அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு, கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

பட மூலாதாரம், ANI
அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அதிமுக.
அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதுவரை ஓ.பி.எஸ். வகித்துவந்த பொருளாளர் பொறுப்புக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை பொதுச் செயலாளருக்கு மாற்றப்பட்டன.
புதிய பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கவேண்டும் என்ற விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கூட்டத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார்.
இதனிடையே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் காலையில் கைப்பற்றிய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்தப் பகுதியில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடியை நீக்குவதாக அறிவித்த ஓபிஎஸ்
இது குறித்து அதிமுக தலைமை நிலையத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ இல்லை. கழக சட்ட விதிகளுக்கு முரணாக என்னை நீக்குவதாக அறிவித்த அவர்களைக் கண்டிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்" என்று அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அத்துடன், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதியைப் பெறப்போவதாக அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
களங்கம் கற்பித்த எட்டப்பர்கள் - எடப்பாடி தாக்கு
இதற்கிடையே, பொதுக்குழுவில் பேச வந்த எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் விரும்பிய சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று பூடகமாகக் குறிப்பிட்டுத் தொடங்கினார்.
"கழகம் சிறப்படைய வேண்டும், வலிமையடைய வேண்டும். சில எட்டப்பர்கள் கட்சியில் இருந்து களங்கம் கற்பிக்கும் நிலையில், எதிரிகளோடு உறவு வைத்திருக்கும் நிலையில், அதை அழிக்கவேண்டும், ஒடுக்கவேண்டும், முறியடிக்க ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தந்தீர்கள். என்னை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளீர்கள். 1974ல் என் குக்கிராமமான சிலுவம் பாளையம் என்ற குக்கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் கிளைக்கழக செயலாளராக சேர்ந்தேன்.
அப்போது நான் சேலம் வாசவி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக-வால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் நெடுங்குளம் பகுதியில் காங்கிரஸ் வலுவாக இருந்தது. கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றவுடன் நான் நட்டுச் சென்ற கொடிக்கம்பத்தை பிடுங்கி எறிந்தார்கள். மீண்டும் அங்கே கொடிக் கம்பம் நட்டேன்" என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தாம் எப்படி படிப்படியாக கட்சியில் வளர்ந்த விதம் குறித்து விவரித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
திமுக அரசு மீது தாக்குதல்
"ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என்று அதிமுக மட்டுமல்ல, பல கட்சிகள் கோரியும் திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் பல முதல்வர்கள். தமிழ்நாடு எல்லா துறையிலும் முன்னேறி இருந்த நிலை மாறி எல்லாவற்றிலும் பின் தங்குகிறது.
கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்று திமுக அரசு செயல்படுகிறது" என்று பேசினார் எடப்பாடி.
சமாதானமான முறையில் போக அதிமுகவில் அண்ணன் ஓ.பி.எஸ். அவர்களிடத்தில் பல முறை பேசினோம். ஆனால், செவிசாய்க்கவில்லை. விட்டுக்கொடுத்தோம். விட்டுக்கொடுத்தோம் என்று கூறுகிறார். ஆனால், நீங்கள் என்ன விட்டுக்கொடுத்தீர்கள்? நாங்கள்தான் விட்டுக்கொடுத்தோம் என்றார்.
திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ் - எடப்பாடி
"ரவுடிகளோடு தலைமை அலுவலகம் சென்றார் அண்ணன் ஓ.பி.எஸ். அண்ணன் எப்போதும் சுயநலம்தான். தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கக்கூடையவர் அவர். திமுகவின் ஊழல்களை நாம் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஓபிஎஸ்ஸின் மகன் திமுக தலைவரை சந்தித்து உறவு கொண்டாடுகிறார்.
இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் எண்ணமே இல்லை. இன்றைய தினம் அவருக்கும் அழைப்பு முறையாக விடுக்கப்பட்டது. ஆனால், அவர் இங்கே வருவதற்கு பதில் ரவுடிகளுடன் தலைமைக்கழகம் செல்கிறார். அம்மாவின் அறையை கடப்பாரையால் உடைத்து, ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளார்.
இவரா கட்சியின் விசுவாசி? சொல்லுங்கள் இவரா கட்சியின் விசுவாசி? (மேடையின் கீழிருந்து இல்லை இல்லை என்று குரல் எழுகிறது). திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
ஸ்டாலின் அவர்களே! எத்தனை ஓபிஎஸ் களை பிடித்தாலும் அதிமுகவின் தொண்டனையோ நிர்வாகியையோ ஒன்றும் செய்ய முடியாது. என்றைக்கு எங்கள் கட்சிக்குள் மோதவிட்டீர்களோ அப்போதே உங்கள் அழிவு காலம் நெருங்கிவிட்டது." என்று பேசினார் எடப்பாடி.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த கோட்டாட்சியர்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தார்கள். அதிகாரிகள் அங்கிருந்த ஓ.பி.எஸ்.சுடன் பேச்சு நடத்தியதாக தொலைக்காட்சிகள் தகவல் தெரிவித்தன.
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற மறுத்து ஓ.பி.எஸ். தமது ஆதரவாளர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்ட நிலையில், அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பொதுக் குழு தீர்மானங்கள்
பொதுக் குழுக் கூட்டத்தில் முதலில் 16 தீர்மானங்களும், சிறப்புத் தீர்மானமாக ஓ.பி.எஸ்ஸை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. முதல் 8 தீர்மானங்களை ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். அடுத்த 8 தீர்மானங்களை ஓ.எஸ்.மணியன் வாசித்தார்.
கட்சியின் வரவு செலவுத் திட்டங்களை வாசித்து ஒப்புதல் பெற்றவர் புதுகை விஜயபாஸ்கர்.
ஓ.பி.எஸ்.சின் சாதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இந்த மூவருமே முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடியை தற்காலிகப் பொதுச் செயலாளர் ஆக்கும் தீர்மானம்
"கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.

