீருடையாகவோ பயன்படுத்தக் கூடாது.

எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது;

மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ பின்னலிட்டோ தேசிய கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது.

அதாவது, இந்திய தேசிய கொடியை இடுப்புக்குக் கீழே உடையாக அணிவது, அல்லது உடையின் ஒரு பகுதியாக அணிவது (காலணிகள், இடுப்புப்பட்டைகள்) தேசிய கொடியை அவமதிப்பதாகும்.

தேசிய கௌரங்களை இழிவுபடுத்தல் தடுப்பு சட்டம்
படக்குறிப்பு, தேசிய கௌரங்களை இழிவுபடுத்தல் தடுப்பு சட்டம்

இந்தக் குற்றத்துக்கு, தேசிய கௌரவங்களை இழிவுபடுத்தல் தடுப்பு சட்டத்தின்படி, முதல் முறை மூன்றாண்டு சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். அதன்பின்னர் இதே குற்றங்களை செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு குறைந்தபட்சம் ஓராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை வழங்கப்படும்.

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எவரேனும் செயல்பட்டால் அவர் மீது தேசிய கொடி அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால்.

"தேசியக் கொடியை இடுப்புக்குக் கீழே அணிவது என்பது குற்றம்தான். இடுப்புக்கு மேலே அணிந்தாலும் மரியாதைக்குரிய வகையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு கழுத்தில் பிளேடு செயின் போட்டிருக்கும் ஒருவர் அதில் தேசிய கொடி வைத்திருக்கிறார் என்றால் அது குற்றம்தான். அரசு அறிவிப்பு கொடுக்கும்போது இதனை சேர்த்தே வழங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் படம் எடுங்கள் என்று சொல்லும் பதிவுகளோடு சேர்த்து இடுப்புக்கு மேல் மட்டுமே என்று ஒரு வரியாவது சேர்த்திருக்க வேண்டும்.

அந்த வகையில், அரசு இதை தவறவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்," என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரேவதி.

அத்துடன், "இவ்வளவு நுட்பமாக இதை தேடித்தேடி அமல்படுத்தும் போக்கு இன்றைக்கு இல்லை. எனவே இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலிருக்கிறது. ஆனால், அரசு இதனை கவனித்து உரிய வழிகாட்டுதல்களையோ அல்லது உத்தரவுகளையோ பிறப்பிக்க வேண்டும்" என்கிறார் வழக்கறிஞர் ரேவதி.

"அதேசமயம், சட்டம் தெரியாது என்பதை ஒரு காரணமாக சொல்லக்கூடாது என்கிறார் வழக்கறிஞர் சிம்மாஞ்சனா.

"ஒரு நாட்டின் குடிநபருக்கு தன் சொந்த நாட்டு தேசிய கொடியை போற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டாலே, அதை அவமதிக்கக்கூடாது என்றுதான் பொருள். எப்படியெல்லாம் செய்தால் அவமரியாதை என்று பட்டியலிட்டும் அரசு ஏற்கனவே சட்டம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இதை தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் ஒவ்வொரு குடிநபரின் கடமை என்கிறார்" வழக்கறிஞர் சிம்மாஞ்சனா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: