யாசின் மாலிக்: காஷ்மீர் விடுதலை கோரி ஆயுதம் எடுத்து பிறகு கைவிட்ட இவர் யார்?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
1991-ல், நான் ஸ்ரீநகருக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். பிற்பகலில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் சென்றபோது, திடீரென சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் சைக்கிள்கள், செருப்புகள் மற்றும் காலணிகளை விட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். எல்லா பக்கங்களிலிருந்தும் தோட்டாக்கள் பறந்தன. உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மக்களுக்கு கடினமாக இருந்தது. ஆனால் திடீரென தொடங்கிய வன்முறை அதேபோல திடீரென நின்றுவிட்டது. சில நிமிடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
நான் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) பதுங்கு குழிக்குள் புகுந்தேன். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கும் (ஜேகேஎல்எஃப்) ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கும் இடையே தினமும் நடக்கும் மோதலின் ஒரு காட்சி இது என்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பின்னர் என்னிடம் கூறினார்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாத இயக்கத்தில் ஏற்பட்ட திருப்புமுனையாக விடுதலை கோரிய ஜே.கே.எல்.எஃப். ஆட்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனால் கொல்லப்பட்டனர் அல்லது அதனுடன் இணைந்தனர் அல்லது களத்தை விட்டு வெளியேறினர்.
ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருந்தது. அதன் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால் சண்டையிடுவது மட்டுமின்றி காஷ்மீரை பாகிஸ்தானில் சேர்க்க வேண்டும் என்ற போராட்டத்திலும் குதித்தனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் மிகவும் சக்திவாய்ந்த தீவிரவாத அமைப்பாக மாறியது.
ஜே.கே.எல்.எஃப். தலைமை பெரும் இழப்புகளைச் சந்தித்தது. இறுதியில் 1994இல் ஆயுதங்களை கைவிட்டு, "காஷ்மீரின் சுதந்திரத்திற்காக" அமைதியான முறையில் போராடுவதாக அந்த அமைப்பு அறிவித்தது.
அப்போது, காஷ்மீருக்கு விடுதலை கோரிய ஜே.கே.எல்.எஃப்-க்கு யாசின் மாலிக் தலைமை வகித்தார். பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன், பாகிஸ்தானின் காஷ்மீரில் இருந்து சையது சலாவுதீன் தலைமையில் செயல்பட்டது.
இருவரும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தனர். 1987 சட்டப்பேரவைத் தேர்தலில், சையது சலாவுதீன் (உண்மையான பெயர் சையத் யூசுப் ஷா), வேட்பாளராக இருந்தார் மற்றும் யாசின் மாலிக் அவரது தேர்தல் முகவராக இருந்தார்.

பட மூலாதாரம், Sanjay Kaw
ஜே.கே.எல்.எஃப் அமைப்பின் ஸ்ரீநகர் பிராந்தியத்தின் முன்னாள் தளபதியான சைஃபுல்லாவும், சலாவுதீனின் தேர்தல் முகவராக இருந்தார். ஸ்ரீநகரில் இருந்து தொலைபேசியில் பேசிய சைஃபுல்லா, "யாசின் மாலிக் எனது பால்ய நண்பர். நானும் அவரும் (யாசினும்) 1987 தேர்தலில் சலாவுதீனின் வாக்குச்சாவடி முகவர்கள். அந்தத் தேர்தலில் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டோம்."
நீதிமன்றம் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு அளித்ததில் சைஃபுல்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் மீது கொலைக்குற்றம் சாட்டிய அவர், "யாசின் மாலிக் தனது அரசியல் ஆதாயத்திற்காக, எங்கள் சகாக்கள் பலரை 'அவர்கள் அனைவரும் இந்தியாவின் ஏஜெண்டுகள்' என்று கூறி படுகொலை செய்ய வைத்தார். இன்று அல்லா அவரை தண்டித்தால், அது அவர் செய்த குற்றங்களுக்கான தண்டனை. இன்று எனது சகோதரர்கள் உம்ரு கான், ஷபீர் ஹுசைன், ரியாஸ், கொலை செய்யப்பட்ட பிற நண்பர்கள் அனைவரும், ஒரு கொலைகாரனுக்கு தண்டனை வழங்கப்படுவதை சொர்க்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்," என்றார்.
"இந்த கொலைகள் 1996 இல் நடந்தன. அதிலிருந்து எனக்கும் யாசினுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடங்கியது. நாங்கள் இன்னும் நண்பர்கள்தான், ஆனால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன,"என்று அவர் மேலும் கூறினார்.
