டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்: "தவறான குற்றச்சாட்டுகளால் அழுத்தத்தில் இருக்கிறேன்" - உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி

- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட விவகாரத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு காவல்துறை உளவுப்பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை தமிழ்நாடு காவல்துறையின் மதுரை க்யூ பிரிவு விசாரித்து வருகிறது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் காவல்துறையில் முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர முன்னனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே. அண்ணாமலை, மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தார்.
போலி ஆவண கடவுச்சீட்டுகள் தொடர்பான வழக்கை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இந்த விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை சனிக்கிழமை மாலையில் வெளியிட்டது. அதில் இந்த வழக்கில் எத்தனை பேர் விசாரிக்கப்பட்டனர், எத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எந்தெந்த துறைகளில் எல்லாம் குற்றவியல் நடவடிக்கைக்கான முன்னனுமதி பெறப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் இருந்தன. "விரைவில் நீதிமன்றத்தில் க்யூ பிரிவு சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்," என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற செய்திக்குறிப்பை ஒரு மாநில அரசு வெளியிடுவது அரிதான செயலாக கருதப்படுகிறது.
அண்ணாமலை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில், நூற்றுக்கணக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட நடவடிக்கையில், கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் செய்த தவறை மதுரை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையிட தவறிவிட்டார் என்பதும் ஒன்று. "இதை ஒன்றிரண்டு போலி ஆவண கடவுச்சீட்டு மோசடி என்று கருதி கடந்து போய் விட முடியாது," என்றும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலிலும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தொடர்புபடுத்தும் சில குற்றச்சாட்டுகளை அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.


1995ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், மதுரை நகர காவல் ஆணையராக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கூடுதல் டிஜிபி அந்தஸ்தை பெற்றதால், அதே பொறுப்பு கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.
அடுத்த ஒரு மாதத்தில் அவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைந்திருக்கும் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபி ஆக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பிறகு 2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்ததையொட்டி அவரை கோயம்புத்தூர் நகர காவல் ஆணையர் ஆக தேர்தல் ஆணையம் நியமித்தது.
இந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு அமைந்த திமுக ஆட்சியில் டேவிட்சன் காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே அவர் அந்த பிரிவில் டிஐஜி, ஐஜி ஆகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினை
இந்த நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய டேவிட்சன் தேவாசீர்வாதம், இந்த விவகாரத்தில் தமது தரப்பில் எவ்வித தவறோ, முறைகேடோ நடக்கவில்லை என்று தெரிவித்தார். அவரிடம் நடந்தது என்ன என்பதை விவரிக்கக் கேட்டோம்.
"கடவுச்சீட்டு சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் ஒருவர் சில இடைத்தரகர்களுடனும் விண்ணப்பதாரர்களுடனும் சேர்ந்து கொண்டு மோசடி முகவரி அல்லது ஆளே இல்லாத முகவரி விண்ணப்பங்களை 'சரியான தகவல்' என்று குறிப்பு எழுதி அனுப்பியுள்ளார். அதை அவரது மேலதிகாரியான ஆய்வாளர், உதவி ஆணையர் அப்படியே மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த விண்ணப்பங்களை முகாம்களில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் செய்தனர் என்பது பின்னரே தெரிய வந்தது," என்று டேவிட்சன் தெரிவித்தார்.
இந்த மோசடி எப்படி உங்களுடைய கவனத்துக்கு தெரிய வந்தது என்று கேட்டோம்.
"சம்பந்தப்பட்ட மண்டல கடவுச்சீட்டு அதிகாரி என்னை சந்தித்து சில கடவுச்சீட்டுகளின் விண்ணப்ப தகவல்கள் சந்தேகத்துக்குரியதாக உள்ளன. ஒரு காவலரின் செயல்பாடு சந்தேகமாக உள்ளது என்று தெரிவித்தார். அவரிடம் முறைப்படி புகார் அளிக்குமாறு கூறினேன். ஆனால், மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறி அந்த அதிகாரி சென்றுவிட்டார். இருந்தாலும், சந்தேகம் எழுந்ததால் சம்பந்தப்பட்ட காவலரை ஆயுதப்படைக்கு மாற்றினேன். நான் ஆணையராக இருந்த காலத்தில் இது தொடர்பாக எந்த அறிக்கையையும் கேட்டுப்பெறவில்லை. பிறகு கொரோனா பரவல் தாக்கம் மாநிலத்தில் அதிகமாக இருந்தது. 2020ஆம் ஆண்டு ஜூலையில் மதுரையில் இருந்து பணி மாறுதலில் சென்றேன்," என்று டேவிட்சன் விவரித்தார்.
