You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயஸ்ரீ கதிரவேல்: தமிழ்நாடு தலித் பெண் ஆடை தொழிலாளியின் கொலை சர்வதேச அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்த உதவியது எப்படி?
- எழுதியவர், நந்தினி வெள்ளைசாமி
- பதவி, பிபிசி தமிழ்
திண்டுக்கல் மாவட்டத்தின் வடமதுரை வட்டாரத்தில் உள்ள ஒரு ஊராட்சி தென்னம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு அரசு வேலையில் அமர வேண்டும் என்பது கனவு. தந்தை கொத்தனார், தாய் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர். வீட்டில் ஏழ்மை நிலைதான்.
தன் படிப்புச் செலவை தானே கவனித்துக் கொள்ள வேண்டி, வேடசந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையான 'நாச்சி அப்பேரல்ஸ்'இல் (Nachi Apparels) வேலைக்கு சேர்கிறார். இந்த வேலையிலிருந்து வரும் 7,000 ரூபாய் மாத வருமானமே தன் படிப்புக்கு உதவும் என்பதால், ஒரு ஷிப்ட் வேலைக்கும், ஒரு ஷிப்ட் கல்லூரிக்கும் சென்று வந்துள்ளார்.
இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி நிறுவனமான 'ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்'க்கு சொந்தமான (Eastman Exports) இந்த ஆடை தொழிற்சாலையின் முதன்மை வாடிக்கையாளராக உலகளாவிய ஆடை பிராண்டான 'ஹெச்&எம்' (H&M) இருக்கிறது.
இளங்கலை முடித்த ஜெயஸ்ரீ, மேல்படிப்புக்காக எம்.ஏ. தமிழ் படிக்க அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பித்து, 2020 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கொரோனா காரணமாக முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆன்லைன் மூலம் பயின்று வந்தார். வேலை, படிப்பு, குடும்பம் என போய்க்கொண்டிருந்தது ஜெயஸ்ரீயின் வாழ்க்கை.
2021 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார் ஜெயஸ்ரீ.
அன்றிரவு வரை ஜெயஸ்ரீ வீட்டுக்கு வராததால் அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பிறகு நடந்தவை ஜெயஸ்ரீயின் குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தின.
ஜனவரி 5ஆம் தேதி தொழிற்சாலையிலிருந்து வெகுதொலைவில் உள்ள சிறிய மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஜெயஸ்ரீ சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள் 6ஆம் தேதி, 'நாச்சி அப்பேரல்ஸ்' தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்துவந்த 25 வயதான தங்கதுரை என்பவர், ஜெயஸ்ரீயை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இது தொடர்பான வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
"வேலைக்குப் போனவள சடலமாத்தான் பார்த்தோம்"
தன் மகள் குறித்து 'பிபிசி தமிழிடம்' பேசிய ஜெயஸ்ரீயின் தாயார் முத்துலட்சுமி, "என் மக நல்லா படிக்கும். சிம்பிளா தான் இருப்பா, பொட்டு கூட வச்சிக்க மாட்டா. குடும்ப கஷ்டத்துனால கம்பெனிக்கு வேலைக்குப் போச்சு, அரசு வேலை வாங்கணும் என்பதுதான் அவளுடைய கனவு. வேலைக்கு போய் சம்பாதித்து அதற்குப்பிறகு பின்னர் கல்யாணம் செஞ்சிக்குறேன்னு சொன்னா.
புத்தாண்டுக்கு வேலைக்கு போனவளை 5 நாட்கள் கழித்து சடலமாகத்தான் பார்த்தோம். அந்த சமயத்தில், கொஞ்ச நாளாவே நல்ல மழை பெஞ்சதால, என் பொண்ணு உடல்தானான்னு உறுதியா சொல்ல முடியல. புத்தாண்டுக்கு திருவிழாவுக்கு எடுத்த டிரெஸ்ஸத்தான் போட்ருந்தா. அத வச்சித்தான் என் பொண்ணுன்னு கண்டுபிடிச்சோம். எங்க சாமிதான் என் பொண்ண அன்னைக்கு அடையாளம் காமிச்சுச்சு," என கூறினார்.
