You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு
ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் காணாமல் போனது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
வழக்கின் பின்னணி
தற்போது ஜெர்மனியில் உள்ள சாக்ஸோனியில் பிறந்த பார்த்தலோமியோ ஸீகன்பால்க், 1706ஆம் ஆண்டு செப்டம்பரில் தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்தார். விரைவிலேயே அங்கு ஓர் அச்சகத்தை நிறுவிய அவர் தமிழ் மொழி, இந்திய மதம், கலாசாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டார். 175ல் புதிய ஏற்பாடு இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது அங்கிருந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
அங்கிருந்த பாதிரியார்களில் ஒருவரான ஸ்வார்ட்ஸ் பாதிரியா் தஞ்சாவூரின் அரசராக இருந்த துளஜி ராஜா சரபோஜியிடம் இதன் பிரதி ஒன்றைக் கொடுத்தார். இந்தப் பிரதி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் இருந்த சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் துவக்கத்தில் இந்த பைபிள் காணாமல் போனது. இதையடுத்து அக்டோபர் 10ஆம் தேதி சரபோஜி அரண்மனையின் துணை நிர்வாகி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில், அந்த பைபிள் காணாமல் போய்விட்டதாக புகார் ஒன்றை அளித்தார். கண்டுபிடிக்க முடியாத வழக்காக கருதப்பட்டு, அது மூடப்பட்டது.
இதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுத் துறையிடம், இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கில் மீண்டும் தேடுதல் வேட்டையைத் துவங்கியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு.
சரஸ்வதி மகாலின் பார்வையாளர் வருகைப் பதிவேட்டை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆராய்ந்தபோது 2005ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சில வெளிநாட்டவர் வந்திருப்பதை அறிந்தனர். அவர்கள் ஸீகன்பால்க் தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்திருந்தனர். இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள், சேகரிப்பாளர்களின் இணைய தளங்கள், ஸீகன்பால்க் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவற்றின் இணையதளங்கள் ஆராயப்பட்டன.
பல நாட்கள் நடந்த ஆய்வுக்குப் பிறகு லண்டனில் உள்ள மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இந்த பைபிள் இருப்பது கண்டறியப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போன பைபிளின் படத்தை வைத்துப் பார்த்தபோது, மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இருந்த பைபிளும் இதுவும் ஒன்று எனத் தெரியவந்ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது. இந்த பைபிளில் சரபோஜி ராஜாவின் கையெழுத்து இருந்ததையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போன பைபிள் அதுதான் என உறுதிசெய்யப்பட்டதாகவும் விரைவிலேயே யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் அந்த பைபிள் மீட்கப்பட்டு, சரஸ்வதி மகாலில் வைக்கப்படுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது.
தற்போது இதற்கான முயற்சிகளைத் துவங்கிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்