இதற்கிடையே, இந்திய உளவுத்துறை துப்பு கொடுத்ததன் பேரில், போலி ஆவணங்கள் அடிப்படையில் பெறப்பட்ட கடவுச்சீட்டு விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு விசாரிக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
அந்த பிரிவினர்தான் சில இடைத்தரகர்களை கைது செய்தனர். கடவுச்சீட்டு வழங்கலில் தொடர்புடைய கடவுச்சீட்டு அலுவலர்கள், காவலர்களின் பங்கு குறித்து க்யூ பிரிவு விசாரித்தது. ஆனால், தாமதமாகத்தான் அதன் விசாரணை தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.
"இலக்கு வைக்கப்படுகிறேன்"
"எனது காவல் பணிக்காலத்தில் எந்த நிலையிலும் நேர்மை தவறி நடந்ததில்லை. எல்லா நிலையில் இருப்பவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்புடன் இருப்பது எனது வழக்கம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது எனது செயல்பாட்டைப் பிடிக்காதவர்கள் என் மீதான காழ்ப்புணர்ச்சியில் என்னை களங்கப்படுத்தும் வகையில் அவதூறுகளை பரப்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.
"இந்த கடவுச்சீட்டு விவகாரம் பேசுபொருளானதில் இருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் மட்டுமின்றி எனது குடும்பத்தாரும் மிகுந்த உளைச்சலில் உள்ளனர். விருப்ப ஓய்வு பெற்று விடலாம் என்று கூட நினைக்கிறேன். அந்த அளவுக்கு தினம், தினம் என்னைப்பற்றி சந்தேகம் எழுப்பி வரும் செய்திகள் என்னை அன்றாடம் கொல்கின்றன. செய்யாத தவறுக்காக யாரோ ஒரு சிலரின் சதியால் என்னை இலக்கு வைக்கிறார்கள்," என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற வழக்கில் நீங்களும் பிரதிவாதியாக உள்ளீர்கள். அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, "தவறு செய்யாத நான் அச்சப்படவில்லை. அதனால் சட்டப்படி அதை எதிர்கொள்வேன்," என்று அவர் பதிலளித்தார்.
கடவுச்சீட்டு சரிபார்ப்பு - போலீஸ் பணி என்ன?

இந்தியாவில் கடவுச்சீட்டு பெறும் நடைமுறைக்கான அடிப்படை பணியாக 'விண்ணப்பம் சரிபார்ப்பு' உள்ளது. இதற்காக மாநில காவல்துறையுடன் இந்திய வெளியுறவுத்துறை புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளது.
பல வருடங்களாக இதன் அடிப்படையிலேயே வெளியுறவுத்துறைக்காக கடவுச்சீட்டு விண்ணப்பம் சரிபார்ப்புப் பணியை காவல்துறை செய்து வருகிறது. இதில் தெளிவை ஏற்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி எட்டு அம்ச அலுவலக குறிப்புரையை இந்திய வெளியுறவுத்துறையின் கடவுச்சீட்டுப் பிரிவு வெளியிட்டது.

பட மூலாதாரம், MEA
அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் அடிப்படையில் போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை என்பது விண்ணப்பதாரரின் இந்திய குடியுரிமை மற்றும் அவர் மீதான குற்றவியல் பின்னணி உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு மட்டும் இருக்க வேண்டும்.
போலீஸார் விண்ணப்பதாரரின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை. அவரது முகவரியை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை, விண்ணப்பதாரரை நேரில் சென்று சந்தித்து அவரது கையெழுத்தை சரிபார்ப்பு அறிக்கையில் பெறவோ அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், அறிக்கை தயாரிப்பதற்காக விண்ணப்பதாரரை நேரிலோ அவரது வீட்டுக்கோ சென்று பார்க்க வேண்டும் என காவலர் விரும்பினால் செய்யலாம். ஆவண சரிபார்ப்புப் பணியை கடவுச்சீட்டு அலுவலகம் செய்யும் என்பதால் அதை 'குறிப்பிட்டு கேட்டுக் கொண்டாலொழிய' சரிபார்ப்புப் பணிக்குச் செல்லும் காவலர் செய்யத் தேவையில்லை. மேலும், சரிபார்ப்புப் பணியின்போது விண்ணப்பதாரர் இந்திய குடிமகன்தானா என்பதை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். குற்றவியல் வழக்குகள் அவருக்கு எதிராக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
'அட்வெர்ஸ்' என குறிப்பிடப்படும் விண்ணப்பங்கள் தவிர, இந்திய குடிமகன் மற்றும் குற்றப்பின்னணி இல்லை என்பதை மட்டும் உறுதிப்படுத்தும் விண்ணப்பங்களை கவனத்தில் கொண்டு கடவுச்சீட்டு அலுவலகத்தில் வழக்கமான பரிசோதனைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.
