ரயில், பேருந்துகளில் தொடரும் அபாய பயணங்கள் - மாணவர்களைத் தூண்டும் உளவியல் காரணி எது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து வந்த நீதிதேவன் என்ற மாணவர், கடந்த 26 ஆம் தேதியன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் பயணித்துள்ளார். இந்த ரயில் திருவள்ளூர் அருகில் உள்ள வேப்பம்பட்டு-செவ்வாய்பேட்டை ரயில் நிலையங்களைக் கடக்கும்போது தண்டவாளத்தில் தவறிவிழுந்து நீதிதேவன் உயிரிழந்துவிட்டார். மாணவர் மரணத்துக்கான ஒற்றைக் காரணம், புறநகர் ரயிலின் ஜன்னலில் நின்றபடியே பயணம் செய்ததுதான்.
மாணவர் இறந்துவிட்டாலும் அவர் மேற்கொண்ட 'சாகச' காட்சிகள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அதில் நீதிதேவன் மட்டுமல்லாமல் ஐந்தாறு மாணவர்களும் ரயிலின் ஜன்னல் மீது கால் வைத்துக் கொண்டே அவ்வாறு நடந்து கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மாணவர் நீதிதேவன் மரணத்துக்கு சில நாள்கள் முன்னதாக நடந்த சம்பவம் இது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள பேரமனூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெஷுரன் துரை என்பவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து வந்தார். இவர் செங்கல்பட்டில் இருந்து வரும் புறநகர் ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்குச் செல்வது வழக்கம். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ரயிலில் தொங்கியபடியே பயணம் செய்தவர், இரும்புலியூர் அருகே மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மாணவியின் ஆபத்தான பயணம்
மாணவர்கள் மட்டுமே உயிரைப் பணயம் வைக்கும் ஆபத்தான பயணங்களில் ஈடுபடுவதில்லை. மாறாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரயில் பெட்டியில் ஓடிக் கொண்டே ரயில் ஏறும் பயண வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் பள்ளி மாணவர் ஒருவருடன் சேர்ந்து ரயில் நிலைய பிளாட்பார்மில் ஓடி வந்து துள்ளிக் குதித்து மாணவி ஒருவர் ரயில் பெட்டிக்குள் செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ரயில் நிலைய நடைமேடையில் கால்களை உரசியபடியே மாணவி மேற்கொண்ட பயணத்தை சக மாணவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள புறநகர் ரயில்கள் மட்டுமல்லாமல், அரசுப் பேருந்துகளிலும் கல்லூரி மாணவர்கள் சிலர் நடத்தும் அத்துமீறல்களை ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரால் கண்டிக்க முடிவதில்லை. மாணவர்களை நேரடியாக அழைத்து காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தாலும், அடுத்தடுத்த நாள்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்தபடியே உள்ளது. தங்களின் இந்த ஆபத்தான பயணத்துக்கு சக மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பு, சமூக வலைதளங்களில் பெருகும் ஆதரவு போன்றவையே தொடர்ந்து மாணவர்கள் தவறு செய்யக் காரணமாக இருப்பதாக உளவியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
எஸ்.பி கொடுத்த எச்சரிக்கை
அதேநேரம், இதுபோன்ற சம்பவங்களின் மீது காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூரில் இருந்து மெய்யூர் வரையில் செல்லும் அரசுப் பேருந்தில் மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர். இதையடுத்து, அதில் தொடர்புடைய மாணவரின் பெற்றோரை வரவழைத்து, ' உங்கள் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. இனிவரும் நாள்களில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது' என எச்சரித்து அனுப்பினர்.
தொடர்ந்து திருவள்ளூர் புறநகர் ரயிலில் சாகசம் செய்த மாணவியையும் மாணவரையும் திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் நேரில் வரவழைத்து எச்சரித்து அனுப்பினார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த எஸ்.பி வருண்குமார், ' நாங்கள் பலமுறை அன்பாக அறிவுரை கூறினோம். அவர்களில் சிலர் புரிந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு இந்தத் தகவல் பொருத்தமானதாக இருக்கும். அந்த மாணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.
