காஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா?

பட மூலாதாரம், HULTON ARCHIVES/PHOTO DIVISION
- எழுதியவர், ஜே மக்வானா
- பதவி, பிபிசி, குஜராத்தி
இது தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் தோன்றிய நேரத்தில் நடந்தவை பற்றிய கதையாகும்.
அரசர்கள் ஆண்டு வந்த சமஸ்தானங்கள் இந்த புதிய நாடுகளோடு இணைக்கப்பட்டன.
இந்தியாவின் மேற்கில் சௌராஷ்ரா கடற்கரையில் அரசர் ஆண்டு வந்த மிக பெரியதொரு சமஸ்தானமான ஜூனாகத் அமைந்திருந்தது.
அங்கு வாழ்ந்த மக்களில் 80 சதவீதத்தினர் இந்துக்கள். ஆனால், மூன்றாம் மகாபாராத் கான் என்ற முஸ்லிம் நவாப் ஆண்டு வந்தார்.
1947ம் ஆண்டு மே மாதம் சிந்து முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான ஷானாவாஜ் பூட்டோ, ஜூனாகத் சமஸ்தானத்தின் திவானாக (நிர்வாக ஆளுநர்) நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்டும் முகமது அலி ஜின்னாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்,
ஜின்னாவின் அறிவுரைப்படி, 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி வரை இந்தியா அல்லது பாகிஸ்தானோடு சேர்வதற்கு பூட்டோ எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சுதந்திரம் அறிவிக்கப்பட்டவுடன் ஜூனாகத், பாகிஸ்தானோடு சேர்வதாக அறிவித்தது. ஆனால், ஒரு மாதமாக இந்த வேண்டுகோளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 13ம் தேதி தந்தி அனுப்பிய பாகிஸ்தான், ஜூனாகத்-ஐ நாட்டோடு இணைத்து கொள்ள ஒப்புக்கொள்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு கத்தியவார் அரசுக்கும், இந்திய அரசுக்கும் தர்மசங்கடாக அமைந்தது,
ஜூனாகத்-ஐ பயன்படுத்தி, எலிசபெத் ராணிக்கு எதிராக செயல்படுவதே ஜின்னாவின் உண்மையான விருப்பமாக இருந்தது,
காஷ்மீர் எந்த நாட்டுடன் இணையும் என ராணி கேள்வி எழுப்பினால், எந்த நாட்டுடன் இணையும் என்பது பற்றி ஜூனாகத்-தின் நவாப் முடிவு எடுக்க முடியாது; அப்பகுதி மக்களுக்கே முடிவு எடுக்கும் உரிமை உண்டு என்று இந்தியா கூறும் என்று ஜின்னா உறுதியாக இருந்தார்,
இவ்வாறு இந்தியா கூறுமானால், இதே கொள்கையை காஷ்மீரிலும் பின்பற்ற வேண்டுமென கூறலாம் என்று ஜின்னா எண்ணினார். இவ்வாறு இந்தியாவை பொறியில் சிக்க வைக்க திட்டமிட்டார்.
இது ராஜ்மோகன் காந்தி எழுதிய Patel: A Life, biography of Sardar Patel என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பாகிஸ்தானின் இந்த திட்டத்தை முறியடிப்பதே இந்தியாவின் கடமையாக இருந்தது. இந்தியாவின் உயரிய தலைவர்களாக இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் படேல் இந்த பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று.
காஷ்மீர் பிரச்சனை
1947ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி பாகிஸ்தான் தரப்பில் இருந்து 200 முதல் 300 வரையான வாகனங்கள் காஷ்மீரில் நுழைந்தன.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தை சேர்ந்த பழங்குடியின ஆண்கள் அவற்றில் நிறைந்திருந்தனர். அஃப்ரிடி, வாஸிர், மக்சுத், ஸ்வாதி பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் மொத்தம் 5000 பேர் வந்திருந்தனர்.
சுதந்திர பேராட்டக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்திருந்த சிப்பாய்களின் தலைமையில் செயல்பட்டனர்.
இந்தியா அல்லது பாகிஸ்தான் என எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருந்த காஷ்மீரைக் கைப்பற்றி, அதனை பாகிஸ்தானோடு சேர்ப்பதே அவர்களின் நோக்கமாகும்.
ஏறக்குறைய அரசர்கள் ஆண்டு வந்த எல்லா பகுதிகளும் இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணைந்து கொள்ள முடிவெடுத்திருந்த நிலையில், இந்த முடிவை எடுக்காத ஒரே பகுதியாக காஷ்மீர் இருந்து வந்தது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஜம்மு காஷ்மீர் அரசர் ஹரிசிங், இந்தியா மற்றும் பாகிஸ்தானோடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தார்.
அதன்படி அந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது காஷ்மீருக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் இருந்த நிலை அப்படியே நீடிக்கும். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காஷ்மீரின் நிர்வாகம் அப்படியே தொடரும்; எந்த நாட்டுடனும் காஷ்மீர் இணையாது என்பதே அதன் பொருள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளோடு சேராமல், சுதந்திரமானதாக காஷ்மீர் விளங்கும் என்று இந்த நிலையான ஒப்பந்தம் குறிப்பிட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் உருவான பின்னர், பாகிஸ்தான் அதை மதிக்காமல், தாக்குதல் தொடுத்தது,
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை விளக்கும் 'The Story of the Integration of the Indian States' என்ற புத்தகத்தில் வி. பி. மேனன் விவரித்துள்ளார்.

