பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் பின்னணி

பட மூலாதாரம், AFP
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், "பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை" என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, மாணவர்களைவிட 9 சதவீதம் அதிகமான மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரையில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி துர்கா, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேநேரம், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47,000 மாணவர்களும் கணிதப் பாடத்தில் 83,000 மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 2019-ஆம் ஆண்டைவிட சுமார் இரண்டு மடங்கு என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனை விமர்சித்து பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், "47,000 பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் அவமானம். ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம், ஊழலால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததே இந்நிலைக்கு காரணம். இதுவே திராவிட மாடல்" எனப் பதிவிட்டுள்ளார்.
பின்னணி என்ன?
''மொழிப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் போனதற்கு என்ன காரணம்?'' என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
''கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள் நடக்காமல் இருந்ததுதான் பிரதானமான காரணம். தமிழ்நாட்டில் மொழிப் பாடத்தை மொழிப்பாடமாக கற்றுக் கொடுப்பதற்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுக்கான மொழிப்பாட ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை. தொடக்கப் பள்ளிகளில் 200 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் 'பொது ஆசிரியர்' என்ற அடிப்படையில் ஒரே ஆசிரியரே அனைத்து பாடங்களையும் நடத்தி வருகிறார். இது எந்தவகையில் சரியானது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK
தொடர்ந்து பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, '' மொழிப் பயிற்சி தருவதற்கு முழுமையான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்கவில்லை. மாணவர்களுக்கு முதலில் எழுத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும், அதனைப் பிழையில்லாமல் எழுதுவதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதன்பிறகுதான் வாசிப்பு என்ற விஷயமே வருகிறது. ஆனால், வகுப்பறைகளில் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என அரசு கூறுகிறது. கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையே உருவாக்காமல், 'வாசிக்க வேண்டும்' எனக் கூறுவது சரியானதல்ல.
"தேர்வை சந்தித்ததே சவால்தான்"
கடந்த 2 ஆண்டுகாலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனர். அவர்கள் முறைப்படியான ஆண்டுத்தேர்வு என்பதையே ஒன்பதாம் வகுப்பில்தான் சந்திக்கின்றனர். அதிலும், கடந்த 2 கல்வி ஆண்டுகளாக ஒன்பதாம் வகுப்பு மாணவர் படித்த மாணவர், தேர்வை சந்திக்கவில்லை. அவர் பத்தாம் வகுப்பிலும் தேர்வை சந்திக்காமல் தேர்ச்சி பெற்றுவிட்டார். இதே நிலைதான் பிளஸ் 2 மாணவர்களுக்கும். மதிப்பெண்ணை வைத்து மாணவரின் தேர்ச்சி மற்றும் தேர்ச்சியின்மையைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், கொரோனா சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. அப்படியிருக்கும்போது அவர்கள் தேர்வை சந்தித்ததே சவாலான ஒன்றுதான். அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான வசதி வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வேறு பணிகளை வழங்கக் கூடாது. வரும் காலங்களில் கற்றல், கற்பித்தல் பணிகளில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டினால் மட்டுமே இந்த நிலை மாறும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சொல்வது என்ன?
இதனை மறுத்துப் பேசும் கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ரா.தாமோதரன், ''மொழிப் பாடத்துக்கான ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்த்தாலே தெரியும். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கு வராதவர்களாகத்தான் இருப்பார்கள். அதில், தேர்வு எழுத வராதவர்களும் உள்ளனர். இதில், படிக்க ஆர்வமின்மை மற்றும் குடும்பச் சூழல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன'' என்கிறார்.
தொடர்ந்து மாணவர்களின் நிலை குறித்துப் பேசிய தாமோதரன், '' கொரோனா காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, அவர்களில் பலரிடையே படிப்பதற்கான ஆர்வம் இல்லை. அடுத்ததாக, குறுகிய காலத்தில் பாடத்திட்டத்தைக் குறைத்துவிட்டுப் பயிற்சி கொடுக்கும்போது அவர்களால் ஆசிரியர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அரசும், 'மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது' எனக் கூறிவிட்டது. இதனால் மாணவர்களுக்கும் போதிய பயிற்சியை அளிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் மாணவரையும் ஆசிரியையும் குறைசொல்ல முடியாது. காரணம், குறுகிய காலத்தில் தேர்வு நடத்தி அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கே பெரும்பாடாகிவிட்டது'' என்கிறார்.
மேலும், '' கொரோனா காலத்தில் பல குடும்பங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களும், வேலைக்குச் சென்றுவிட்டனர்'' என்கிறார்.
தீர்வு என்ன?
''உங்கள் பள்ளியில் எத்தனை பேர் மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை?'' என்று அவரிடம் கேட்டோம். '' 90 மாணவர்களில் 7 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் தமிழ்ப் பாடத்தில் மட்டும் தோல்வியடையவில்லை. அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துவிட்டனர். அவர்கள் முறையாக பள்ளிக்கு வராததுதான் காரணம்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''அதேநேரம், தமிழ் மொழித் திறனை வளர்க்கும் வகையில் மாணவர்களிடையே வாசிப்புத் திறனை வளர்க்கும் நோக்கில், 'இளம் வாசகர் வட்டம்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மாணவர்களை வாசிக்க வைப்பது, எழுத வைப்பது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. மாதத்தோறும் உலக சினிமாக்களை திரையிடுவதும் நடந்து வருகிறது. மாணவர்களின் படைப்புத் திறன் மற்றும் சமூக பார்வையை மேம்படுத்துவதும் அரசின் நோக்கமாக உள்ளது'' என்கிறார்.
''மொழிப் பாடத்தில் வரும் காலங்களில் அதிக தேர்ச்சி பெறுவதற்கு என்ன வழி?'' என்றோம். '' தினசரி பள்ளிகள் நடந்தாலே போதும்; தேர்ச்சி விகிதம் அதிகரித்துவிடும். பள்ளிகளில் பல மாணவர்கள் செல்போன், சினிமா, போதை ஆகிய பழக்கங்களுக்ககு அடிமையாகிவிட்டனர். தினசரி வகுப்புகள் நடக்கும்போது இவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது தேர்ச்சி குறைந்தது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறையும் ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்த உள்ளது. அதற்கேற்ப வரும் நாள்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பாடங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