மழையில் ஜெயஸ்ரீயின் உடல் மிகவும் சிதைந்து விட்டதால், ஜெயஸ்ரீ கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை பிரேத பரிசோதனையில் சோதிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கைதான தங்கதுரை பணி ரீதியாக பலமுறை ஜெயஸ்ரீக்கு தொல்லை கொடுத்து வந்ததாக அவரது தாய் முத்துலட்சுமி தெரிவித்தார்.
ஐரோப்பா, அமெரிக்கா என உலகளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும், ஹெச் & எம் போன்ற சர்வதேச பிராண்டுகள் வாடிக்கையாளராக உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிற்சாலையில், இளம்பெண் ஒருவர் அங்கு பணிபுரிந்த ஒருவரால், கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம், இதுபோன்ற பெருநிறுவன தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்பியது.
கைது செய்யப்பட்டவர் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, பெண்கள் பாதுகாப்பு, பணி பாதுகாப்பையும் கடந்து, சாதிப் பிரச்னையாகவும் இந்த கொலை பார்க்கப்பட்டது.
2013இல் தொடங்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 11,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள TTCU (Tamilnadu Textile and Common Labour Union) யூனியத்தின் தலைவர் திவ்யா ராகிணி, இந்த விவகாரத்தை சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்று ஜெயஸ்ரீ கொலைக்கு நீதி கிடைக்க முன்முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த யூனியனில் உறுப்பினராக இருந்தவர் ஜெயஸ்ரீ. இந்த யூனியனுடன் ஆசிய அளவில் பல்வேறு நாடுகளில் ஆடை தொழிலாளர்கள் யூனியன்கள் பலவற்றின் கூட்டமைப்பான AFWA (Asia Floor Wage Alliance) மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர் உரிமைகளுக்காக இயங்கும் GLJ (Global Labour Justice) இணைந்து கொண்டன.
உலகரங்கில் ஒலித்த Justice for Jaysree
மூன்று அமைப்புகளும் இணைந்து, இத்தகைய உலகளாவிய பிராண்டுகளின் சப்ளையர் யூனிட்டுகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பு குறைபாடுகள், சாதிய பிரச்னைகள் குறித்து உலகளவில் பிரசாரத்தை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்தனர்.
ஜெயஸ்ரீ கொலை குறித்து பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட சுமார் 97 நாடுகளை சேர்ந்த 120 தொழிலாளர் சங்கங்கள் உறுதுணையாக நின்றனர். ஸ்பீக்கிங் டூர் என்ற பிரசாரம் மூலம் ஜெயஸ்ரீ கொலை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். 'Justice for Jaysree' என்ற குரல் உலகம் முழுவதிலும் ஒலிக்கத் தொடங்கியது. மேலும், பல்வேறு தலித்திய அமைப்புகள், பெண்ணிய அமைப்புகளும் இந்த பிரச்சாரத்திற்கு வலு சேர்த்தன.
இத்தகைய ஆடை தொழிற்சாலைகள் பெரும்பாலான பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினாலும், சர்வதேச ஆடை பிராண்டுகளின் கண்களுக்கு இவர்கள் தெரிவதில்லை என்பதே இந்த பிரசாரத்தின் குரலாக இருந்தது. பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள், வேலைப்பளுவை அனுபவிக்கும் பெண்களை இந்நிறுவனங்கள் அடையாளம் காண வேண்டும் என்பதே 'Justice For Jaysree' பிரசாரம்.
மேலும், 'நாச்சி அப்பேரல்ஸ்' தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் சிலர் தங்கள் அடையாளத்தை மறைத்து, தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை 'கார்டியன்' (Guardian) இதழுக்கு பகிர்ந்துகொண்டது, இந்த பிரசாரத்திற்கு வலுசேர்த்தது. அதில், ஜெயஸ்ரீ கொலையில் கைதானவர் மீதும் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு இடையேயும் ஆன்லைன் வாயிலாகவும் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்த பெண்கள், ஏப்ரல், 2021இல் 'Don't Kill Me On Fashion' என்ற பதாகைகளுடன் ஜெயஸ்ரீ மரணத்திற்கு நீதி கேட்டனர்.
'பாலின ரீதியிலான வன்கொடுமைகளுக்கு முடிவுகட்ட ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹெச் & எம் இரண்டும் செயல்படுத்தத்தக்க ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என," அமெரிக்காவின் நியூயார்க்கில் நவம்பர், 2021 இல் நடைபெற்ற பிரசாரத்தில் TTCU உறுதிபட வலியுறுத்தியதாக, 'தி ஸ்க்ரோல்' இணையதளத்தில் இது குறித்து வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஓராண்டுக்கும் மேல் நடந்த உலகளாவிய பிரச்சாரம், போராட்டத்தின் விளைவாக, கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ், ஹெச் & எம் நிறுவனங்கள் மற்றும் TTCU, AFWA, GLJ ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, 'பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான திண்டுக்கல் ஒப்பந்தத்தை' கையெழுத்திட்டன.
'நாச்சி அப்பேரல்ஸ்' ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 5,000 பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல்கள், பணி பாதுகாப்பு, புலம்பெயர் தொழிலாளர் நலன்கள் குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜெயஸ்ரீயின் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தின் பெயரில் இந்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
- தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்களின் ஒவ்வொரு வரிசைக்கும் TTCU யூனியனை சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளர் (Floor Monitor) நியமிக்கப்படுவர். இந்த கண்காணிப்பாளர்களுக்கு பாலியல் புகார்களை எப்படி அடையாளம் காண்பது, அதனை எப்படி தீர்ப்பது, புகார் கொடுக்கும் நபருக்கு ஏதேனும் எதிர்வினை வந்ததா என்பதை எப்படி கண்டறிவது, தீர்க்க முடியா பிரச்னைகளில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது எப்படி உள்ளிட்ட தகுந்த பயிற்சி வழங்கப்படும்.
- சப்ளையர் யூனிட், வாடிக்கையாளர், யூனியன் என மூன்று தரப்பிலும் பிரதிநிதிகள் கொண்ட ஒரு உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் (Oversight committee) அமைக்கப்படும். AFWA, GLJ இரு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இருப்பார்கள். குறிப்பிட்ட புகாரில் பிரச்னை தீர்க்கப்படாவிட்டாலோ, அல்லது வேறு வடிவத்தில் பிரச்னை தொடர்ந்தாலோ, Floor Monitor, ஐசிசியை தாண்டி அதனை கவனிக்க இந்த கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
- தொழிற்சாலையின் அனைத்து மட்ட பணியாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் குறித்தும், பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு சட்டம் (POSH) குறித்தும் பயிற்சி வழங்கப்படும். நிர்வாகமே பயிற்சிக்கான செலவை ஏற்கும், பயிற்சி நாளன்று பணியாளர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி வழங்கப்படும்.
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை (International Labour Organisation convention) 190-ன்படி பாலியல் துன்புறுத்தலின் விளக்கத்தை மாற்ற வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
"இது சாதாரணமாக நடக்கவில்லை"
ஒரு சிறிய கிராமத்தில் நிகழ்ந்த பெண்ணின் கொலை, சர்வதேச தளத்தில் எதிரொலித்தது சாதாரணமானதல்ல என்கிறார், TTCUஇன் தலைவர் திவ்யா ராகிணி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது சாதாரணமாக நடக்கவில்லை. ஜெயஸ்ரீ இளம்பெண் என்பதால், காதல் தகராறால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பலரும் கூறினர். ஆனால், இத்தகைய தொழிற்சாலைகளில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம்.
ஆடை தொழிலில் சப்ளையர் யூனிட்டுகளைவிட 80 சதவீத லாபத்தை பிராண்டுகள் தான் அடைகின்றன. சப்ளையர் யூனிட்டுகள் அல்ல. எனவே, சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். மற்ற நாடுகளில் உள்ள ஹெச்&எம் நிறுவனத்தின் சப்ளையர் யூனிட்டுகளின் யூனியன்களிடம் பேசினோம். அங்கும் இதேமாதிரியான பிரச்னைகள் உள்ளன. இதுவொரு பொது பிரச்னை.
