காளான் வளர்ப்பு: வீட்டுக்குள் இருந்தபடி வியாபாரம் செய்யும் பெண்கள்

பட மூலாதாரம், Anirban Nandy
- எழுதியவர், பிரீத்தி குப்தா & பென் மோரிஸ்
- பதவி, பிபிசி மும்பை
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி அருகே வசிக்கும் ஃபுல்ரிடா எக்கா, தான் ஒரு புதிய வருமான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அவருடைய கணவர் இறந்துவிட்டார். அவருடைய பருவாகல் வேலையான தேயிலை பறிக்கும் வேலை, குடும்பத்தை நடத்தப் போதுமான வருமானத்தை வழங்கவில்லை.
பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடியபோது அவருக்கு காளான் வளர்க்கும் தொழில் கிடைத்தது. இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் உதவியோடு அவர் அந்தத் தொழிலைத் தொடங்கினார்.
இப்போது அவர் தினமும் இரண்டு அல்லது மூன்று பைகள் காளான்களை விற்கிறார். இதன்மூலம் அவர் ஒரு மாதத்திற்குச் சுமார் ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
வெள்ளை மலர் காளான்கள் கூரையில் தொங்கும் பெரிய பைகளில் வளர்க்கப்படுகின்றன. ஃபுல்ரிடா எக்கா, வழக்கமாகத் தனது வீட்டில் 10 காளான்களை வைத்திருப்பார். அவை ஒரு மாதத்திற்குச் சுமார் 48 பைகளுக்கான காளான்களை உற்பத்தி செய்கின்றன.
அவர், "அவை வளர்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதன்மூலம் இப்போது நானும் என் குடும்பமும் வெறும் வயிறோடு தூங்க மாட்டோம் என்று எனக்குத் தெரியும்," என்கிறார்.
காளான் வளர்ப்பு, எக்காவின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சிலர் காளான் வளர்ப்பு இந்திய விவசாயத் துறையில் பெரியளவு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
20 ஆண்டுகள் உழைப்பில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 100 வகையான காளான்களை அடையாளம் கண்ட ரூஃப் ஹம்சா போடா, "காளான் உற்பத்தியில் சிறந்த நாடாக மாறுவதற்குத் தேவையான அனைத்து கூறுகளும் இந்தியாவிடம் உள்ளது," என்கிறார்.
"பெரியளவிலான காட்டு காளான் பன்மையை இந்தியா கொண்டுள்ளது. நிறைய உரம் தயாரிக்கும் பொருட்கள், மலிவான ஊதியத்தோடு கூடிய உழைப்பு மற்றும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளின் ஆதரவு ஆகியவை இங்குள்ளன," என்று அவர் விளக்குகிறார்.
உணவுப் பழக்கம்
இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், உலகின் காளான் உற்பத்தியில் இந்தியா வெறும் 2% மட்டுமே உள்ளது. சீனா தான் 75% பங்களிக்கிறது.
ரூஃப் ஹம்சா போடாவின் கூற்றுப்படி, பிரச்னையின் ஒரு பகுதி தேசியளவிலான உணவுப் பழக்கம். இந்தியாவில் பலர் காளான்களைச் சாப்பிட விரும்புவதில்லை. அவை விசித்திரமானவை, கொடியவை என்று நினைக்கிறார்கள்.
"காட்டு காளான்களை, அவற்றின் உண்ணக்கூடிய தன்மையைப் பொறுத்து அடையாளம் காண்பதில் அதிகமான ஆய்வுகள் செய்யப்படவில்லை. காளான்கள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, காளான் சாகுபடி எவ்வளவு மலிவானது என்பனவற்றைப் பிரபலப்படுத்துவதில் தடைகள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.
ஆகவே, இதில் புதிய வாய்ப்புகளைப் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, லீனா தாமஸ் மற்றும் அவருடைய மகன் ஜித்து இருவரும், ஜித்துவின் படுக்கையறையில் காளான்களை வளர்க்கும் பரிசோதனையைச் செய்தார்கள்.

பட மூலாதாரம், Live Life Happily
இணையத்தில் நெகிழி பாட்டில்களில் காளான்கள் வளர்க்கப்படுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தால் தான் இந்த முயற்சியைத் தொடங்கினேன் என்கிறார் ஜித்து.
ஆரம்பத்தில் கிடைத்த வெற்றி அவரை காளான் வளர்ப்பு குறித்துப் படிக்கத் தூண்டியது. எனவே அவருடைய பொழுதுபோக்கு விரைவில் ஒரு செழிப்பான வணிகமாக மாறியது.
இப்போது, கேரளாவைச் சேர்ந்த இந்தத் தாயும் மகனும் தொழில்முனைவோராக லீனாஸ் காளான் என்ற நிறுவனத்தின் பெயரில், ஒரு நாளைக்கு 100 கிலோ காளான்களை உற்பத்தி செய்யக்கூடிய 2000 காளான் படுக்கைகளை வைத்துள்ளனர்.
"காளான்கள் வளர்வதற்கு மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொள்வதைப் போன்ற பல நன்மைகள் காளான் வளர்ப்பில் உள்ளன.
ஆனால், இதற்காக இது எளிதான பணி என்று அர்த்தமில்லை. இது உடையக்கூடியது, மிகவும் உணர்திறனுடையது. வெப்பநிலையில் சிறிய மாற்றமோ பூச்சி பிடித்தலோ காளான்களை முழுவதுமாக அழித்துவிடும்," என்று விளக்குகிறார் லீனா.
இந்த நிறுவனத்தின் பசுமை இல்லங்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை காளான்களுக்கு உகந்த அளவில் வைத்திருக்க, ஈரமான பட்டைகள் மீது வெளிப்புறக் காற்றை இழுக்க விசிறிகளைப் பயன்படுத்துகின்றன. இதில், கரிம வாயுவின் அளவும் கண்காணிக்கப்படுகிறது.
"இது, இவ்வளவு முயற்சிகளை எடுப்பதற்கு உரிய மதிப்புள்ள ஒன்றுதான். இவற்றுக்குக் கிடைக்கும் நல்ல விலை, காளான்களை லாபகரமானதாக்குகிறது.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட காளான்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் அதே நாளில் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கப்படுகின்றன," என்கிறார் ஜித்து.

பட மூலாதாரம், Leena's Mushroom Farm
கல்விக்கு உதவிய காளான்
பரிமலா ரமேஷ் உத்கவே இதில் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். காளான் மற்றும் பூஞ்சை வளர்ப்பு குறித்த ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ள நுண்ணுயிரியல் படித்தார்.
காளான்களை வளர்ப்பதோடு, 2019-இல் நிறுவப்பட்ட பயோபிரிட் என்ற அவருடைய தொழிலை, காளான் பொடிகள் மற்றும் சுகாதார சேர்ப்புகளைத் தயாரிப்பதற்காக காளான்களை உலர்த்துகிறது.
இவர், இதில் வெற்றி கிடைத்தாலும் கூட, காளான் வளர்ப்பது எளிதல்ல என்கிறார்.
"மக்கள் காளான்களை வேகமாகப் பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாகப் பார்க்கிறார்கள். ஆனால், அது தொழில்நுட்ப திறன்களோடு இணைக்கப்பட வேண்டும்," என்கிறார் பரிமலா ரமேஷ் உத்கவே.
உத்கவேயின் கூற்றுப்படி, பல தொடக்க நிலை காளான் தொழில்கள் தோல்வியடைகின்றன.
ஐஐடி-காரக்பூரின் கிராமப்புற வளர்ச்சி ஆய்வாளர் அனிர்பன் நேண்டி மற்றும் அவருடைய மனைவி பவுலமி சாக்கி நேண்டி, காளான் சந்தையில் சிறிய தொழில்முனைவோருக்கு நிறைய இடம் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பட மூலாதாரம், Leena's Mushroom Farm
லிவ் லைஃப் ஹேப்பில் என்ற அவர்களுடைய அரசு சாரா அமைப்பு, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபுல்ரிடா எக்கா உட்பட 8,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு லாப நோக்கில் காளான்களைச் சொந்தமாக வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுத்தது.
"இந்தப் பெண்கள் ஏழைகள், நிலமோ சரியான வாழ்வாதாரமோ இல்லாதவர்கள்," என்கிறார் அனிர்பன் நேண்டி.
கிராமப்புறங்களில் உள்ள பல பெண்கள் கணவரை இழந்த பிறகு, தேயிலை பறிப்பதில் போதுமான பணம் சம்பாதிக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியில் உள்ளார்கள்.
"காளான்களை வளர்க்கக் கற்றுக்கொள்வது, ஒரு சாத்தியமான, சமாளிக்கக்கூடிய வேலை. பெண்கள் தங்கள் வீட்டின் ஒரு மூலையில், பகுதி நேர வேலையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ, நிலத்திற்கான தேவையின்றி வளர்க்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
அதோடு, நேண்டி தம்பதியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்களிடையே தேவையும் நிறைய உள்ளது. "குறிப்பாக டார்ஜிலிங் போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில், விரைவான வருமானம் கிடைப்பதை இது உறுதி செய்கிறது," என்று அனிர்பன் நேண்டி விளக்குகிறார்.
காளான் மூலம் கிடைக்கும் அந்தக் கூடுதல் வருமான உண்மையாகவே வாழ்வை மாற்றும்.
"இந்தப் பெண்கள் தங்கள் வீட்டில் பேரம் பேசும் ஆற்றலைப் பெற்று, முடிவெடுப்பவர்களாக மாறிவிட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பெண் தன் மகளுக்குச் சிறு வயதிலேயே திருமனம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஏனெனில், காளான் வளர்ப்பின் மூலம் தனது மகளின் கல்விக்கு அவரால் செலவு செய்ய முடிந்தது," என்கிறார் அனிர்பன் நேண்டியின் மனைவி பவுலமி சாக்கி நேண்டி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