களத்தில் உள்ள அழுத்தம்
இந்த சரிபார்ப்புப் பணி, விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 3 நாட்களுக்குள் முடிக்கப்பட்டால் விண்ணப்பத்துக்கு தலா ரூ. 150 படிக்காசு என கடவுச்சீட்டு அலுலகம் சார்பில் காவலருக்கு வழங்கப்படும்.
எனவே, குறித்த காலத்துக்குள் சரிபார்ப்புப் பணியை முடித்தாக வேண்டும் என்ற அழுத்தம் களத்தில் சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ளும் காவலருக்கு உண்டு என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் என்ன பிரச்னை?

ஒரு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அதற்கு என ரெஃபரென்ஸ் நம்பர் எனப்படும் குறிப்பு எண் ஒதுக்கப்படும். அந்த எண்ணை கொண்டே கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பான நிலவரத்தை அந்த விண்ணப்பதாரர் கேட்டறியலாம்.
அவர் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு அந்த விண்ணப்பம் முதல் கட்டமாக அவரது தகவலை சரிபார்க்க ஏதுவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கோ நகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கோ அனுப்பி வைக்கப்படும்.
காவல்துறை அலுவலர் இந்த விண்ணப்பங்களை சரிபார்க்க டாங்கல் சாதனத்தைப் பயன்படுத்துகிறார். இதற்காக 'எம்போலீஸ்ஆப்' செயலி உள்ளது. அதில் நுழைவு பெயர், கடவுச்சொல்லை உள்ளீடு செய்து தமது வரம்புக்குள்பட்ட பகுதிக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்களில் உள்ள தகவலை அந்த காவலர் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.
அவர் உறுதிப்படுத்தும் தகவலை ஆய்வாளர், காவல் உதவி ஆணையாளர் அல்லது காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையிட்டு சரிபார்ப்பர். காவலர் வழங்கிய அறிக்கையில் மேல் திருத்தம் செய்யும் அதிகாரம் ஆய்வாளர் அல்லது துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையருக்கு உண்டு.
இந்த சாதனம், கடவுச்சீட்டு அலுவலகத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையருக்கே வழங்கப்படுகிறது. அந்த சாதனத்தை தமது அதிகார வரம்புக்கு உள்பட்ட உளவுப்பிரிவு அல்லது தனிப்பிரிவு காவல் அதிகாரிக்கோ காவலருக்கோ மாவட்ட எஸ்பி அல்லது ஆணையர் வழங்குகிறார்.
இந்த டாங்கல் சாதனத்தை பயன்படுத்தி முறைகேடு அல்லது தவறுகள் நேர்ந்தால் அதற்கு பொறுப்புடைமையாக்கப்படுவது சம்பந்தப்பட்ட எஸ்பி அல்லது ஆணையர்தான் என்கிறது வெளியுறவுத்துறை.
மீறப்பட்ட விதிகள்
இந்த வழக்கில், ஏராளமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்ட வசிப்பிடம், குடிமக்கள் என்பதற்கான ஆவணங்களின் சரிபார்ப்பு எதுவும் முறைப்படி செய்யப்படவில்லை என்று க்யூ பிரிவு கண்டறிந்துள்ளது.
விதிகளை பின்பற்றாமல் சரிபார்ப்பு அறிக்கையை களப்பணியில் உள்ள தனிப்பிரிவு காவலர் தயாரித்துள்ளார்.
அதை மேற்பார்வையிட வேண்டிய மேலதிகாரிகள் தமது பணியை சரிவர செய்யாமல் கீழ்நிலையில் உள்ள காவலர் எழுதிய குறிப்பை சரிபார்க்காமல் அப்படியே மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
சிலரது விண்ணப்பங்களில் இருந்த முகவரி கற்பனையானது. ஆனாலும், அந்த முகவரியில் கடவுச்சீட்டை வழங்க 'ஊழல்' தபால்காரர் மற்றும் கடவுச்சீட்டு மண்டல அலுவலக ஊழியர்கள் உதவியுடன் இடைத்தரகர்கள் சதி செய்தனர் என கண்டறிந்திருக்கிறது க்யூ பிரிவு விசாரணை.
குற்றம் எப்படி நடக்கிறது?

