முகமது நபி பற்றிய நூபுர் ஷர்மா பேச்சும் அரபு நாடுகளின் கொந்தளிப்பும்: பாஜக எங்கே தவறு செய்தது?

பட மூலாதாரம், Twitter/NupurSharmaBJP
- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
முகமது நபிக்கு எதிரான ஆட்சேபத்திற்குரிய கருத்துகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதாக காட்டிக்கொள்ள பாஜக முயற்சி செய்கிறது.
செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பாகிஸ்தான் மற்றும் இரான் போன்ற பல அரபு நாடுகள் இந்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் இதை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கட்சி இடை நீக்கம் செய்தது. மற்றொரு தலைவரான நவீன் ஜிண்டல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதற்குப் பிறகும் அரபு நாடுகளில் போராட்டங்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. இதனுடன், நூபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பாஜக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் கட்சி சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை கையாள்வதில், பாஜக தவறு செய்திருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தொலைக்காட்சி அறிக்கை முதல் வகுப்புவாத வன்முறை வரை
கடந்த மே 26ம் தேதி டைம்ஸ் நவ் என்ற தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், பாஜக தலைவர் நூபுர் ஷர்மா, கடைசி இறை தூதர் இஸ்லாம் நம்பும் முகமது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பிறகு, பத்திரிகையாளர்கள் முகமது சுபைர் மற்றும் ராணா அயூப் உட்பட பலர், ஷர்மாவின் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவையெல்லாம் நடக்கும் அதே நேரத்தில், கட்சியின் உயர்மட்ட தலைமை தன்னுடன் இருப்பதாக நூபுர் ஷர்மா கூறிக்கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், Twitter/NupurSharmaBJP
மே 31 ஆம் தேதி ஆப்-இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், "தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, நீ கவலைப்படாதே, நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம் என்று என்னிடம் கூறினார். மேலும் கட்சியின் மூத்த தலைமை அதாவது அது பிரதமர் அலுவலகமாக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சகமாக இருந்தாலும் சரி, அது கட்சித் தலைவர் அலுவலகமாக இருந்தாலும் சரி, அனைவரும் என்னை ஆதரிக்கிறார்கள்."என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், நூபுர் ஷர்மாவின் கருத்துகள், உத்தரபிரதேசத்தின் கான்பூரில் வகுப்புவாத வன்முறைக்கு வழிவகுத்தது, இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில், 'இவை நூபுர் ஷர்மாவின் ஆட்சேபனைக்குரிய கருத்துகளுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள், என்று கூறப்பட்டுள்ளது. முகமது நபி பற்றிய நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து, சமூக விரோத சக்திகள் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தன என்று எஃப் ஐ ஆர் தெரிவிக்கிறது.
ஆனால் இதற்குப் பிறகும் ஜூன் 4 வரை நூபுர் ஷர்மா மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அரபு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டல் ஆகியோர் மீது பாஜக ஜூன் 5ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மித்தல், இந்த ட்வீட்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் அவை உதிரி சக்திகளின் கருத்துகள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ஷர்மாவின் இடைநீக்கத்திற்கு பாஜக ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ' ஷேம் ஆன் பிஜேபி' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. பாஜகவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஹேஷ்டேகில் மக்கள் கருத்துகளைப் பதிகின்றனர்.
" அமைப்பு/கட்சி , தங்கள் வீட்டுப்பெண்களை ஓநாய்களிடம் ஒப்படைத்து ,எதிரிகளிடமிருந்து மகான் என்ற சான்றிதழைப் பெற பந்தயத்தில் இறங்கியுள்ளது. சமூகம் அதை முடிவுக்குக் கொண்டுவரும்," என்று ட்விட்டர் பயனாளர் புஷ்பேந்திர குல்ஷ்ரேஷ்ட் எழுதியுள்ளார்.
அரசு தாமதம் செய்துவிட்டதா?
அரபு நாடுகளில் நடக்கும் போராட்டங்களின் விளைவு, பொருளாதார இழப்பாகவும் வெளிவரத் தொடங்கியுள்ளது. குவைத்தின் பல்பொருள் அங்காடிகள் எதிர்ப்பைப் பதிவுசெய்து இந்திய தயாரிப்புகளை சந்தையில் இருந்து அகற்றுகின்றன என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை தெரிவிக்கிறது. .
இந்த விவகாரத்தில் இந்திய அரசும், கட்சியும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததா என்ற கேள்வி எழுகிறது.
இந்த விவகாரத்தில் அரசும் கட்சியும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றிருக்காது என்று மூத்த ஊடகவியலாளர் மதுசூதன் ஆனந்த் கருதுகிறார்.
"எந்தவித முன்யோசனையும் இல்லாமல் ஆவேசமாக இந்த பேச்சு வெளியானது. இந்திய மக்கள் பலர், அரபு நாடுகளில் பல்வேறு நிலைகளில் வேலை செய்கிறார்கள் என்று பேசும் போது யோசித்திருக்க வேண்டும். ஆனால் யோசிக்காமல் இப்படிப் பேசினார்கள். இது கண்டிக்கத்தக்கது. மேலும் அரசு முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால், அரசும் நாடும் அவமானத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கும்,"என்று அவர் கூறினார்.
அரபு நாடுகளின் எதிர்ப்பு

