'அரசு ஊழியர்கள் அபிஷேகம் செய்ய வேண்டும்' - உத்தரகாண்ட் அமைச்சரின் உத்தரவால் ஏற்பட்ட சர்ச்சை

ரேகா ஆர்யா

பட மூலாதாரம், REKHA ARYA

    • எழுதியவர், ராஜேஷ் டோப்ரியால்
    • பதவி, டேராடூனில் இருந்து பிபிசி ஹிந்தி சேவைக்காக

உத்தரகாண்டின் மகளிர் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தனது உத்தரவுகள் மற்றும் அறிக்கைகளுக்காக தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.

அவரது துறையின் எல்லா ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சிவாலயங்களில் நீர் அபிஷேகம் செய்யவேண்டும் என்று அவர் பிறப்பித்த உத்தரவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்துப்போயுள்ளனர்.

முன்னதாக, பரேலியில் உள்ள அமைச்சரின் தனியார் இல்லத்தில் நடைபெறும் மத நிகழ்வில் கலந்து கொள்ள அவரது துறை அதிகாரப்பூர்வ உத்தரவையும் பிறப்பித்திருந்தது. இதில் சர்ச்சை ஏற்பட்டபோது, யாரையும் நெற்றியில் துப்பாக்கியை வைத்து வரச் சொல்லவில்லை என்று ரேகா ஆர்யா கூறினார்.

'சிவாலயங்களில் ஜலாபிஷேகம் செய்யுங்கள்'

மகளிர் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பாலின சமத்துவமின்மைக்கு எதிராக ஹரித்வாரின் ஹர் கி பெளடியில் இருந்து காவடி யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். அன்றைய தினம் அவர் சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவில், 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' (மகளை காப்பாற்றுங்கள், மகளை படிக்க வையுங்கள்) திட்டத்திற்கு ஆதரவாக காவடி யாத்திரை நடத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

மேலும் அந்த உத்தரவில், "இந்த சங்கல்பத்தை நிறைவேற்றும் வகையில், 2022 ஜூலை 26 ஆம் தேதி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் எல்லா மாவட்ட அலுவலர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி, மினி ஆங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் தங்கள் அருகாமையில் உள்ள சிவன் கோவில்களில் ஜலாபிஷேகம் செய்து இந்தப்புனிதமான பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லவேண்டும். இது தொடர்பான புகைப்படங்களை , மாவட்ட அலுவலர்களின் வாட்சப்பில் துறைசார்ந்த மின்னஞ்சல் முகவரியுடன் அனுப்பி, அமைச்சகத்தின் சங்கல்பத்தை நிறைவேற்றுங்கள்,"என்று கூறப்பட்டிருந்தது.

சமரச முயற்சி

உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர் கூட்டு கவுன்சில் தலைவர் அருண் பாண்டே இந்த உத்தரவு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். காவடி யாத்திரை அல்லது எந்த ஒரு மத நடவடிக்கையும் முற்றிலும் தனிநபரின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அது தனிப்பட்ட முறையில் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், களத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பெண் பணியாளர்கள் சிலர், இடைப்பட்ட பாதையை கண்டறிய தயாராக உள்ளனர்.

டேராடூனில் உள்ள புலகிவாலா-3 அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி ஊழியராக ஃபமிதா காதூன் பணியாற்றி வருகிறார். அவருக்கு சனிக்கிழமை காலை அங்கன்வாடி பணியாளர்களின் வாட்சப் குழுவில் அமைச்சரின் உத்தரவு கிடைத்தது.

அரசு உத்தரவைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், ஒரு வழியை தான் கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார். அவரது சக அங்கன்வாடி பணியாளர்கள் சிவலிங்கத்திற்கு தண்ணீர் அபிஷேகம் செய்தபிறகு, அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்தார்.

தனியார் மத நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு

ஜூலை 22 அன்று ஹரித்வாரில் உள்ள ஹர் கி பெளடியில், காவடி யாத்ரீகர்கள் மீது உத்தரகாண்ட் அரசு சார்பில் மலர்கள் பொழியப்பட்டன.

பட மூலாதாரம், DIPR UTTARAKHAND

படக்குறிப்பு, ஜூலை 22 அன்று ஹரித்வாரில் உள்ள ஹர் கி பெளடியில், காவடி யாத்ரீகர்கள் மீது உத்தரகாண்ட் அரசு சார்பில் மலர்கள் பொழியப்பட்டன.

முன்னதாக ஜூலை 20ஆம் தேதி ரேகா ஆர்யாவிடம் இருந்து அரசு அழைப்பு கடிதம் வந்ததில் தகராறு ஏற்பட்டது. உணவு மற்றும் பொதுவிநியோகத்துறையின் கூடுதல் ஆணையர், பரேலியில் உள்ள அமைச்சர் ரேகா ஆர்யாவின் சொந்த இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மத நிகழ்ச்சிக்கு எல்லா அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் அழைத்திருந்தார்.

அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பு கடிதத்தில், அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த அழைப்பு கடிதத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பகிரங்கமானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கோரி மாநில காங்கிரஸ் தலைவர் கரண் மஹ்ரா, முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

ஒரு நபரின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி அல்லது பொது நிகழ்ச்சிக்கு சம்மந்தப்பட்டவர் அழைப்புவிடுக்கலாம். ஆனால் அரசின் உயர் அதிகாரி மூலம் தங்கள் கீழ் பணிபுரிபவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார் அவர்.

இந்த கடிதம், ஒரு அரசு கடிதம் என்றும் அவர் கூறினார். "மாநிலத்தில் மழை பெய்துவருகிறது. காவடி யாத்திரை நடந்து வருகிறது. அதிகாரிகளும் ஊழியர்களும் தங்கள் இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று முதல்வரே கூறும்போது, பணியாளர்களை எப்படி பரேலிக்கு வரச் சொல்கிறார்கள்? இது முதல்வரின் உத்தரவை மீறிய செயலாகும். இது ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கும், ஊழலை ஊக்குவிக்கும்,"என்று கரண் மஹ்ரா குறிப்பிட்டார்.

'நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து அழைக்கவில்லை'

ரேகா ஆர்யா

பட மூலாதாரம், REKHA ARYA

காங்கிரஸின் எதிர்ப்பிற்குப் பிறகு, செய்தியாளர்கள் ரேகா ஆர்யாவிடம் அவரது கருத்தை அறிய விரும்பியபோது, அவர் மற்றொரு சர்ச்சையை உருவாக்கினார்.

"ரேகா ஆர்யா அழைப்பிதழ் கொடுத்துள்ளார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைக்கவில்லை. அலுவலகம் அழைப்பிதழ் கொடுத்துள்ளது. இது தன்னார்வமானது. இந்தப்புண்ணிய காரியத்திற்கு நீங்கள் வரவிரும்புகிறீர்களா, இல்லையா என்பது உங்கள் சொந்த விருப்பத்தை பொருத்தது. இதில் கட்டாயம் எதுவும் இல்லை,"என்று ரேகா ஆர்யா கூறினார்.

ரேகா ஆர்யாவின் கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கரிமா மெஹ்ரா தசோனி கடுமையாக பதிலளித்துள்ளார். "நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள். குறைந்தபட்சம் பதவியின் கண்ணியத்தையாவது காப்பாற்றுங்கள். ஏன் குண்டர்கள் பயன்படுத்தும் மொழியில் பேசுகிறீர்கள்" என்றார்.

ரேகா ஆர்யா தொடர்ந்து செய்திகளில் இடம்பெறுவதற்கும், அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்ளவும் முயற்சி செய்வதாக தசோனி கூறினார். சமீபத்திய உத்தரவுகளும் அறிக்கைகளும் அவரது இந்த இயல்பை விவரிக்கின்றன என்றார் அவர்.

இதுபோன்ற முடிவுகளைப்பார்க்கும்போது, இந்த அமைச்சர்கள் அறியாமை நிறைந்தவர்களா அல்லது குழப்பவாதிகளா என்பது புரியவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் யோகேஷ் பட் குறிப்பிட்டார்.

ரேகா ஆர்யா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஜூலை 20 புதன்கிழமையன்று காவடி யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வந்த சிவ பக்தர்களின் கால்களைக் கழுவி கங்கா ஜலம் அளித்து வரவேற்றார்.

பட மூலாதாரம், DIPR UTTRAKHAND

படக்குறிப்பு, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஜூலை 20 புதன்கிழமையன்று காவடி யாத்திரைக்காக ஹரித்வாருக்கு வந்த சிவ பக்தர்களின் கால்களைக் கழுவி கங்கா ஜலம் அளித்து வரவேற்றார்.

அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்களுடன் அழைப்புக் கடிதங்கள் வந்துள்ளன. ஆனால் எல்லா ஐஏஎஸ்களும் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று கூறி உணவுத் துறையின் கூடுதல் ஆணையர் பி.எஸ். பாங்தி தனது உத்தரவில் சிறந்த புரிதலைக் காட்டியுள்ளார் என்று யோகேஷ் பட் கூறுகிறார்.

ரேகா ஆர்யாவுக்கும், அவரது துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இடையே நல்ல ஒத்திசைவு இல்லை., உணவுத் துறையில் சில அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக ரேகா ஆர்யா தனது துறையின் செயலரான ஐஏஎஸ் சச்சின் குர்வேயுடன் ஜூன் மாதம் சண்டையிட்டார்.

முன்னதாக, திரிவேந்திர சிங் ராவத், தீர்த் ராவத் மற்றும் புஷ்கர் சிங் தாமி ஆகியோரின் ஐந்தாண்டு பதவிக் காலத்தில், இணையமைச்சராக (சுயேச்சைப் பொறுப்பு) இருந்த ரேகா ஆர்யா, தனது துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் பலமுறை மோதியுள்ளார். மூத்த அதிகாரி ராதா ரதூரி, சௌஜன்யா, ஜர்னா காம்டான், சுஜாதா சிங், சவின் பன்சல், ஷண்முகம் ஆகியோருடன் ரேகா ஆர்யாவுக்கு ஏற்பட்ட தகராறுகள் அதிகரித்து, பல அதிகாரிகள் அவருடன் பணிபுரிய மறுத்துவிட்டனர்.

ஆனால், இந்த முறை ரேகா ஆர்யாவின் அந்தஸ்து அதிகரித்து அவர் கேபினட் அமைச்சராகியுள்ளார். கூடவே சமீபகாலமாக அவர் பிறப்பித்த உத்தரவுகளாலும், அறிக்கைகளாலும் அவர் தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: