அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தமது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
பூட்டியிருந்த அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கே இருந்த எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அந்த இடம் போர்க்களம் போலக் காட்சி அளித்த நிலையில், அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு கதவைப்பூட்டி சீல் வைத்தார்கள் அரசு அலுவலர்கள். இதையடுத்து அலுவலகத்துக்கு உரிமை கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி, சாவியை எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்கிறது.
- சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமென்பதால், ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- அ.தி.மு.க. அலுவலகத்திற்குப் போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- வீடியோ பதிவுகள் அடங்கிய பென் டிரைவை முத்திரையிட்ட உறையில் போட்டு உயர் நீதிமன்றப் பதிவகம் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
- தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள் வழக்கு கட்டில் சேர்க்கப்படவேண்டும்.
- தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த செயல்முறைகள் உத்தரவு அவரது பொது டைரி ஆகியவை வழக்கு கட்டில் சேர்ப்பிக்கப்படவேண்டும்.
என்ன சொல்கிறது ஓ.பி.எஸ். தரப்பு?

இந்தத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், "ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு ஒரு பகுதி அனுமதிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இரு மனுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி வசம் சாவியை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு இடத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதை தீர்மானிக்க, பிரிவு 145ன் கீழ் உள்ள 9 விதிகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இந்த நீதிமன்றத்தின் முன்பாக சுவாதீனம் தொடர்பாக எந்த வாதமும் வைக்கப்படாத நிலையில், வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. இதில் மேல் முறையீடு செய்ய முடியும். இந்த நீதிமன்றத்திற்கு உரிமையியல் வழக்கில் முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் வருவாய் கோட்டாட்சியர், சிவில் நீதிமன்ற அதிகாரத்தை கையில் எடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவாதீனம் தொடர்பாக நீதிமன்றம் முன்பாக வாதங்களோ, ஆவணங்களோ வைக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவர் வீடு முன்பாக குவிந்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













