"என் முடிவிலாவது நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்" - தற்கொலை கடிதத்தில் நிதி நிறுவன முகவர் உருக்கம்

தற்கொலை கடிதம்

"என் முடிவிலாவது என்னை நம்பியவர்களுக்கு பணம் கிடைக்கட்டும்," என்று உருக்கமாக கடிதம் எழுதி செல்ஃபி எடுத்த பிறகு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் வேலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்ற இளைஞர்.

28 வயதே ஆன அந்த இளைஞர், வீரராகவன்- இந்திரா தம்பதியின் மகன். வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மற்றும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர் மற்றும் ஏஜென்ட் ஆக இருந்துள்ளார்.

தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை பெற்று மாத வட்டி தருவதாக அழைத்துக் கொண்ட தமது நிறுவனத்திலேயே முதலீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸின் விசாரணை வளையத்தில் அந்த நிதி நிறுவனம் வந்துள்ளது. அதன் இயக்குநர்கள் தலைமறைவாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணம் கிடைக்கவில்லை. அந்த நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள நிதி நிறுவன கிளைகள் மற்றும் அதன் சில முகவர்களின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர். பிறகு வேலூரில் உள்ள இயக்குநர்களின் வீடுகள் மற்றும் நிதி நிறுவன அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

இதனால் அந்த நிறுவனத்தில் வினோத் குமார் மூலம் முதலீடு செய்தவர்கள், அவரிடம் வட்டிப்பணம் மற்றும் அசல் பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் நிதி நிறுவன மோசடி இளைஞர் தற்கொலை

தற்கொலை கடிதத்தில் விரிவான தகவல்

இதையடுத்து வீட்டுக்கு வந்த வினோத் குமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் எழுதியுள்ள கடிதத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதில், தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டுள்ள வினோத் குமார், அவர்கள் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் என்னை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு உரிய பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் அந்த நிதி நிறுவனத்துக்குக் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தையும் தமது ஆன்லைன் புக்கில் குறிப்பிட்டுள்ளதாகவும் அதற்குரிய கடவுச்சொல்ளையும் வினோத் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தின் கடைசியில், "என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். Sorry to all... அனைத்து ஆவணங்களும் வங்கி லாக்கரில் உள்ளன. போலீஸார் நிதி நிறுவன நிர்வாகிகளைப் பிடித்து முதலீடு செய்தவர்களின் பணத்தை வாங்கி தர வேண்டும் என வினோத் கூறியுள்ளார்.

இதற்கிடையே, வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை காட்பாடி போலீஸ் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இதுபோன்ற சமயத்தில் சட்டப்படி பிரச்னையை அணுகும்படியும் முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :