You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விரைவாக தீர்ப்பு வழங்கியதால் இடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நீதிபதி
நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவாக தீர்ப்பளித்த காரணத்தால் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி பிகார் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "மின்னல் வேகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பளித்து, மிக விரைவாகப் பதவி உயர்வு கோரும் எண்ணத்தோடு செயல்பட்டதாகக் கூறி தம்மை பட்னா உயர்நீதிமன்றம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது எனத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் மாவட்ட நீதிபதி எஸ்.கே.ராய்.
இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு ஏற்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான இரண்டு வழக்குகளை மிக விரைவாக விசாரணை செய்து, ஒரு வழக்கை ஒரே நாளில் விசாரித்து ஆயுள் தண்டனையும் இரண்டாவது வழக்கில் 4 நாள்களில் விசாரணை நடத்தி மரண தண்டனையும் விதித்ததால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவில் இரண்டு வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பளித்ததை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தாலும், இதுவொரு தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், இவர் 2014ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு மறுக்கப்பட்டதிலிருந்து இந்த விவகாரம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேவைப்பட்டால் 'யோகி மாதிரி'யை கர்நாடகாவில் பின்பற்றுவோம்" - கர்நாடக முதல்வர்
கர்நாடகத்தில், பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பாசவராஜ் பொம்மை வியாழக்கிழமையன்று, "யோகி பாணியில்" நடவடிக்கை எடுக்கத் தயார் என்று கூறியுள்ளதாக தி இந்திய எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர், "உத்தர பிரதேசத்தின் நிலைமைக்கு, யோகி (ஆதித்யநாத்) சரியான முதல்வர். அதேபோல கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலையைச் சமாளிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவையனைத்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், யோகி மாதிரி அரசு கர்நாடகாவிலும் வரும்," என்றார்.
கர்நாடகாவில் 'யோகி மாதிரி' ஆட்சி நடத்த வேண்டும் என்றும், அந்த மாநிலத்திலுள்ள தனது கட்சித் தொண்டர்களின் உயிரைக் காக்கத் தவறியதாகவும் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவாளர்களின் ஒரு பிரிவினர் கோருவது பற்றி முதல்வர் பொம்மை இப்படி பதில் அளித்தார்.
'யோகி மாதிரி' என்பது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் புல்டோசர்களை பயன்படுத்தி வீடுகளை இடித்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. பாஜக தொண்டர்களின் சில சமூக ஊடகப் பதிவுகள், ரௌடி விகாஸ் துபே என்கவுன்டரையும் குறிப்பிட்டு, அதையே கர்நாடகாவிலும் பின்பற்றும்படி முதல்வரை வலியுறுத்தியது.
நெட்டாரு என்ற 32 வயது பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர் செவ்வாய்க்கிழமை இரவு கோழிக்கடையை மூடிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்கள், மாநிலத் தலைவரின் வாகனத்தைக் குறி வைத்ததோடு, தங்கள் ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பித்ததன் மூலம் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.
வியாழக்கிழமையோடு பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், அதற்கான விழாவை ரத்து செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முதல்வர், தனது அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மதிப்பெண்ணை வழங்கிக்கொண்டார்.
பயங்கரவாத எதிர்ப்புப் படை, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, தேசவிரோத சக்திகள் மற்றும் அவர்களுடைய செயல்பாடுகளைச் சமாளிக்க அரசு சிறப்பு கமாண்டோ பிரிவு கொண்டுவரப்படும் என்றார் பொம்மை.
அமெரிக்காவில் கிடைத்த 100 ஆண்டுகளுக்கு முந்திய செம்பியன் மாதேவி சிலை
நாகப்பட்டினத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன, சோழ அரசி செம்பியன் மாதேவி சிலை தற்பொது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஐம்பொன் சிலை செம்பியன் மகாதேவி என்ப ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.
போலீஸ் சிலை கடத்தல் தடுப்புப் பிடிவில், இ.ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரில், இது 1920-களில் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
2015-ஆம் ஆண்டு வாஷிங்டனிலுள்ள ஆர்தர் எ.சாக்லர் கேலரியில் இது போன்ற நிறைய சிலைகளைப் பார்த்ததாகவும் தமது புகாரில் கூறியுள்ளார் ராஜேந்திரன். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைமை பதவியில் இருக்கும் ஜெயந்த் முரளி, இதை விசாரித்து சிலை வாஷிண்டனில் இருப்பதை உறுதி செய்தார்.
"புகார் அளித்தவர், இந்தச் சிலை திருடப்பட்டது 1959 என்று கூறினாலும், கோயிலில் இருந்து 1929-ஆம் ஆண்டே திருடப்பட்டுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டது.
மேலும், 1929-ஆம் ஆண்டு ஹகோப் கெவோர்கியன் என்பவர், நியூயார்க்கிலுள்ள ஃப்ரீயர் கேலரி ஆஃப் ஆர்ட் என்ற இடத்திலிருந்து இந்த சிலையை வாங்கியுள்ளார். 1962-ஆம் ஆண்டில் ஹகோப் உயிரிழந்தார். அவர் எங்கு, எப்போது, யாரிடமிருந்து இந்தச் சிலையை வாங்கியிருந்தார் என்பது இனிமேல்தான் விசாரிக்கப்பட வேண்டும்," என்றும் கைலாசநாதர் கோயிலில் இப்போது வைக்கப்பட்டுள்ள சிலை போலியானது என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்