கனிமொழி எம்.பி: "உயரும் விலைவாசி, வாழ்வாதாரம் தொலைத்த குடும்பங்கள் - இப்படி செய்யலாமா?"

பட மூலாதாரம், SANSAD TV - LOK SABHA
இந்தியாவில் அதிகரித்து வரும் விலைவாசியை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, மதம், இனம், மொழியின் பெயரால் அரசியல் செய்வது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மக்களவையில் பேசியிருக்கிறார், திமுக எம்.பி கனிமொழி.
மக்களவையில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் விலைவாசி மீதான விவாதம் அவை விதி 193இன் கீழ் நடைபெற்றது. அப்போது அவையை மூத்த உறுப்பினர் கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி வழிநடத்தினார்.
இந்த விவாதத்தின் முடிவில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவருக்கு முன்னதாக அவையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் விலைவாசி மீதான தங்களுடைய கருத்துக்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினருமான கனிமொழி இந்த விவாதத்தில் பங்கேற்று தமது முழு உரையையும் தமிழிலேயே பதிவு செய்தார். அதன் விவரம்:
பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் தூபே கருப்புப் பணம் பற்றி பேசினார். பாஜக ஆளாத மாநிலங்களில் கருப்புப்பணம் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டதாக எடுத்துச்சொன்னார்.
எனக்கு ஒரேயொரு சந்தேகம்தான். 2016இல் பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்து அதற்குப் பிறகு கருப்புப் பணம் என்பதே இல்லாமல் ஆகி விடும் என்று (மத்திய அரசு) அறிவித்தார்கள். அதற்குப் பிறகும் இந்த நாட்டில் கருப்புப் பணம் எப்படி உலவுகிறது என்பதை அவர் எனக்குச் சொன்னால் வசதியாக இருக்கும்.
கனிமொழி இவ்வாறு தெரிவித்தபோது, அவையில்அவருடன் இருந்த சக எதிர்கட்சி உறுப்பினர்கள், "அவமானம், அவமானம்" என்று குரல் கொடுத்து மேஜையைத் தட்டினர்.
இதையடுத்து தமது பேச்சைத் தொடர்ந்த கனிமொழி, "பணமதிப்பிழப்புக்குப் பிறகு இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் சரிந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கக் கூடிய அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் அரசின் கொள்கை குறிப்புரையில், பணமதிப்பிழப்பால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையைச் சேர்ந்த 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன என பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வாழ்வாதாரத்தை தொலைத்த குடும்பங்கள்
எத்தனையோ பேர், அந்த பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் வரிசையில் பணம் எடுக்க காத்திருந்தே உயிரிழந்திருக்கிறார்கள். அப்போது எத்தனையோ இன்னல்களை இந்த நாடு சந்தித்தது.
அதற்கெல்லாம் காரணம், "இதற்குப் பிறகு கருப்புப் பணம் இருக்காது," என்று இவர்கள் (மத்திய அரசு) சொன்னார்கள். அதை நம்பி மக்கள் பொறுமையாக காத்திருந்தார்கள்.
"ஆனால், இப்போதும் கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என்று இதே அரசாங்கம் சொல்லி வரும்போது இத்தனை இன்னல்களையும் இத்தனை பொருளாதார சரிவையும் நாங்கள் ஏன் சந்தித்தோம் என்பதற்கு அவர்கள் ஒரு விளக்கத்தை அளித்தால் அதுதான் உயிரிழந்திருக்கக் கூடிய மக்களுக்கு நியாயமாக இருக்கும்," என்று கனிமொழி குறிப்பிட்டார்.
மோதிக்கு கடிதம் எழுதிய குழந்தை
"இன்று பிரதமர் மோதிக்கு உத்தர பிரதேசத்தின் கனூஜ் மாவட்டத்தில் இருந்து ஒரு குழந்தை இந்தியில் கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், என் பெயர் க்ரிதி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் விலை உயர்ந்து விட்டது. மேகியின் விலையும் உயர்ந்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் கூட அடிக்கிறார். நான் என்ன செய்வது? மற்ற குழந்தைகள் பென்சில் வாங்க முடியாததால் என் பென்சிலை திருடுகிறார்கள்," என்று கனிமொழி கடித விவரத்தை ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டினார்.

இந்த குழந்தைக்கு என்ன பதிலை அரசாங்கம் தரப்போகிறது என்று கனிமொழி கேள்வி எழுப்பியபோது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அப்போது கனிமொழி, "ஒன்று தமிழில் சொல்லுங்கள் இல்லை ஆங்கிலத்தில் பேசுங்கள்," என்றார்.
தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால், "சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சர் பேசும்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இப்போது நாங்கள் பேசும்போது ஆளும் கட்சியினர் குரல் எழுப்புகிறார்கள்," என்று கனிமொழி குறிப்பிட்டார்.
"அன்றாடம் பிழைப்பதே போராட்டம்தான்"
பிறகு அவையில் அமைதி திரும்பியதும், இப்படி அடித்தட்டில் இருக்கக் கூடிய மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையே போராட்டம் ஆகக் கூடிய நிலையை இந்த ஆட்சி உருவாக்கி வைத்திருக்கிறது என்று கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆட்சி பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், 2014இல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71, டீசல் விலை ரூ. 53, எல்பிசி சிலிண்டர் விலை ரூ. 414. இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரூ. 1,200 வரை விற்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100ஐ தாண்டி விட்டது. டீசல் விலை ரூ. 100ஐ நெருங்குகிறது என்று கனிமொழி சுட்டிக்காட்டினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
நான் டெல்லிக்கு வந்து கற்றுக் கொண்டே ஒரே வார்த்தை ஆம் ஆத்மி. அந்த ஆம் ஆத்மி அதிகம் பயன்படுத்தக் கூடிய இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றில் இருந்து இரண்டு லிட்டர் வரை பெட்ரோல் போடும் தேவை உள்ளது. வேலைக்கு சென்று வருவதானால் அதுவே மாதத்துக்கு ரூ. 15 ஆயிரம் ஆகி விடும். கொரோனா தாக்கத்தின்போது அரசாங்கம் எம்பிக்களுடைய சம்பளத்தை குறைத்தது. தனியார் நிறுவனங்கள் இதைத்தாண்டி செய்யும்.
ஆனால், எத்தனையோ தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்து கொண்டிருந்தவர்களுடைய வருமானத்தை பாதியாகக் குறைத்தன. பல பேர் வேலை இழந்தார்கள். இந்த நிலையில், மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கக் கூடிய குடும்பத்தில் ரூ. 15 ஆயிரத்தை பெட்ரோல், டீசல், எல்பிஜிக்காக குறைக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தால் எப்படி வாழ முடியும்? அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போதும் தொடர்ந்து அதிகரிக்கிறது என்று கனிமொழி கூறினார்.
இதைத்தொடர்ந்து எண்ணெய் விலை உள்ளிட்ட அத்தியாவசி பொருட்களின் விலை பட்டியலை அவர் பட்டியலிட்டார்.
மூன்று வேளையும் சட்னி அரைத்தா சாப்பிட முடியும்?

பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் தூபே பேசும்போது நாட்டில் வெங்காயம் விலை குறைந்து விட்டது, தக்காளி விலை குறைந்து விட்டது என்றார். இந்த இரண்டையும் மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் மூன்று வேளையும் சட்னி அரைத்து சாப்பிட முடியுமா? அந்த குடும்பத்தில் ஒரு உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை வாங்கக் கூட முடியாத நிலையில் ஒரு தாய் இருக்கிறார்.
தேவைப்படும் மக்களுக்கு மானியத்தில் சிலிண்டர் தருகிறோம். அதனால், பணம் இருப்பவர்கள் தங்களுடைய மானிய உரிமையை விட்டுக் கொடுங்கள் என்று கூறினீர்கள். உங்களுடைய வாக்குகளை நம்பி பலரும் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.
ஆனால், இன்று பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் வந்து சேர வேண்டிய சிலிண்டர் மானியம் கூட முறையாக வந்து சேருவதே இல்லை என்பதுதான் உண்மை, நிதர்சனம்.
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அதன் அறிக்கையில், இந்தியாவில் 23 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் நிலைக்கும் 3.2 கோடி இந்தியர்கள் நடுத்தர நிலையில் இருந்து ஏழ்மை நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை.
கார்பரேட்டுகளுக்கு வாரி வழங்கப்படும் வரிச் சலுகைகள்
ஆனால், எல்லோரும் இப்படி கிடையாது. இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு தொழிலதிபர், உலகத்திலேயே நான்காவது பெரும் பணக்காரராக இருக்கிறார். பில் கேட்ஸை தாண்டி ஒரு இடத்தில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். அதனால் சில பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், அந்த கார்பரேட் தொழிற்துறைகளுக்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. நாங்கள் தொழில் வளர்ச்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அடித்தட்டிலேயே வாழும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயங்கக் கூடிய இந்த ஆட்சி, இப்படி இருக்கக் கூடிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டு, அவர்களை வளர்த்தெடுத்து, வார்த்தெடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் வேலையற்ற நிலையை இந்த நாட்டிலே சந்தித்தோம். ஆனால், அதன் பிறகும் வேலை கிடைப்பது என்பது சரிந்து கொண்டே வந்தது. அக்டோபரில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் வேலை இல்லாத நிலையை உருவாக்கியிருப்பதை சந்தித்துப் பார்த்தால், இந்த நாட்டில் இருக்கக் கூடிய இளைஞர்களுடைய எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி நம் முன்னே அச்சுறுத்தலாகவும் பூதாகரமாகவும் விரிந்து 'எங்களுடைய எதிர்காலம் என்ன' என்று அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அந்த நியாய உணர்வு இல்லாமல் நாம் வெறும் அரசியலை மட்டுமே வைத்துக் கொண்டு, வெற்றி தோல்வியை வைத்துக் கொண்டு காழ்ப்புணர்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு ஆட்சியை நடத்த நினைப்பது என்பது நிச்சயமாக இந்த நாட்டுக்கு அது நியாயமாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிரித்தாளும் அரசியல் வேண்டாம்
நாம் மிகப்பெரிய நினைவுச் சின்னங்களை உருவாக்குகிறோம். ஒற்றுமையின் சின்னத்தை உருவாக்கி உலகம் முழுவதும் மார்தட்டிக் கொள்கிறோம்.
ஒற்றுமையின் சின்னத்தை உருவாக்கிக் கொண்டு, மக்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மொழியின் பெயரால் பிரித்தாள நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருபுறம் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வருமானத்தை அதிகரிக்க வழியே கிடைப்பதில்லை. உணவுப்பொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும் வேளையில் அதைக் குறைக்க எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த மக்கள் எப்படி வாழ்வார்கள் என்பதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனிமொழி கூறினார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு கடன் கொடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தயாராக இல்லை என்று பாஜக உறுப்பினர் கூறினார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு முதலில் ஒன்றிய அரசு (மத்திய அரசு) தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கொடுத்தாலே போதும். நீங்கள் எங்களுக்கு வேறு எந்த கடனையும் தர வேண்டாம். எங்கள் நிதியைக் கொண்டே எங்களால் வளமான மாநிலத்தை வழங்க முடியும் என்று கனிமொழி கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












