அக்னிபத் திட்டமும் வேலைவாய்ப்பும்: இந்திய தொழிலதிபர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டம் இளைஞர்களின் கல்வியை பாதிக்கும், வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் என்ற வாதங்கள் இன்னும் சூடு குறையாமல் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இணையும் இளைஞர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அளிப்பதாக இந்தியாவின் பிரபல தொழில் நிறுவனங்கள் கூறியுள்ளன.
மஹிந்திரா, டாடா, டிவிஎஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் தலைமைப்பொறுப்புகளை வகிக்கும் அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து தெரிவித்த கருத்துகள் என்னென்ன? மஹிந்திரா குழுமத்தின் சேர்மனும் ட்விட்டரில் அதிதீவிரமாக இயங்கும் தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா, அக்னிபத் திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றி வெளியேறுகிற இளைஞர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த இவர், "அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்றி வெளியேறுகிறவர்களுக்கு கார்ப்பரேட் உலகில் வேலைவாய்ப்பு பெருமளவில் உண்டு. தலைமைப்பண்பு, உடற்தகுதி, குழுவாக வேலை செய்தல் ஆகிய பண்புகளுடன் சந்தைக்கு தயாராக வரும் பணியாளர்களாக, கார்ப்பரேட் துறைக்கு தேவைப்படும் எல்லா பிரிவுகளுக்குமான பணியாளர்களாக அக்னி வீரர்கள் இருப்பர் என்றும் தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹிந்த்ராவின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் சேர்மன் ஹர்ஷ் கோயங்காவும் தங்கள் நிறுவனம் அக்னிவீரர்களுக்கு வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல, மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் எதிர்கால இளைஞர்களுக்கான உறுதிப்பாட்டில் எங்களுடன் இணைந்து கொள்வர் என்று தாம் நம்புவதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வரிசையில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அக்னிபத் திட்டம் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பு மட்டுமல்ல. டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கும் தொழில்துறைக்கு ஒரு கட்டுப்பாடான பணியாளர்கள் குழு கிடைக்கவும் இந்த அக்னிபத் திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Twitter
இதே போல, அக்னிபத் திட்டம் சமூகத்தின் மீது முக்கியமான நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் சமூகத்தை பலப்படுத்துவதிலும் இனிவரும் ஆண்டுகளில் அக்னிவீரர்கள் (அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வெளியேறுகிறவர்களை இந்திய அரசு இப்படித்தான் குறிப்பிடுகிறது) முக்கியப் பங்கு வகிப்பர் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதர்சன் வேணுவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் வேலை செய்வோருக்கு கார்ப்பரேட் துறை வேலை வாய்ப்பு அளிக்கும் என்று தாம் நம்புவதாக அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளனர்.
ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநில காவல் துறைக்கு ஆளெடுக்கும்போது அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ராணுவப் பணி செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களும், மாநிலங்களும் அக்னிபத் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்போவதாக கூறுவது வெறும் முன் கணிப்பா அல்லது நம்பத் தகுந்த உத்தரவாதமா என்பது தெளிவாக இல்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












