சென்னையில் சொந்த வீடு வாங்க இது சரியான தருணமா?

சென்னை - சொந்த வீடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதார மந்தநிலை காரணமாக பெரும்பான்மையான மக்கள் புது வீடு வாங்குவம் திட்டத்தை ஒத்திவைத்தனர். இப்போது ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் வீடு வாங்க இது சரியான தருணம்தானா? அந்தத் துறையின் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? வீடு வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.

மெட்ரோ நகரங்களில் நிலைமை என்ன ?

பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தங்களுடைய சேமிப்பு நிலையானதாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு முதல் தேர்வாக இருப்பது வீடு வாங்குவது தான். சொந்தவீடு இருந்தால் பெருந்தொற்று உள்பட சவாலான காலகட்டத்தை சமாளித்து விடலாம் என்ற எண்ணமும் மக்களிடத்தில் தோன்றியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 1 லட்சம் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள், ஹைதாராபாத்தில் 74 ஆயிரம் வீடுகள், சென்னையில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் விற்பனைக்கு தயாராக இருக்கிறது. நாட்டில் மெட்ரோ நகரங்களில் மட்டும், இப்படியாக 32 சதவீத கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

நம் நாட்டில் விற்பனையாகாத புதிய வீடுகள் டெல்லியில் 18 சதவீதம் இருக்கிறது. பூனேவில் 14 சதவீதமாக இருக்கிறது. ஆனால் சென்னையில் இது 8 சதவீதம் மட்டுமே. காரணம் சென்னையில் வீடு வாங்குவதை மக்கள் சிறந்த முதலீடாக கருதுகிறார்கள்.

குறிப்பாக தென்சென்னையில் Higher End Flats - கான தேவையும் அதிகரித்து வருவதால் மக்கள் அவற்றை வாங்க ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளதாக. குறிப்பாக தென் சென்னை ஓஎம்ஆர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் தெருக்கள் விசாலமாக இருப்பதால் பார்க்கிங் பிரச்னை இல்லாமல் இருக்கிறது. மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பலவும் இந்த பகுதிகளில் இருப்பதால் அங்கு வேலை செய்யும் பெரும்பாலோனோர் இந்த பகுதிகளில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் அடுத்த வருடம் வீடுகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் இப்போதே தங்களின் சேமிப்பை வீடுகளின் மீது போட்டால் நிலையானதாக இருக்கும் என்று கருதுவதாக கூறுகிறார் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தென் மைய தலைவர் சாந்தகுமார்

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவது சிறந்ததா? நிபுணர்கள் சொல்லும் காரணம் என்ன ?

சென்னையில் இப்போது கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை மக்கள் வாங்கினால் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் குமார் ராஜப்பா. காரணம் கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக கட்டுமானத் துறையில் மணல், ஜல்லி, இரும்பு போன்றவற்றின் விலை உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வு போன்றவை இனி புதிதாக கட்டும் வீடுகளின் விலையில் எதிரொலிக்கும். ஆனால் கடந்த 2 வருடங்களில் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விலை முன்பே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் விற்பனைக்கு வரும் போது பில்டர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க சில லட்சங்கள் குறைத்து வீடுகளை விற்பனை செய்து விடுகின்றனர்.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட பல்வேறு வசதிகளையும் பில்டர்கள் செய்து கொடுக்கிறார்கள். மக்கள் நேரிடையாக பார்வையிட்டு தங்களுக்கு ஏற்ற வீடுகளை தேர்வு செய்கிறார்கள்.

அதிலும் சென்னையில் பல கட்டுமான நிறுவனங்கள் 2013 முதல் 2020 வரை விற்பனை செய்ய வீடுகளின் எண்ணிக்கையை கடந்த ஒரே வருடத்தில் விற்றுமுடித்திருப்பதாக கூறுகிறார் குமார் ராஜப்பா.

சென்னை - சொந்த வீடு

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் கடந்த 2 வருடங்களில் வீடுகளின் விலை உயர்ந்திருக்கிறதா?

சென்னையை பொறுத்தவரை கடந்த 2 வருடங்களில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக கூறுகிறார் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தின் தென் மைய தலைவர் சாந்தகுமார்.

உதாரணமாக டி நகரில் 2021 மார்ச் மாதம் 4 கோடி ரூபாயாக இருந்த ஒரு கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு, 2022- இல் 5 கோடியாக உயர்ந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

ஹயர் எண்ட் அடுக்குமாடி குடியிருப்புகள் 1 சதுர அடி 10000 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை ஆகிறது. அடுத்த வருடம் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வளர்ந்து வரும் இடங்களில் ஒன்றாக கருதப்படும் ஓஎம் ஆர் பகுதிகளில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 2BHK வீடுகள் 50 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை விற்பனை ஆகிறது.