பட மூலாதாரம், Twitter/NupurSharmaBJP
கடந்த சில ஆண்டுகளில், செளதி அரேபியா உட்பட எல்லா அரபு நாடுகளுடனும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனும் இந்தியாவின் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
பல இந்தியர்கள் இந்த நாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்பங்களுக்கு பணத்தை அனுப்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகும்.
ஆனால் இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் எதிர்ப்புதான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரபு நாடுகள் தெரிவித்த எதிர்ப்புதான், நூபுர் ஷர்மா மற்றும் ஜிண்டல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு காரணம் என்று பாஜகவின் அரசியல் நடைமுறையை புரிந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் நம்புகிறார்.
"அரபு நாடுகளில் இருந்து வலுவான எதிர்வினை இல்லை என்றால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது. நூபுர் ஷர்மாவை எந்த அடிப்படையில் முக்கியத்துவம் இல்லாதவர் என்று அழைக்கமுடியும்? அவர் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர். 2015 டெல்லி தேர்தலில் பா.ஜ.க, அவரை அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தியது. நூபுர் ஷர்மா, பா.ஜ.க தலைவர்களின் விருப்பமான செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். முக்கியமான பிரச்னைகள் குறித்த விவாதத்தில், கட்சியின் தரப்பை முன்வைக்கும் பொறுப்பை, பா.ஜ.க அவருக்கு வழங்குகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரை விளிம்பு நிலையில் இருப்பவர் என்று கூற முடியாது,"என்று அவர் குறிப்பிட்டார்.
"இந்தப் பிரச்சனையில் அரபு நாடுகளில் இருந்து தொடர் எதிர்ப்பு வரவில்லை என்றால், இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்காது. இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகளுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளது. அங்கிருந்து இந்தியாவில் முதலீடுகள் செய்யப்படுகின்றன. இந்த நாடுகள் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார பங்காளிகள். இவ்வாறான சூழ்நிலையில், இந்த நாடுகளில் இருந்து பலத்த எதிர்வினை ஏற்பட்ட போது, தற்போதைய அரசால் அதை புறக்கணிக்க முடியவில்லை,"என்றார் ராதிகா ராமசேஷன்.
நடவடிக்கை எடுக்க பாஜக காலதாமதம் செய்ததா?

பட மூலாதாரம், Twitter/NupurSharmaBJP
மோதி மற்றும் ஷா தலைமையிலான பாஜக, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு நிலையான உத்தியுடன் பங்கேற்பதாக அறியப்படுகிறது.
பாஜக, தனது செய்தித் தொடர்பாளர் ஒருவரால் சர்வதேச அளவில் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்ட சந்தர்ப்பங்கள் குறைவு. நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க பாஜக இவ்வளவு காலம் எடுத்ததன் காரணம் என்ன?
"பாஜகவின் முக்கிய தளத்தில் இருந்தும், அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஆதரவு அமைப்புகளில் இருந்தும் இந்த கருத்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்தப் பிரச்சனையில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கட்சி நடவடிக்கை எடுக்கும்வரையில், நூபுர் ஷர்மாவின் அறிக்கையை பாஜகவின் ஆதரவாளர்கள் பாராட்டி வந்தனர். பாஜக சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்றது. பாஜக ஆதரவாளர்களின் மன உறுதியை இது உயர்த்தியுள்ளது."என்று ராதிகா ராமசேஷன் கூறினார்.
"எனவே இதுபோன்ற பேச்சுக்கள் வாக்கு வங்கியை 1-2 சதவிகிதம் அதிகரிக்கச் செய்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். மேலும் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுமட்டுமல்ல, இதுபோன்ற பேச்சுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதுபோன்ற அறிக்கைகள் இந்து-முஸ்லிம் இடையே பிரிவினையை வலுப்படுத்த வழிவகுக்கும். இது பாஜகவுக்கு அரசியல் ஆதாயத்தை அளிக்கிறது."
ஆனால் தற்போது அரபு நாடுகளின் எதிர்வினை காரணமாக நூபுர் ஷர்மாவை பாஜக வெளியேறியுள்ளதால், பாஜக ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனது ஆதரவாளர்களை சமாளிப்பது, பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக ஆதரவாளர்களின் ஒரு பெரிய பகுதியினர், அடிப்படைவாதிகளாக மாறிவிட்டனர். இவர்களை மிதவாதிகளாக ஆக்குவது பாஜகவிற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












