மத்திய பிரதேசம்: பழங்குடியினர் படுகொலையில் பஜ்ரங் தளத்துக்கு பங்கு உள்ளதா?

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மத்திய பிரதேசத்தின் சிவ்னி மாவட்டத்தில் ஒரு கும்பலால் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினரின் குடும்பங்களுக்கு தலா ஒரு வேலை மற்றும் தலா 8,25,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநிவ அரசு அறிவித்துள்ளது. இது தவிர சம்பவத்தில் காயம் அடைந்த நபருக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்துபூர்வ தகவல் சிவ்னி மாவட்ட அதிகாரி ராகுல் ஹரிதாஸ் ஃபட்டிங் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

"கொலை விவகாரத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான விதிமுறை, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பாதுகாப்புச்சட்டம் 1989 மற்றும் மத்திய பிரதேச குடிமக்கள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 1995 ஆகியவற்றில் உள்ளது. இந்த விதியின் கீழ், இறந்தவரைச் சார்ந்த ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது," என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குராய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிம்ரியாவில் உள்ள பழங்குடியினரின் குவாரி கிராமத்தை, '20 முதல் 25' பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் திங்கள்கிழமை அதிகாலையில் நடந்தது.

அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணிக்குள்ளாக இந்த சம்பவம் நடந்தது. ஆத்திரத்துடன் ஒரு கும்பல் தனாசாய் இன்வாதி மற்றும் சாகர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்லால் பட்டி ஆகியோரைத் தாக்கியது என்று இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தெரிவிக்கிறது.

பசுவதை குற்றம் சாட்டி இருவரையும் அந்த கும்பல் தாக்கியது. இதற்கிடையே, அருகில் வசிக்கும் பிரிஜேஷ் பட்டியும் அங்கு வந்தார். அவரும் கும்பலால் குறிவைக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த பிரிஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரிஜேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் குமார் பிரதீக், பசுவைக் கொன்றதான சந்தேகத்தின் பேரில் 3 பேரை அந்த கும்பல் தாக்கியதாக கூறினார். போலீஸாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அந்த கும்பல் அவர்களை தாக்கத் தொடங்கியது. இது தொடர்பாக ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத மற்ற நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பசுமாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பசு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அந்த கும்பல் குற்றம் சாட்டியதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். பஜ்ரங் தள் உறுப்பினர் ஒருவர் பத்லாபார் காவல்துறைக்கு போன் செய்து அவர்கள் மாடுகளை கடத்துவதாக குற்றம் சாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனாசாயும் சம்பத்தும் மருத்துவமனையில் இறந்து விட்டதாக அவர் கூறினார்.

புதன்கிழமை பிற்பகல் வரை, இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு பழங்குடியினரும் உயிருடன் காணப்படுகிறார்கள்.

கொல்லப்பட்ட இரு பழங்குடியினரில் ஒருவரான தனாசாய் இன்வாதியின் மகன் ஜெய் பிரகாஷை பிபிசி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, மாவட்ட அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரி மற்றும் தாசில்தார் உட்பட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழு ஒன்று அவரது வீட்டில் இருந்தது.

ஜெய் பிரகாஷுக்கான வேலை நியமன கடிதத்தை அதிகாரிகள் கொண்டு வந்திருந்தனர். சிவ்னியில் உள்ள அரசுப் பள்ளியில் அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சம்பத்லால் பட்டியின் மகள் சுனிதாவுக்கு தினக்கூலி ஊழியராக நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஜெய் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார்.

"இரவில் திடீரென சத்தம் கேட்டது. நேரம் சுமார் அதிகாலை மூன்று மணி இருக்கும். கோடையில் நாங்கள் அனைவரும் வெளியில் முற்றத்தில் தூங்குவோம். பீதியில் நாங்கள் எழுந்தபோது அந்த கும்பல் என் தந்தையை கம்புகளால் தாக்கத் தொடங்கியது. எங்களது பக்கத்து கிராமத்தில் இருந்து சம்பத்லால் விருந்தினராக வந்திருந்தார். அவரையும் கூட்டம் அடிக்க ஆரம்பித்தது. தாங்கள் எல்லோரும் பஜ்ரங்தள் ஆட்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் போட்ட சத்தத்தை கேட்டு, பிரிஜேஷ் வந்தார். அந்த கும்பல் அவரையும் அடிக்க ஆரம்பித்தது," என்று பிபிசியிடன் அவர் கூறினார்.

என் கண் முன்னாலேயே என் அப்பாவை அடித்தார்கள். நான் செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றேன். அவரைக் காப்பாற்ற என் அம்மா சென்றபோது, அந்தக் கும்பல் அவரையும் அடித்தது. நாங்கள் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம் என்று ஜெய் பிரகாஷ் கூறினார்.

இருப்பினும், மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே, "பழங்குடியினரை தாக்கியவர்கள், பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் என்று இப்போதே கூறுவது அவசரத்தனமானதாக இருக்கும்," என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். குலஸ்தே, மாண்ட்லா-சிவ்னி பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மகாராஷ்டிரா எல்லையில் உள்ள இந்தப்பகுதியின் சாலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அர்ஜூன் சிங் போக்குவரத்தை நிறுத்தினார்.

சிவ்னியின் பஜ்ரங்தள் தலைவர் தேவேந்திர சென்னை பிபிசி தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் இந்த சம்பவத்தை 'பஜ்ரங் தளத்திற்கு எதிரான சதி' என்று அழைத்தார். பசு கடத்தலுக்கு எதிராக தனது அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பஜ்ரங் தள் என்ன சொல்கிறது?

இது மகாராஷ்டிரா மாநில எல்லை என்பதால் தினமும் மாடு கடத்தல் நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் 29 கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு முன்பும் ஒரு ஸ்கார்பியோ கார் நான்கு மாடுகளுடன் மகாராஷ்டிரா சென்று கொண்டிருந்தது. எங்கள் தொண்டர்கள் அதைப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்று அவர் மேலும் கூறினார்.

திங்கட்கிழமை நடந்த சம்பவம் குறித்துப்பேசிய அவர், தனது அமைப்பு இந்த விஷயத்தின் ஆழம்வரை செல்ல முயற்சிக்கிறது என்றார். "எங்கள் அமைப்பின் பெயர் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது ஒரு சதியாகவும் இருக்கலாம்."என்று அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த தனாசாய் இன்வாதியின் மகன் ஜெய் பிரகாஷ் பிபிசியிடம் பேசுகையில், சிவ்னியில் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், ஒட்டுமொத்த சமூகமும் அச்ச சூழலில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

மொஹ்காவில் பழங்குடி இளைஞரின் கொலை மற்றும் குவாரியில் பழங்குடியின சிறுமியின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், பழங்குடி சமூக மக்கள் பயத்தையும், பாதுகாப்பின்மையும் உணர்கிறார்கள் என்று கூறினார்.

உள்ளூர் பழங்குடியினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் என அடையாளம் கண்டுள்ளனர். பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் நாட்டில் மிக அதிகமாக மத்தியப் பிரதேசத்தில்தான் நடக்கிறது என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காங்கிரஸ் கட்சியும் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அல்லது எந்த அமைப்புடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் விஷ்ணுதத் ஷர்மா கூறினார்.

சம்பவ இடத்திலிருந்து 12 கிலோ இறைச்சியை போலீஸார் மீட்டுள்ளதாகவும், அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குராய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எஸ்.உய்கே தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :