You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதி கயிறு விவகாரத்தில் மாணவர் கொலை: சிக்கலைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், கையில் சாதிக் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் மேஜர் அல்ல என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விவகாரத்தில் திங்கள்கிழமை (2022 மே 2ம் தேதி) பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, எல்லோருக்கும் சமத்துவமான அரசாக தங்கள் அரசாங்கம் செயல்படும் என்றும், மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பவம் நடந்த பின்னணி
பள்ளக்கால் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பள்ளாக்கால் புதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால், புதுக்குடி உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 25ஆம் தேதி இந்த பள்ளியின் 12ம் வகுப்பு (புதுக்குடி பகுதியைச் சேர்ந்த) மாணவர் அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் கையில் சாதிக் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் 12ம் வகுப்பு மாணவருக்கு காயம் ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் பாப்பாக்குடி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மேலும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உறுதிமொழி அளித்து இறந்த மாணவரின் உடலை அடக்கம் செய்ய வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாப்பாக்குடி போலீசார் அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர். பிறகு அவர்கள் மூவரும் தற்போது கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் இடைநீக்கம்
மேலும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், ஷீபா பாக்கியமேரி ஆகிய இருவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பிபிசி தமிழுடன் பேசியபோது, "நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளிமாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்ட பள்ளி நிர்வாக குழுவை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
சாதிக்கயிறு விவகாரத்தில் நடவடிக்கை என்ன?
தற்போது ஒரு கொலையில் முடிந்திருக்கும் சாதிக் கயிறு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினியிடம் கேட்டது பிபிசி தமிழ்.
"நெல்லை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் கைகளில் சாதிக் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையில் சாதிக் கயிறு கட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கையில் கயிறு கட்டி வரும் மாணவர்கள் சம்பந்தபட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களால் கண்காணிக்கப்படுகின்றனர்," என்று தெரிவித்தார் சுபாஷினி.
மேலும் இது பற்றிக் கூறிய அவர், "அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் அரசு பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரிடமும் கையில் கட்டியிருந்த கயிற்றை அகற்றச் சொல்லி ஆசிரியர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து கையில் சாதிக் கயிறுகளை கட்டி வந்து பிரச்சனை செய்தனர்.
மாணவர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்வித் துறை உத்தரவை மீறி கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையிலிருந்து கயிறு அகற்றப்படுகிறது. இருப்பினும் சில மாணவர்கள் தாங்கள் சீருடைகளில் குறிப்பிட்ட வண்ணங்களை ஏதோ ஒருவகையில் ஒட்டிக்கொள்கின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் காலை, மாலையில் மாணவர்கள் கொண்டுவரும் புத்தகப் பைகளையும் சோதனை செய்து அதில் சாதி அடையாளங்களுடன் இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
நாளை மறுநாள் பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் பொது தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து மற்று மாணவர்களின் பெற்றோருடனான ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
கவுன்சலிங் தர நடவடிக்கை - அமைச்சர் மகேஷ்
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ''பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது," என்று தெரிவித்தார்.
"தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. திருநெல்வேலியில் சாதிக் கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.
அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. மாணவர்களும் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும்.
இரண்டு ஆண்டுகள் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மோதிக்கொண்டார்களா? ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது என்றும் மகேஷ் கூறினார்.
இது மாதிரியான சம்பவங்களை தடுக்க யுனிசெஃப் மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுளது.'' என்றார் அவர்.
சாதிக் கயிறு கட்டத் தடையும், பின்வாங்கலும்
கடந்த அதிமுக ஆட்சியில், 2019ம் தேதி ஜூலை 30ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார் தமிழ்நாடு கல்வித் துறை இயக்குனர் . அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கயிறுகளை அணிந்து வருவதாகவும் 2018ஆம் ஆண்டைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் இதனைப் பார்த்து அரசுக்குத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவி, மஞ்சள், பச்சை வண்ணங்களில் அணியப்படும் இந்தப் பட்டைகள், கயிறுகள், நெற்றியில் வைக்கும் பொட்டு ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்துவதோடு, அவற்றை வைத்து ஒன்று சேர்வதாகவும் கூறப்பட்டிருந்தது.
உடனடியாக தலைமைக் கல்வி அதிகாரிகள் இம்மாதிரிப் பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரிகளுக்கு தகுத்த உத்தரவை இடுவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றிக்கை ஊடகங்களில் வெளியானதை அயடுத்து பா.ஜ.க தலைவர் எச். ராஜா, "கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
பாஜகவின் எதிர்ப்பை அடுத்து அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசின் கவனத்துக்கு வராமல் இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாகவும், இந்த சுற்றறிக்கைக்கு முன்பிருந்த நிலையே தொடரும் என்று தெரிவித்தார். அதாவது சுற்றறிக்கை ரத்து செய்யப்படும் என்று அவர் கூறாவிட்டாலும், அப்படி பொருள்படும்படியே செங்கோட்டையன் பேசியிருந்தார்.
இது பற்றிய விரிவான செய்தி: 'மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை எச்சரிப்பது இந்து மதத்திற்கு எதிரானதா?'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்