தொழிலாளர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியிருக்காது. தலித்திய அமைப்புகள் பக்கபலமாக இருந்தன. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஏற்கெனவே எங்களிடம் புகார்கள் வந்துள்ளன. ஆனால், அதனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.புகார்களை அளித்தால் வேலை போய்விடும் என்ற பயம் முன்பு இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் அந்த பயம் களையப்பட்டுள்ளது" என கூறினார்.
"ஜெயஸ்ரீயின் தம்பி மீது பொய் வழக்கு ஒன்றைகூட அந்நிறுவனம் போட்டது. உறவினர்களும் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு பக்கபலமாக இல்லை. அவருடைய வீட்டில் உள்ளோரை மிரட்டினர். தொழிலாளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சித்தனர். அவர்கள் அனைவரும் உறுதியாக நின்றதாலேயே இது சாத்தியமானது. ஜெயஸ்ரீயின் தாய் - தந்தை இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள். இதற்காகவே அவருடைய தாயை அவரின் குடும்பத்தினரும், ஊரும் ஒதுக்கிவைத்துள்ளது. இத்தகைய பாதிப்பில் வளர்ந்த ஜெயஸ்ரீக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம். அவர்கள் ஊரில் பட்டப்படிப்பை முடித்தது எனக்கு தெரிந்து ஜெயஸ்ரீதான்" என்றார் திவ்யா.
எல்லா நிறுவனங்களிலும் ஐசிசி 'காகிதப் புலி' தான். நான் ஒரு 9 ஆலைகளில் ஐசிசி உறுப்பினராக இருந்தேன். புகார்களை மினிட்ஸ் புத்தகத்தில் எழுத மாட்டார்கள், அப்படி எழுதினால் தங்களின் நம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களிடம் இழந்து விடுவோம் என்பார்கள். ஐசிசியிலும் வந்து வேலை சம்பந்தமான புகார்களைத்தான் பேசுவார்கள். Work Committee என்று தனியாக அமைப்பதே கிடையாது," என்றார்.
"இனியொரு பெண்ணுக்கு நடக்காது என்பதே ஆறுதல்"
27 வயதான சுதா தற்போது நாச்சி அப்பேரல்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். பி.காம் பட்டதாரியான அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "மூன்றரை ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். ஒரு நாளைக்கு சம்பளம் 310 ரூபாய். காலை 8 மணி முதல் மாலை 4.40 மணி வரை வேலை. மதிய உணவு இடைவேளை 30 நிமிடங்கள், தேநீர் இடைவேளை 10 நிமிடங்கள். வேலைப்பளு, அழுத்தம் இருக்கும். எந்த போராட்டங்களிலும் நேரடியாக பங்கேற்க முடியாது. ஜெயஸ்ரீ மரணத்திற்கு பின்னர் நிலைமை சற்று மாறியிருக்கிறது. முன்பு இங்கு சிசிடிவி கேமரா இருக்காது, இப்போது எல்லா இடத்திலும் கேமரா வைத்துள்ளனர்" என்றார்.
குறைவான உணவு இடைவேளை - தேநீர் இடைவேளை நேரம், பணி ரீதியாக சிறிய குறைகள் இருந்தாலும் எல்லோர் முன்பும் திட்டுவது போன்றவையும் இத்தகைய தொழிற்சாலைகளில் நிகழ்கின்றன என்று திவ்யா கூறினார்.
தன் மகளின் மரணம் வாயிலாக கிடைத்த இந்த சர்வதேச நீதி குறித்து பேசிய ஜெயஸ்ரீயின் தாயார் முத்துலட்சுமி, "எங்க பொண்ணுக்கு நடந்தது இனி ஒரு பொண்ணுக்கு நடக்காது என்பது மட்டுமே ஆறுதல்," என்றார்.
சர்வதேச ஆடை பொருளாதாரத்தில் பரவியிருக்கும் இத்தகைய பிரச்னைகளை அடையாளம் கண்டதற்கான முக்கிய முன்னெடுப்பாக JusticeForJayasre பிரச்சாரமும் அதைத்தொடர்ந்து வந்த ஒப்பந்தமும் உள்ளது. சாத்தியமற்ற ஒன்று சாத்தியமாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்