பட மூலாதாரம், ADMK
கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, கழக சட்ட திட்ட விதி 20அ பிரிவு 7ன்படி, இப்பொதுக்குழு கழக இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். தீர்மானத்தை கே.பி. முனுசாமி முன்மொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல்
பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் வேறொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் விரைந்து நடத்தி முடிக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதைக் கருத்தில்கொண்டு, கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது: கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில், இன்றைய தேதிவரை, அதாவது 11.07.2022 வரை, கழக உறுப்பினர்களாகப் பதிவேட்டில் உள்ளவர்கள், வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். கழக உறுப்பினர்களுக்கு, அவர்களின் உறுப்பினர் உரிமைச் சீட்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய கழக உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படும்.
மேற்படி, கழகப் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.மேலும், கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக, கழக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், M.LA, அவர்களும், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., அவர்களும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இப்பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.இந்த தீர்மானத்தை வாசித்த உதயகுமார், இத் தீர்மானத்தை சி.பொன்னையன் முன்மொழிவதாக அறிவித்தார்.

இரட்டைத் தலைமை தீர்மானம் ரத்து
கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக தீர்மானம்.
கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் உணர்விற்கும், விருப்பத்திற் ஏற்ப, எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் வலிமை சேர்க்கப்பட்ட, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படு "கழகப் பொதுச் செயலாளர்" என்ற தலைமையை மீண்டும் உருவாக்க, தற்பொழுது உள்ள இரட்டைத் தலைமையான கழக ஒருங்கிணைப்பாளர் மற்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில், கழக சட் திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. விதி 43ன்படி, "கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும்-திருத்தவும்-நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில் திருத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள், 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் வைத்து அனுமதி பெறாததால் மேற்படி திருத்தங்கள் தானாகவே காலாவதி ஆகிவிட்டன.