பட மூலாதாரம், HULTON DEUTSCH
ஒவ்வொரு இடங்களாக கைப்பற்றி கொண்டு வந்த சுதந்திர போராட்டக்காரர்கள் என அழைக்கப்பட்டோர் அக்டோபர் 24ம் தேதி ஸ்ரீநகர் வந்தடைந்தனர். ஸ்ரீநகரிலுள்ள மௌரா மின் நிலையத்தை அவர்கள் மூடிவிட்டதால், ஸ்ரீநகர் இருண்டது.
இரண்டு நாட்களில் ஸ்ரீநகரை கைப்பற்றி விடுவதோடு, அந்நகர மசூதியில் ஈத் பண்டிகையை கொண்டாடுவதாக இந்த சுதந்திர போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த படிங்குடியின ஆண்களுக்கு எதிராக அரசர் ஹரிசிங்கால் போராட முடியவில்லை.
சுதந்திர நாடாக இருப்பதல்ல அப்போதைய பிரச்சனை. அவரது நாட்டையே அவர் இழந்துவிடும் சூழ்நிலையில் அவர் இருந்தார். எனவே, விரக்தியில் அவர் இந்தியாவின் உதவியை நாடினார்.
இணைக்க ஒப்பந்தம் கையெழுத்து
அக்டோபர் 25ம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் பரபரப்பு தொற்றியிருந்தது, கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்பேட்டன் தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
உள்துறை செயலர் வி. பி. மேனன் ஸ்ரீநகரை பார்வையிட வேண்டும் என்றும், அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து இந்திய அரசுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீநகருக்கு சென்றவுடன், அங்குள்ள அவசர நிலைமையை அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.
காஷ்மீரை காப்பாற்றுவதற்கு அரசர் ஹரிசிங்கிற்கு ஒரேயொரு வழிதான் இருந்தது. இந்தியாவிடம் இருந்து உதவி கேட்பதுதான் அந்த வழி. காஷ்மீர் பாகிஸ்தானால் கைப்பற்றப்படுவதை தடுக்கக்கூடிய வலிமை இந்திய ராணுவம்தான் இருந்தது,
அப்போதும், இந்தியா அல்லது பாகிஸ்தானோடு காஷ்மீர் சேர்ந்துவிடாமல் சுதந்திரமாகதான் இருந்தது. சுதந்திரமான ஒரு நாட்டுக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப மனமின்றி மவுண்பேட்டன் இருந்தார். வி பி. மேனன் மீண்டும் ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டார்,
கைவிடப்பட்டதைபோல காட்சியளித்த அரசரின் அரண்மனைக்கு நேரடியாக மேனன் சென்றார். எல்லா இடங்களிலும் பொருட்கள் சிதறி கிடந்தன. அரசரை பற்றி வினவியபோது, ஸ்ரீநகரில் இருந்து திரும்பி வந்த அரசர் உறங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மேனன் அவரை எழுப்பி, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவித்தர். இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்திலும் அரசர் கையெழுத்திட்டார்,
தனது ஊழியருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக அரசர் மேனனிடம் கூறினார், மேனன் திரும்பி வந்தால், இந்தியா உதவ தயாராக இருக்கிறது என்று பொருள்.
அப்படியானால், என்னை நன்றாக தூங்குவதற்கு விட்டுவிடுங்கள். மேனன் வராவிட்டால், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம். அப்படியானால், தூக்கத்திலேயே தன்னை சுட்டு கொன்றுவிடும்படி கூறியிருந்ததாக மேனனிடம் அரசர் கூறினார். (The Story of the Integration of the Indian States. பக்கம் - 275)
இந்தியா உதவியோடு வந்ததால், அரசர் ஹரிசிங்கை சுட்டுகொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இணக்க ஒப்பந்தத்தில் தாமதமாக கையெழுத்திட்டது ஏன்?
இணக்க ஒப்பந்த்த்தில் தாமதமாக கையெழுத்திடுவதற்கு காஷ்மீரில் நிலவிய சிக்கலான நிலைமையே காரணம் என்று மேனன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்,
காஷ்மீரில் நான்கு புவியியல் பகுதிகள் இருந்தன. வடக்கில் கில்ஜித், தெற்கில் ஜம்மு, மேற்கில் லடாக், நடுவில் காஷ்மீர் பள்ளதாக்கு.
ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையான இருந்தனர். லடாக்கில் பௌத்தர்கள் அதிகமாக வாழ்ந்தனர். ஆனால், கில்ஜித் மற்றும் பள்ளதாக்கில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்ததால், அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.
ஆனால், அரசர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்ததால், உயரிய பதவிகள் அனைத்தையும் இந்துக்களே பெற்றிருந்தனர். தங்கள் புறக்கணிக்கப்படுவதாக முஸ்லிம்கள் எண்ணினர்.
முஸ்லிம்களின் அபிலாசைகளையும், குரலையும் வெளிகொணர்வதற்கு ஷேக் அப்துல்லா 'அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டை' நிறுவினார்.
1939ம் ஆண்டு இதனை மத சார்பற்றதாக மாற்றும் நோக்கில், இதன் பெயரில் இருந்த 'முஸ்லிம்' என்ற சொல்லை மாற்றி 'ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாடு' என பெயர் வைத்திருந்தார்,