1000 சதுர அடி கொண்ட வீடுகள் இப்போது கிண்டியில் 70 to 75 லட்சம் வரையும் , மேடவாக்கத்தில் 55 லட்சம் முதல் 65 லட்சம் வரையும்,

பல்லாவரத்தில் 80லட்சம் முதல் 90 லட்சம் வரையும், அடையார் பகுதியில் 1கோடி 80 லட்சம் முதல் வீடுகள் விற்பனைக்கு இருக்கிறது.

மேலும் திருமழிசை பகுதியில் 45 லட்சம் முதல் 50 லட்சம் வரையும்.

மாதவரம் பகுதியில் 50 லட்சம் முதல் 55 லட்சம் வரையிலும், கேளம்பாக்கம் - 55 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலும் ரெட்ஹில்ஸ் பகுதியில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இது அனைத்தும் மெயின் ஏரியாக்களில் உள்ள விலை மட்டுமே. இந்த பகுதிகளை சுற்றி 4 முதல் 6 கிலோமீட்டர் வரையில் உட்கட்டமைப்பு வசதிக்கு ஏற்றவாறு வீடுகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.ஆனால் இனி புதிதாக வீடு கட்டும் திட்டத்தில் மக்கள் முதலீடுகளை செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக 5 முதல் 10 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கட்டுமானத் துறையினர் கூறுகிறார்கள்.

சென்னை - சொந்த வீடு

பட மூலாதாரம், Getty Images

காரணம்.. கடந்த 2 வருடங்களில் வீடு கட்டும் கட்டுமான செலவு 40 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.இனி புதிதாக வீடு கட்டும் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதன் காலத்தன்மைக்கு ஏற்ப கட்டுமான செலவுகள் உயர்ந்து கொண்டே செல்லும். அதனால் இனி வருங்காலங்களில் புதிய வீடுகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சென்னையில் மக்கள் வீடு வாங்க இது சரியான தருணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதுவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகளான மேடவாக்கம்,வளசரவாக்கம், போரூர், பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, வேளச்சேரி, ஓஎம்ஆர் போன்ற பகுதிகளில் வீடு வாங்குவது வருங்காலத்தில் சிறந்த முதலீடாக இருக்கும் என்கிறார் தனியார் பில்டர் நிறுவன தலைவர் குமார் ராஜப்பா.

அதிலும் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து விரிவடைந்து வருவதால் பரவலான வளர்ச்சி அடுத்த வருடங்களில் நிகழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் நிலம் மற்றும் வீடு வாங்க இது சரியாக தருணம் என்கிறார் அவர்.

வீடு வாங்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

வீடு வாங்கும் இடம் DTCP அல்லது CMDA அங்கீகரிக்கப்பட்ட இடமாக இருந்தால் மட்டுமே வங்கி மூலம் வீட்டுக்கடன் கிடைக்கும். ஆகையால் வீடுவாங்கும் போது உங்களிடம் கொடுக்கப்பட்ட முழு டாக்குமெண்ட் விவரங்களையும் சட்டபூர்வமாக ஒரு வழக்கறிஞரிடம் சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சென்னை - சொந்த வீடு

பட மூலாதாரம், Getty Images

அபார்ட்மெண்ட் வீடு வாங்கும் போது UDS ( Undivided Share ) 50 % மேல் இருந்தால் வரும்காலத்தில் அது அதிக லாபம் கொடுக்கும்.

வங்கியில் லோன் பெறுவதற்கு உங்கள் சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 700 புள்ளிகள் இருக்க வேண்டும். 800 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் மிக எளிதாக உங்களுக்கு வங்கிக்கடன் உங்களுக்கு கிடைக்கும். ஆகையால் கட்டி முடிக்கப்படாத கடன் ஏதாவது இருந்தால் அதை கட்டி முடித்துவிட்டு வீட்டு கடனிற்கு விண்ணப்பித்தல் நல்லது. ஒருவேளை சில வங்கிகளில் கடன் கட்டாமல் விடுபட்டிருந்தால் உங்கள் சிபில் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் வங்கியில் எந்த கடன் வாங்கினாலும் அதை குறித்த நேரத்தில் கட்டி முடித்துவிடுவது அவசியம்.

பெண்கள் பெயரில் வீட்டுக்கடன் வாங்கினால் குறைந்த வட்டி விகித பலன்களை பெறலாம்.வங்கி கடன் விண்ணப்பிக்க கடைசி 3 மாத பே ஸிலிப், பெயர் மற்றும் அக்கவுண்ட் விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கும் போது எளிதாக கடன் கிடைக்கும்.

வங்கியில் கடன் பெற்று வீடு வாங்கும் போது வரும் காலத்தில் பணவீக்கம் உயர்ந்தாலும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் பெருமளவில் உயரும் வாய்ப்புகள் குறைவு. அதனால் நடுத்தர குடும்பங்களுக்கு வீட்டுக்கடன் ஒரு வரப்பிரசாதம் என்கிறார் பில்டர் குமார் ராஜப்பா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: