You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாட்சப் வழி டிஜிலாக்கர்: இனி ஆவணங்களை வாட்சப் மூலமே பெறலாம்... மத்திய அரசு அறிவித்தது என்ன?
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கும் டிஜிலாக்கர் வசதியை இனிமேல் வாட்சப் மூலம் பெறலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை டிஜிலாக்கர் என்ற தனி செயலியில் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த ஆவணங்களை, இனி வாட்சாப் மூலம் தேவைப்படும்போது பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
அரசு சேவைகளை மென்மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்ற வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குவது, உள் நுழைவது, குறிப்பிட்ட ஆவணங்களை தரவிறக்குவது ஆகிய சேவைகளை வாட்சாப் மூலமே பெற முடியும்.
- பேன் கார்டு (நிரந்தர கணக்கு எண் அட்டை).
- ஓட்டுநர் உரிமம்.
- சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்.
- வாகன பதிவு சான்றிதழ்.
- இரு சக்கர வண்டி காப்பீடு.
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
- 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
- காப்பீட்டுக் கொள்கை ஆவணம்.
ஆகிய இந்த 8 டிஜிலாக்கர் ஆவணங்களை வாட்சாப் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவிட் தடுப்பூசிக்கான பதிவு, சான்றிதழ் உள்ளிட்ட கோவின் சேவைகளையும் இந்த வாட்சப் வசதி மூலமே பெற முடியும்.
சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டிஜிலாக்கர் , வாட்சாப்பில் அரசு சேவை வசதி ஆகியவற்றின் மூலம் குடிமக்களுக்கு எளிமையான முறையில் டிஜிட்டல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்படுவதாக இந்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கும் டிஜிலாக்கர் செயலியில் இதுவரை 5 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது வாட்சாப் மூலம் இதை அணுகும் வசதி உருவாகியிருப்பது, குடிமக்கள் தங்கள் ஆவணங்களை அவர்களது தொலைபேசி மூலமே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகியுள்ளது.
வாட்சாப் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்துவது எப்படி?
- பயனர்கள் 'ஹாய் அல்லது `நமஸ்தே` அல்லது டிஜிலாக்கர்' என்ற செய்தியை, "9013151515" என்ற வாட்சாப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
- உங்களுக்கு டிஜிலாக்கர் சேவைகள் வேண்டுமா அல்லத் கோவின் சேவைகள் வேண்டுமா என்று கேள்விப் பட்டியல் தொடங்கும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து வேண்டிய சேவையை நாம் பெற முடியும்.
- டிஜிலாக்கரில் உங்களுக்கு ஏற்கனேவே கணக்கு இருந்தால், அந்தக் கணக்கில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றின் பட்டியலை வாட்சாப்பில் பெறுவீர்கள்.
- இதிலிருந்து வேண்டியவற்றை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்