"1994 இல், இந்திய அரசுடன் சமாதான முயற்சியைத் தொடங்குவது என்ற பெயரில் அவர் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்,"என்று சைஃபுல்லா குறிப்பிட்டார்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது தாக்குதல்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறுவது 1990 இல் தொடங்கியது. அப்போது யாசின் மாலிக் தலைமையிலான ஜே.கே.எல்.எஃப் அமைப்பிற்கு இதில் முக்கிய பங்கு இருந்தது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் "காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு நாங்கள் அனைவரும் காரணம்" என்கிறார் சைஃபுல்லா.
சமீபத்தில் வெளியான 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு காரணம் என இரண்டு முக்கிய வில்லன் காட்டப்பட்டிருந்தனர். அவர்கள் பிட்டா கராட்டே, யாசின் மாலிக். 1990களிலும் இதே குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அவருக்கு 2 குற்றச்சாட்டுகளில் ஆயுள் தண்டனையும், பத்து குற்றச்சாட்டுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
"விடுதலைப் போராட்டம்" என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்திற்காக உலகம் முழுவதும் விரிவான கட்டமைப்பை அவர் அமைத்தார் என்பதும் மாலிக் மீதான குற்றச்சாட்டு ஆகும்.
ஜே.கே.எல்.எஃப்
யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவராகவும், அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இந்த அமைப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆயுதமேந்திய கிளர்ச்சியை 1989 வரையிலும் பிறகு சில ஆண்டுகள் கழித்தும் நடத்தியது. ஜம்மு காஷ்மீருக்கு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் விடுதலை வேண்டும் என்று யாசின் மாலிக் கூறிவந்தார்.
பின்னர் அவர் வன்முறைப் பாதையை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைப்பாதையை ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும், காஷ்மீர் விடுதலை பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA
ஸ்ரீநகரில் 1966ஆம் ஆண்டு பிறந்த மாலிக் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பலமுறை சிறை சென்றுள்ளார். அவர் முதல் முறையாக சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்கு 17 வயதுதான்.
1980ல் இந்திய பாதுகாப்புப் படையினரின் வன்முறையைக் கண்டு தான் ஆயுதம் ஏந்தியதாக அவர் கூறுகிறார்.
1983 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை அவர் சீர்குலைக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். அப்போதுதான் பள்ளத்தாக்கில் பொதுமக்களிடையே அவர் முதல் முதலாக அறியப்பட்டவர் ஆனார். அப்போது அவர் நான்கு மாதங்கள் சிறையில் இருந்தார்.
யாசின் மாலிக்கின் மனைவி சொல்வது என்ன?
யாசின் மாலிக் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து , 2005ல் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு தூதுக்குழுவுடன் சென்ற காலமும் இருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த இவரது மனைவி மஷால் ஹுசைன் மாலிக் அங்கு வசித்து வருகிறார். அவர் தனது கணவர் குற்றமற்றவர் என்று ட்விட்டரில் தொடர்ந்து அறிக்கைகளை அளித்து வருகிறார்.
"மோதி, யாசின் மாலிக்கை உங்களால் தோற்கடிக்க முடியாது. அவரது மற்றொரு பெயர் ஆசாதி. நியாயமற்ற நீதித்துறை பயங்கரவாதத்தின் ஒவ்வொரு அடியிலும் இந்தியா வருத்தப்படும்" என்று வியாழனற்று வெளியான நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
காஷ்மீரில் யாசின் மாலிக்கிற்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது? மூத்த காஷ்மீர் பத்திரிக்கையாளர் சஞ்சய் காவ், யாசின் மாலிக்கின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்தவர். டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் இளைஞராக இருந்த யாசின் மாலிக்கின் புகைப்படத்தையும் அவர் எடுத்துள்ளார்.
"ஷபீர் ஷா, மறைந்த சையத் அலி ஷா கிலானி போன்ற பிரிவினைவாதத் தலைவர்களைப் போலல்லாமல், காஷ்மீரில் ஒரு சில இடங்களில் மட்டுமே மாலிக்கிற்கு ஆதரவு தளம் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் அவரை இரட்டை ஏஜெண்ட் என்று நினைப்பதுதான். தனது சொந்த ஆதாயத்திற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும், அவர் சேரந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது,"என்று அவர் தெரிவித்தார். .
யாசின் மாலிக் சுதந்திரத்தை விரும்புகிறார், ஆனால் பேச்சு வார்த்தை மூலம் "1990 களில் விசாரணைக்குப் பிறகு அவர் டெல்லி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று என்னிடம் கூறினார்," என்று குறிப்பிடுகிறார் சஞ்சய் காவ். தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது டெல்லி என்ஐஏ நீதிமன்றம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









