You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வந்தனர். அந்த மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி காலையில் இவர்களின் மகள் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. நேரில் பார்த்த மாணவியின் தாயாரிடம், அவரது மகள் பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த தாயார், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று கூறினார். இதையடுத்து மாணவியின் சாவை சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியின் உடற்கூராய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருப்பதாகத் தோன்றுகிறது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சந்தேக மரணம் என்று வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்துள்ளார் உயிரிழந்த மாணவி. கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி மாணவியை விடுதியில் சேர்த்ததாக தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிபட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த பள்ளி காவலர், நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ்(சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த தொடங்கினர்.
மேலும் மாணவியின் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் விடுதியில் தங்கிப் பயின்று வந்த மற்ற மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பள்ளி மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார். வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய அவர் திடீரென்று உயிரிழந்து இருப்பது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற 13ஆம் தேதி காவல் துறையினரை, பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, "காலையில் மின்சார விளக்குகளை அணைக்க வந்த விடுதி காவலர், மாணவி அங்கு கிடப்பதை முதலில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பள்ளி வாகனம் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்," என்று தெரிவித்தார்.
இதனிடையே, தங்கள் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டார். எனவே மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது "மாணவியின் உடற்கூராய்வு பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்படும். பரிசோதனையின் போது உறவினர் ஒருவரும் அனுமதிக்கப்படுவார்" என்று உறுதியளித்தார்.
தாயார் கூறுவது என்ன?
இதற்கிடையே, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் மாணவியின் தாயார் கூறுகிறார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் செல்வி கூறியதாவது, "எனது மகள் அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வந்தாள். பதினொன்றாம் வகுப்பு வெளியே சென்று படிப்பதற்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டோம் ஆனால் தர மறுத்தனர். இதையடுத்து எனது மகள் அங்கேயே படிப்பைத் தொடர்ந்தாள். பின்னர் அவள் 12ஆம் வகுப்பு சென்ற பிறகு கடந்த ஜூலை 1ஆம் தான் பள்ளி விடுதியில் சேர்த்தேன். ஆனால் 13ஆம் தேதி எனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் உங்கள் மகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.
அவள் உயிருடன் இருப்பதாக கூறினர். ஆனால், அடுத்த அரை மணிநேரத்தில் எங்களை மீண்டும் அழைத்து உங்கள் மகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்தபோது எங்களது மகள் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்குக் கொண்டுவந்ததாக கூறினர். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த எனது மகளின் உடலைச் சென்று பார்த்தபோது தலை மற்றும் மார்பு பகுதிகளில் மட்டுமே அடிபட்டு இருந்தது. பள்ளிக்குச் சென்று, எங்கள் மகள் உயிரிழந்த இடத்தை பார்த்தபோது அங்கும் இரத்த அடையாளம் இல்லை," என்றார் அவர்.
பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோ பதிவை காட்ட வலியுறுத்தினோம் ஆனால் மறுத்துவிட்டதாக கூறுகிறார் தாயார் செல்வி.
"இரவு 10.30 மணிக்குப் பதிவான வீடியோ ஒன்றை காட்டினர். அதில் எதுவும் தெரியவில்லை. அவர்கள் பள்ளி முழுவதும் வைத்திருந்த எந்தவொரு கண்காணிப்பு கேமிராவிலுமா பதிவாகாமல் இருந்திருக்கும்? ஆனால் எந்த வீடியோ காட்சிகளையும் காட்ட மறுத்துவிட்டனர்," என்றார் மாணவியின் தாயார்.
"மேலும் எனது மகள் கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்ததாக பொய் சொல்கின்றனர். விடுதியில் படிக்கின்ற மாணவி பள்ளி நிறைவடைந்ததும் சீருடை கூட மாற்றாமல் அதே உடையில் உயிரிழந்து இருக்கிறார். எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. எங்கள் மகளின் மரணம் தொடர்பாக காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை செய்யவேண்டும்," என்று மாணவியின் தாயார் செல்வி தெரிவித்தார்.
மாணவி 12ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். "மறுநாள் அதிகாலை சுமார் 5.30 மணிக்குத் தான் மாணவி பள்ளி வளாகத்தின் முன்பு கிடப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையில் யாருமே அவரின் உடலின் கவனிக்கவில்லை." என்று காவல் துறையினர் தெரிவிக்கிறது.
காவல் கண்காணிப்பாளர் கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "மாணவி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், இரண்டு ஆசிரியர்கள் 'நீ படிக்கவில்லை என்றும் விளையாட்டுத்தனமாக இருப்பதாகவும் அனைவரின் முன்பும் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினர்' என்றும் அதனால் உயிரிழப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அந்த மாணவியின் தாயார் தனது மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி உடலின், உடற் கூராய்வின் போது இரண்டு மருத்துவர்கள் இருந்தனர். அதில் ஒருவர் பெண் மருத்துவர். மேலும் உடற்கூராய்வு செய்ய தடயவியல் மருத்துவர் இருக்கும்படி செய்தோம். இதனை முழுவதுமாக வீடியோ பதிவும் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி உடற்கூராய்வு பரிசோதனைக்கு முன்பு உயிரிழந்த மாணவி உடலை அவர் குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது இந்த மாணவி மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாட்சிகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சில சாட்சிகளை விசாரணை செய்து வருகிறோம். மேலும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை செய்துள்ளோம். கடிதத்தில் குறிப்பிட்டபடி ஆசிரியரால் மாணவி தொடர்ந்து அவ்வாறு நடத்தப்பட்டாரா என்பது தொடர்பாக உடன் பயிலும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இப்படி முழுமையான விசாரணை நிறைவடைந்த பிறகே இந்த வழக்கின் தன்மை குறித்து முடிவெடுக்க முடியும்," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் மரணம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதா?
மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தாக கூறப்படும் பள்ளியில் மூன்று மாடிகள் உள்ளன. அதில், மூன்றாவது மாடியில் மாணவிகளின் தங்கும் விடுதி இருக்கிறது.
பள்ளி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமிராவின் மூலம் மாணவி எப்படி விழுந்தார் என்பதை அறிய முடிந்ததா என்று காவல் துறையினரிடம் கேட்டபோது. "மாணவி விழுந்ததாக கூறப்படும் மூன்றாவது மாடியானது மாணவிகள் தங்கும் விடுதி என்பதால் அங்குக் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை. ஆனால் அதிகாலை கீழே இருந்த மாணவி உடலை விடுதி காவலர், நிர்வாகத்தினர் தூக்கிக்கொண்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் காணொளியானது தரைதளத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது" என்றனர்.
கடந்த நான்கு நாட்களாக, உயிரிழந்த மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகளின் மரணத்திற்கு முறையான விசாரணை நடைபெறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
நீதி விசாரணை வேண்டும்
குறிப்பாக மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
"அந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்துத் தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்," என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
"கடந்த பத்தாண்டில் இதேபோன்று மாணவிகள் அப்பள்ளியில் இறந்து போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது," என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இவருடன் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்திய அளவில் கவன ஈர்ப்பு
மற்றொருபுறம் மாணவியின் மரணத்தைக் காவல் துறையினர் உரிய விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளி கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உயிரிழந்த மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு நீதி கிடைக்க சமூக வலைதளங்களில் இது குறித்த ஹாஷ்டேகுகளை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
"மாணவியின் உடற் கூராய்வு பரிசோதனை நிறைவடைந்துள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்," என்று இந்த வழக்கை தலைமை ஏற்று விசாரணை செய்து வரும் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்