மேலும், ' திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதம் கொண்டு வந்தாலோ, ஓடும் பேருந்து மற்றும் ரயில்களில் அபாயகரமாக பயணம் செய்வது குறித்து தெரியவந்தாலோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தவறு செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு அரசு வேலையிலும் சேரவோ, வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்கவோ முடியாது' எனவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
3 ஆண்டுகளில் 2,200 பேர் மீது வழக்கு
இதற்கு வலு சேர்க்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையும் அதிரடியான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அபாயகரமான பயணம் மேற்கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, தென்னக ரயில்வே நிர்வாகத்தின் சென்னை கோட்டம் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணம் செய்ததாகக் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,219 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 8 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில், ஓடும் ரயில்களின் படிக்கட்டியில் தொங்கியபடி பயணம் செய்ததாக 2020 ஆம் ஆண்டு 965 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு 890 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஏப்ரல் மாதம் வரையில் 364 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பல்வேறு குழுக்களை அமைத்து நடைமேடைகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அபாயகரமான பயணங்களை மேற்கொள்கிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேதனை கொடுத்த காட்சிகள்
'' ரயில்வே நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் கூடுதல் விழிப்புணர்வுடன் கண்காணிக்கின்றனர். ரயில்களில் சாசகம் செய்யும் நோக்கில் பயணிக்கும் மாணவர்களை ஆர்.பி.எஃப் போலீஸார் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். ரயிலில் ஏறிய உடன் மாணவர்கள் சிலர் அமைதியாகத்தான் இருக்கின்றனர். அதன்பிறகு சக மாணவர்கள் கொடுக்கும் உற்சாகத்தால் ஜன்னலின் மீது ஏறி சத்தம் போடுகின்றனர். இவர்களை பொதுமக்கள் எச்சரித்தாலும் கண்டுகொள்வதில்லை. இதனை நானே நேரடியாகப் பார்த்து எச்சரித்தும் அவர்கள் ரயில் பெட்டியின் உள்ளே வரவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்தது'' என்கிறார், சேலம் ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் கோபிநாத்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் இதனை இயல்பாகக் காண முடிகிறது. பிற மாவட்டங்களில் எல்லாம் இதுபோன்ற அபாயகரமான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். அதேநேரம், மெட்ரோ ரயில்களில் தானியங்கி கதவுகள் இருப்பதால் அங்கு இதுபோன்ற சாகசங்கள் நடப்பதில்லை. பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இருப்பதால் அங்கும் அமைதியாகப் பயணிக்கின்றனர். புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைப்பது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை'' என்கிறார்.
மேலும், '' சென்னையில் 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் மேற்புறத்தில் ஏறி மாணவர்கள் ஆடுகின்றனர். ரயில்வே நிர்வாகம் போதிய முயற்சிகளை எடுத்தாலும் பெற்றோர், கல்லூரி நிர்வாகம் ஆகியவை இணைந்துதான் மாணவர்களை திருத்த வேண்டும். இவ்வாறு சாகசங்களை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதர மாணவர்களும் திருந்துவார்கள்'' என்கிறார்.
அபாயகரமான சாகசத்தின் பின்னணி
''உயிர் பறிபோகும் அபாயம் அறிந்தும் மாணவர்களின் நடவடிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது?'' என கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' வளரிளம் பருவத்தினர், அந்த வயதுக்குரிய சாகசங்களை செய்கின்றனர். அபாயகரமான பயணங்களை செல்ஃபி எடுப்பது, பேருந்து, ரயில்களின் மேற்கூரைகளில் ஏறுவது, டூவீலர் மூலம் சாகசம் செய்வது எனத் தொடர்ந்து செயல்படுகின்றனர். இவ்வாறு சாகசம் செய்த மாணவர் ஒருவரை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேவை செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்திய சம்பவமும் நடந்தது. சிறையில் அடைப்பதைவிடவும் விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை அந்த மாணவரை உணர வைப்பதற்கான யுக்தி இது'' என்கிறார்.
மேலும், தங்களது செல்ஃபி வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் கிடைக்கும் விருப்பக் குறிகளே மாணவர்கள் தொடர்ந்து தவறு செய்யக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் பூர்ண சந்திரிகா, '' சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெறுவதற்கான வழி இதுவல்ல என்பதை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். இது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டிய நெடும் பயணம்.
இந்த பைக்குகள் எல்லாம் நமது சாலைகளுக்கானது அல்ல. மாணவர்களுக்கு விளையாடுவதற்கான மைதானங்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கான இடங்களை ஒதுக்க வேண்டும். சைக்கிள், ஸ்கேட்டிங் என பலவிதமான விளையாட்டுப் பயிற்சிகளைக் கொடுக்கலாம். அதன்மூலமாக அவர்களை மடைமாற்ற முடியும். அரசின் மாவட்ட மனநலத் திட்டம் மூலமாக பல்வேறு பயிற்சிகளை பள்ளி, கல்லூரிகளில் வழங்கி வருகிறோம்'' என்கிறார்.
மேலும், '' வளரிளம் பருவத்தினரிடையே, 'அடுத்து என்ன நடக்கும்?' என்ற அச்சம் இருப்பதில்லை. அதனால்தான் புதுவிதமான சாகசங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளது. அதையும் மனதில் வைத்து உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அவர்களுக்குத் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவத்தைக் கொண்டு வரவேண்டும். அனைத்து நிலைகளிலும் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும். இதன் அபாயங்களை உணரும்போது சாகச மனநிலையில் இருந்து வெளியே வருவார்கள்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












