You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானா அரசியல்: தமிழிசையின் மகளிர் தர்பாரால் தீவிரமாகும் ஆளுநர், அரசு மோதல்கள்
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளநந்தரராஜனுக்கும் மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் இடையே பல்வேறு அரசு நிர்வாக விவகாரங்களில் இணக்கமான சூழல் நிலவாத நிலையில், ஜூன் 10ஆம் தேதி ஆளுநர் அழைப்பு விடுத்த மகளிர் தர்பார் நிகழ்ச்சி, அம்மாநிலத்தில் அரசியல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. சமீபத்தில் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சம்பவம் மாநிலத்தை உலுக்கிய வேளையில், மக்கள் தர்பார் என்ற பெயரில் பெண்களை பிரத்யேகமாக அழைத்த தமிழிசை அவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன நடக்கிறது தெலங்கானாவில்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும் வேளையில், மக்களை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
"பிரஜா தர்பாரின் ஒரு பகுதியாக, ஜூன் 10ஆம் தேதி பகல் 12 மணி முதல் 1 மணி வரை ராஜ்பவனில் பெண்களின் குரல்களைக் கேட்கும் வகையில் 'மகிளா தர்பார்' நிகழ்ச்சிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்யவுள்ளார். கவர்னரை வந்து சந்திக்க விரும்பும் பெண்கள், 040-23310521 என்ற எண்ணையோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ அப்பாயின்ட்மென்ட் பெற வேண்டும்" என்று ராஜ் பவனில் இருந்து கடந்த புதன்கிழமை ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
இத்தகைய அறிவிப்பு வெளிவந்தவுடன் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்தனர். ஆளுநர் தமிழிசை தமது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்தனர். இது ஆளுநர் அலுவலகத்துக்கும் முதல்வர் அலுவலகத்துக்கும் இடையிலான பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கும் என்று சில தலைவர்கள் தெரிவித்தனர்.
அறிக்கை கேட்ட ஆளுநர்
தெலங்கானாவில் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் காரில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் அரசின் விசாரணை நிலவரம் குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிக்கை கேட்டார்.
கடந்த காலங்களில் சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான கொலைகள், முதுகலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீட்டில் ஊழல், காமரெட்டியில் ரியல் எஸ்டேட் நிறுவனர் மற்றும் அவரது தாயார் தற்கொலை, கம்மத்தில் ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான சம்பவங்களிலும் தமிழிசை மாநில அரசிடம் அறிக்கை கேட்டார். இந்த சம்பவங்கள் அனைத்திலும் காவல்துறை அதன் விசாரணையை சரிவர மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டைப் பல தரப்பில் இருந்தும் எதிர்கொண்டிருந்தது.
தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்ற பிறகு தமது அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் ஆலோசனைகள்/குறைகள் பெட்டியை நிறுவியிருந்தார். அதில் போடப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் தொடர்ச்சியாக மக்கள் தர்பாரை கூட்டும் தமது விருப்பத்தை தமிழிசை வெளிப்படுத்தியிருந்தபோதும், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு வெளியான அடுத்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டனர். அதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகிளா தர்பாரில் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்றவர்களிடம் தெலங்கு மொழியிலும் ஆங்கிலத்திலும் தமிழிசை பேசினார்.
அப்போது தமிழிசை, "இந்த அரசு, ஆளநருக்கு தர வேண்டிய சம்பிரதாய மரியாதையை அலட்சியப்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அதைப் பற்றி கவலைப்பட்டேன். இப்போது அது எனக்குப் பழகிவிட்டது. அதனால் அதைப் பொருட்படுத்தவில்லை. அரசாங்கம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) பின்பற்ற வேண்டும். மக்கள் சார்பாக ஆளுநர் அலுவலகம் அனுப்பும் கடிதங்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஜூப்ளி ஹில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதுவரை அதற்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை," என்று தெரிவித்தார்.
திடீர் மகளிதா தர்பார் ஏன்?