போலி ஆவணங்கள் அடிப்படையில் கடவுச்சீட்டை வாங்கித் தருவதற்காக ஒரு கும்பல் இருந்துள்ளது. அது மண்டல கடவுச்சீட்டு அலுவலகம், எந்தெந்த காவல் நிலையங்கள், கடவுச்சீட்டு அலுவலகங்கள், தபால் நிலையங்கள் போன்றவற்றில் ஊழலுக்கு இரையாகக் கூடிய அல்லது பலவீனமான பணியாளர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்பதை மோப்பமிட்டு அங்குள்ள ஆட்களை தங்களுடைய வலையமைப்பில் சேர்க்கும்.
பிறகு தங்களுடைய வளையத்தில் உள்ள காவல்நிலையம், தபால் நிலையத்துக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான ஆவணங்களை இந்த கும்பலே உருவாக்கும்.
எல்லாம் தயாரான பிறகு கடவுச்சீட்டு விண்ணப்பம் ஆன்லைனில் பதிவேற்றப்படும். அது கிடைக்கப் பெற்றவுடன், கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து நேர்காணல் அழைப்பு வரும். அப்போது மீண்டும் இந்த கும்பல் அந்த விண்ணப்பதாரரை கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏ, பி, சி போன்ற கவுன்டர்களில் எந்த கவுன்டருக்கு செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்து ஜோடிக்கப்பட்ட ஆவணங்களுடன் அனுப்பி வைக்கும்.
அவர்கள் குறிப்பிடும் கவுன்டரில் இந்த கும்பல் வளையத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலர் இருப்பார். அந்த நபர் எந்த ஆவண சரிபார்ப்பு நடைமுறையையும் பின்பற்றாமல் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வார்.
பிறகு அங்கிருந்து பிரத்யேக மின்னஞ்சலில், காவல்துறைக்கு விண்ணப்பதாரரின் விவரம் ஆன்லைன் மூலமாகவும் அதன் விவரம் மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கப்படும். இப்படி காவல் ஆணையர் அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பெறப்படும் மின்னஞ்சல், உளவுப்பிரிவு அல்லது தனிப்பிரிவு ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கிருந்து களத்தில் உள்ள ஐஎஸ் அல்லது தனிப்பிரிவு காவலருக்கு விண்ணப்ப விவரம் செல்லும்.
அங்கே மோசடியாக பாஸ்போர்ட் வாங்கித் தரும் இடைத்தரகர்களுக்கு உதவக்கூடிய காவலர், இந்த விவரங்களை பெற்றுக் கொண்டு, ஆளே இல்லாத முகவரிக்கு கடவுச்சீட்டு சரிபார்ப்பை உறுதிப்படுத்தி மீண்டும் துறை ரீதியாக ஆன்லைனிலியே டாங்கல் சாதனம் மூலம் அனுப்பி வைப்பார்.
அவர் அனுப்பி வைக்கும் தரவை அங்கீகரித்து ஆய்வாளர், உதவி ஆணையர் மேலிடத்துக்கு அனுப்பி வைப்பார். களத்தில் சரிபார்ப்பை நடத்திய காவலரின் குறிப்பில் தவறு இருந்தாலோ தாமதம் ஏற்பட்டாலோ அதை திருத்தக் கூடிய அதிகாரம் ஆய்வாளர் அல்லது துணை கண்காணிப்பாளர் அல்லது உதவி ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மேலதிகாரிகள் அனுமதி பெற்ற பிறகு நேரடியாக அந்த தகவல் கடவுச்சீட்டு அலுவலகத்தை அடையும். பிறகு அங்கிருந்து உரிய நடைமுறைகளுக்குப் பிறகு கடவுச்சீட்டு அச்சிடும் பிரிவுக்கு விண்ணப்பதாரரின் தகவல்கள் பகிரப்படும். அங்கு அச்சாகும் கடவுச்சீட்டு மீண்டும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள அஞ்சலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு மீண்டும் இந்த கும்பல் வளையத்தில் உள்ள தபால்காரர் சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டைப் பெற்று விண்ணப்பதாரரிடம் வழங்கியதாக ஆவணத்தில் பதிவு செய்து கொண்டு கடவுச்சீட்டை இடைத்தரகரிடம் கொடுப்பார். அதை இடைத்தரகர் பெற்றுக் கொண்டு விண்ணப்பதாரரிடம் கடவுச்சீட்டை வழங்குவார்.
இவ்வாறு இந்திய குடிமகன் என்ற சட்டபூர்வ கடவுச்சீட்டு மூலம் அந்த நபர், நாட்டை விட்டு வெளியே சுதந்திரமாக செல்ல இந்த மோசடி செயல்பாடு வழிவகுக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