இந்த காலாவதியான சட்டத் திருத்தங்கள் அனைத்தும் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுமுறை பற்றித்தான். இந்த திருத்தங்கள் காலாவதியானாலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தலைமையில் நடந்த கழக அமைப்புத் தேர்தல்கள் உட்பட அனைத்து செயல்களையும் இப்பொதுக்குழு ஏற்றுக்கொள்கிறது என்று மூன்றாவது தீர்மானம் குறிப்பிடுகிறது.
ஓ பி எஸ் க்கு மாற்றாக முக்குலத்தோர் சமுதாய ஓட்டு வங்கியை சமன் செய்யும் வகையில் தீர்மானங்களை வாசித்த மூவருமே முக்குலத்தோராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா
பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி அலுவலகத்தை உடைப்பவர் தேவையா?
பொதுக்குழுவில் ஓ.பிஎஸ்க்கு இருக்கை போடப்பட்டபின்பும், கோடாலி எடுத்து போய் தலைமை கழகத்தை உடைப்பவர் கட்சிக்காரரா? இவ்வளவு துரோகம் செய்து காட்டி கொடுப்பவர் இந்த கட்சிக்கு தேவையா என்று எண்ணி பார்க்க வேண்டும் என்று தங்கமணி கேள்வி எழுப்பினார்.
தவிர, அதிமுக துணைப் பொதுச் செயலாளராக கே.பி.முனுசாமியைத் தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்ட அனுமதி
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
- பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கை. அந்த வகையில் பொதுக்குழு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- கட்சி விதிகளுக்கு உட்பட்டு இந்த பொதுக்குழுவை நடத்த வேண்டும்.
- ஜூலை 11ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு நடத்தப்படும் என்று ஜூன் 23ஆம் தேதியே கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படியே கட்சி விதிகளுக்கு உள்பட்டு இந்த கூட்டத்தை நடத்தலாம்.
- பொதுக்குழு நடத்தப்படும் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை
அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொள்வதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் வாகனத்தை அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவிற்கு கற்கள் வீச்சு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி பொதுக் குழு நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

எடப்பாடி தரப்பு முன்வைத்த வாதம்
முன்னதாக வியாழக்கிழமை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, "பொதுக் குழு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தற்போது அதிகாரம் ஏதும் இல்லையென்றால் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் படைத்தவர் யார்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதா? பொதுக் குழுவுக்கான அறிவிப்பில் கையெழுத்திடுவது யார்? பொதுக் குழு கூடுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வழங்க வேண்டும்? பொதுக் குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?" என்பது உள்ளிட்ட பத்துக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதற்கு பதிலளிக்கும்படி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 8) ஒத்திவைத்தனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை இரண்டேகால் மணியளவில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கிய போது முதலில் வாதிட்ட எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு, வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டது.
"ஒருபக்கம் தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கருதும் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளது என கருதி வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்காகவே இதனைப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. பொதுக் குழுவை நடத்த உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுக் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். மேலும், ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடத்துவதற்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், AIADMKOfficial
கடந்த டிசம்பர் மாத செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்து எடுக்க முடியும் என விதி திருத்தப்பட்டது. இந்த விதிக்கு பொதுக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் இந்த திருத்தத்திற்கு ஒப்புதல் பெறப்படவில்லை. ஆகவே, அதன் அடிப்படையில் நடந்த உடகட்சி தேர்தலும் செல்லாது. மேலும், கட்சியின் பொதுக் குழுவில் எந்தப் பிரச்னை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது" என எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் வாதிட்டனர்.
இதற்கடுத்து வாதத்தை தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, "கட்சி விதியில் திருத்தம் செய்ய பொதுக் குழுவின் ஒப்புதல் தேவையில்லை. பொதுக் குழு ஒப்புதல் வழங்காததாலேயே இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக முன்வைத்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொதுக் குழுவைக் கூட்டுவதைப் பொறுத்தவரை, கட்சியின் விதிப்படி ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும்," என தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இரண்டே கால் மணியளவில் துவங்கிய வழக்கின் விசாரணை மாலை சுமார் ஐந்தேகால் மணிவரை நீடித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது.
வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் ஒன்பதேகால் மணிக்கு அ.தி.மு.கவின் பொதுக் குழு கூடுமென எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில் அன்று காலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது.
அ.தி.மு.கவின் பொதுக் குழு கடந்த 23ஆம் தேதி கூட்டப்பட்டபோது நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தமிழ்மகன் உசேன் நிரந்தரத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது செல்லாது, அவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் 11ஆம் தேதி பொதுக்குழுக்கு தடைவிதிக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை மீறிய எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி கே. பழனிசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினர். இதனைப் பதிவுசெய்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பிரதான வழக்கின் விசாரணை (தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான வழக்கு) மட்டும் தொடருமென்றும் கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