மேலும் அவர், "அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருக்க நான் விரும்புகிறேன். கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பான செய்தியை அறிந்த பிறகு இந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பாக உடனே நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்," என்று கூறினார்.
இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜனிடம் பிபிசி தமிழ் பேசுகையில், "மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து நீங்கள் அரசியல் செய்வதாக ஆளும் தரப்பு கூறுகிறதே," எனக் கேட்டோம்.
"எனக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. இதுபோன்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ் பவனுக்கு அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் உள்ளன," என்று தமிழிசை கூறினார்."நான் ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் துன்பத்தில் இருக்கும்போது என்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது. நான் பதவியில் இருக்கும்வரை மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப் பாடுபடுவேன். மக்களுக்காக நான் பணியாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் சார்பாக நான் போராடுவதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. வலிமையான சக்தியாக பெண்களை ஆதரித்துத் துணை நிற்பேன். தெலங்கானாவில் பெண்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்," என்று தமிழிசை மேலும் தெரிவித்தார்.
ஆளும் கட்சியுடன் கைகோர்த்த காங்கிரஸ்
இதேவேளை, ஆளுநரின் இந்த நடவடிக்கை ஆளும் டிஆர்எஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பிலிருந்தும் எதிர்வினையை ஏற்படுத்தியது. மாநில அமைச்சரவையின் வழிகாட்டுதலின்றி சுதந்திரமாக ஆளுநர் செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட வேண்டும் என அந்த இரு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களான விவேகானந்தும் ஜக்கா ரெட்டியும் தெரிவித்தனர்.
டிஆர்எஸ் எம்எல்ஏ கேபி விவேகானந்த், தமிழிசை கூட்டிய மகிளா தர்பாரை அரசியல் உள்நோக்கம் கொண்ட கூட்டம் என்று அழைத்தார்.
மேலும், "முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் அனைத்து டிஆர்எஸ் தலைவர்களும் அரசியலமைப்பு அமைப்பின் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர். ஆனால் தமது இருப்பை ஆளுநர் வாயிலாகத் தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி முயல்கிறது. தமிழிசை ஆளுநராக பதவி வகிக்கும்போது தமது அரசியல் ஆசைகளை அவர் உதறித் தள்ளவேண்டும். தாம் வகிக்கும் பதவிக்கான 'லட்சுமண ரேகை' எது என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும்," என்று விவேகானந்த் வலியுறுத்தினார்.
அதோடு, "மக்கள் எங்களை நம்பியே எங்களுடைய கட்சிக்கு வாக்களித்தனர். நாங்கள்தான் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, தமது மாநிலத்தில் ஆளுநராக இருந்த கமலா பெனிவால், இதுபோன்ற 'பிரஜா தர்பார்'களை நடத்தியபோது அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்தார்," என்று விவேகானந்த் நினைவுகூர்ந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ டி ஜக்கா ரெட்டி, மகிளா தர்பார் நடத்தப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகத் தெரிவித்தார்.
இது பிரதமர் மற்றும் பாஜக தேசிய தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகவே பார்க்கிறோம். மகிளா தர்பார் எந்தப் பலனையும் தராது. அது பிரச்னைகளை அரசியலாக்குவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் நேர்மையானவராக இருந்தால், தம்மை மரியாதை குறைவாக நடத்தக் காரணமாக இருக்கும் நெறிமுறை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஜக்கா ரெட்டி தெரிவித்தார்.
இவர்களின் குற்றச்சாட்டுகள் பற்றி தமிழிசை செளநந்தரராஜனிடம் பேசியபோது, "மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அவர்களிடையே நம்பிக்யையூட்ட மாநிலத்தின் முதல் குடிமகனான ஆளுநருக்கு பொறுப்பு உள்ளது. பல வழக்குகளில் காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். அதைச் சரி செய்யவேண்டியது அரசின் பொறுப்பு. அதைச் சுட்டிக்காட்ட ஆளுநரான எனக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. என்னைச் சீண்டிப் பார்ப்பதை விட்டு விட்டு, மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆளும் அரசில் இருப்பவர்கள் முனைப்பு காட்ட வேண்டும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்