You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஆதார் அட்டை நகலை பகிராதீர்கள்' : குறிப்பாணையைத் திரும்பப்பெற்ற இந்திய அரசு
ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதால் உங்கள் ஆதார் அட்டையின் நகலை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று எச்சரித்து வெள்ளியன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பை இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.
இந்த செய்திக்குறிப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருப்பதால் அது உடனடியாகத் திரும்பபெறப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் சாதாரண நடைமுறையைக் கடைப்பிடிக்க மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள்,'' என்று இன்று மதியம் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள அங்கீகார சூழல் அமைப்பு ஆதார் வைத்திருப்பவரின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு போதுமான அம்சங்களை வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் முக்கியத் தகவல்கள் இதோ.
1. ஆதார் அட்டையின் நகலை வழங்குவதற்கு பதிலாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும் வகையில், எண்கள் மறைக்கப்பட்ட (masked) ஆதார் அட்டையைப் பயன்படுத்தவும்.
2. https://myaadhaar.uidai.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும்போது, 'Do you want a masked Aadhaar?' என்ற தெரிவைப் பயன்படுத்தி 'மாஸ்க்டு' ஆதார் அட்டையைப் பெறமுடியும்.
3. ஒரு குறிப்பிட்ட ஆதார எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதை இணையத்தில் https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar எனும் முகவரியில் சரிபார்க்கலாம். இணையம் இல்லாமல் ஆஃப்லைனில் இ- ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது பி.வி.சி ஆதார் அட்டையில் உள்ள க்யூ.ஆர். கோடு மூலம் ஆதார் எண்ணைச் சரிபார்க்க முடியும்.
4. இ-ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய இன்டர்நெட் கஃபே போன்ற இடங்களில் உள்ள, பலரும் பயன்படுத்தும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழல் வந்தால், பதிவிறக்கம் செய்யப்பட்ட இ- ஆதார் அட்டையை அந்தக் கணினியில் இருந்து அழித்து விடவேண்டும்.
5. ஆதார் அட்டையை வழங்கும் UIDAI ஆணையத்திடம் உரிமம் பெற்ற அமைப்புகள் மட்டுமே ஆதார் எண்ணை ஒரு தனிநபரின் அடையாளத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்த வேண்டும். தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்ற அமைப்புகள் போன்றவற்றுக்கு யாருடைய ஆதார் அட்டையின் நகலையும் வாங்கி வைக்க அனுமதி கிடையாது. அவ்வாறு சேகரித்து வைப்பது ஆதார் சட்டம் 2016இன் கீழ் குற்றமாகும்.
6. ஏதாவது தனியார் அமைப்பு உங்களது ஆதார் அட்டை நகலைக் கோரினால், அவர்களிடம் UIDAI வழங்கிய பயனர் உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்