You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் 11வது நாளான இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு - சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பிறகு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான உறவினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
உயிரிழந்த மாணவியின் இறுதி அஞ்சலி கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மாணவி பயன்படுத்திய புத்தகம் மற்றும் எழுதுகோளுடன் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த வழக்கில் நீண்ட சட்ட போராட்டத்தில் 10 நாட்களுக்குப் பிறகு மாணவியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர். மேலும் மாணவியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்படுவதையொட்டி அவரது வீடு மற்றும் கிராமத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி.கணேசன், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் புவனகிரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உயிரிழந்த மாணவிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க பாதுகாப்பாக காவல் துறையினர் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியரின் மகள் படித்து வந்துள்ளார். தற்போது 12ஆம் வகுப்பு படித்து வந்த அவர், கடந்த 13ஆம் தேதி 5.30 மணிக்கு மாணவி உயிரிழந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இருப்பது தெரிந்தது. காவல் துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியால் மாணவி உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றுவதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டது.
இதில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற் கூராய்வு செய்யவேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் மனு தொடுத்தனர்.
இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி அருகே மர்மமான முறையில் மாணவி மரணித்ததற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடியது வன்முறையாக மாறியது.
முன்னதாக பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளும்படி குற்றவியல் புலனாய்வுத் துறை மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.
இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பின்பற்ற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று(ஜூலை 23) காலை 7 மணிக்கு மாணவியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு மாணவியின் உடல் கொண்டுவரப்பட்டது.
மாணவி உயிரிழந்து 11வது நாள்(ஜூலை 23) அவரது உடலை தாய் தந்தையர் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாதுகாப்பு கருதி கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில், ஏடிஎஸ்பி விஜிகுமார், 7 டிஎஸ்பிக்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேப்பூர் மற்றும் பெரியநெசலூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வண்டி, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா மற்றும் வருண் வண்டிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கடுமையான பரிசோதனைக்குப் பிறகே வண்டிகளை ஊருக்குள் போலீசார் அனுமதித்து வருகின்றனர். மேலும் வெளியூர் ஆட்கள், பிற இயக்கம் மற்றும் அமைப்பினருக்கு கிராமத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்