பட மூலாதாரம், FOX PHOTOS
1946ம் ஆண்டு அரசர் ஹரிசிங்கிற்கு எதிராக ஷேக் அப்துல்லா பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார். "காஷ்மீரை விட்டு வெளியேறு" என்ற இயக்கத்தையும் தொடங்கிய பின்னர், நீண்ட காலம் ஷேக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும், அந்நேரத்தில் காஷ்மீரில்அப்துல்லா மிகவும் பிரபலமான தலைவராக உருவாகியிருந்தார். ('The Story of the Integration of the Indian States', பக்கம் எண். 270)
சிறப்பு அந்தஸ்து வழங்க அம்பேத்கர் தயாராக இல்லை
டாக்டர் பி.ஜி.ஜோதிகார் 'Visionary Dr. Babasaheb Ambedkar' என்கிற தனது புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
"காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென ஷேக் அப்துல்லா கோரினார். ஆனால், முடியாது என்று தெரிவித்த டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் அவரிடம், "இந்தியா உங்களை பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஆனால், இந்தியாவுக்கு உரிமைகள் எதுவும் இல்லை. இதுதான் நீங்கள் விரும்புவதா! நான் இந்த கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது," எனத் தெரிவித்தார்.
டாக்டர் அப்பேத்கரின் பதிலால் கவலையடைந்த ஷேக் அப்துல்லா, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருந்த நேருவிடம் சென்றார்.
வெளிநாட்டுக்கு செல்ல இருந்ததால், சட்டப்பிரிவு 370 வரைவை தயாரிக்க கோபால்சாமி ஐயங்காரை நேரு கேட்டுக்கொண்டார். எந்வித பொறுப்பும் இல்லாத அமைச்சராக இருந்த கோபால்சாமி ஐயங்கார், அரசமைப்பு வரைவு பேரவையில் உறுப்பினராகவும், காஷ்மீரின் திவானாகவும் இருந்தார் (பக்கம் எண். 156-57)
ஜன் சங் தலைவராக இருந்த பால்ராஜ் மட்ஹோக் தனது சுயசரிதையில், 'Divided Kashmir and Nationalist Ambedkar' என அத்தியாயம் ஒன்றில் இதுபற்றி எழுதியுள்ளார்.
"தங்களை தேசியவாதிகள் என்று சொல்லி கொள்பவர்களைவிட அதிக தேசியவாதியாகவும், அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களைவிட மேலான அறிவு ஜீவியாக அவரை (அம்பேத்கரை) நான் கண்டேன்." (பக்கம் எண் - 152)

பட மூலாதாரம், YAWAR NAZIR
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து
இணைக்க ஒப்பந்தத்தோடு மேனன் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, சர்தார் படேல் அவரை வரவேற்றார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இருவரும் சென்றனர். நீண்ட கலந்தாய்வுக்கு பின்னர், ஜம்மு காஷ்மீர் இணைக்க ஒப்பந்தமும், நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய ராணுவம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது.
நிலைமைகள் சீராகியவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 21ம் தேதி காஷ்மீர் பற்றி நடாளுமன்றத்தில் மிக விரிவாக அறிக்கை சமர்பித்த ஜவஹருலால் நேரு, ஐக்கிய நாடுகள் அவை அல்லது அது போன்ற முகமையின் கண்காணிப்பின் கீழ் காஷ்மீர் மக்கள் தங்களின் எதிர்காலத்தை முடிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்கிற வாக்குறுதியையும் நினைவூட்டினார்.
ஆனால், பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னால், இந்தியா ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் லியாகுட் கான் கோரினார். ஆனால், நேரு இதனை மறுத்துவிட்டார். ('The Story of the Integration of the Indian States' - பக்கம் எண் - 279 )
இணக்க ஒப்பந்தத்தின்படி, சிறப்பு அந்தஸ்து பெற்று ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது. பாதுகாப்பு, வெளியுறவு விவகாரம் மற்றும் தகவல் தொடர்பை தவிர எல்லாம் ஜம்மு காஷ்மீர் கையாளும் நிலை உருவானது.

பட மூலாதாரம், HULTON ARCHIVES
இணைக்க ஒப்பந்தத்தில் அடுத்த நிபந்தனை, 1954ம் ஆண்டு குடியரசு தலைவர் ஆணையில் சட்டப்பிரிவு 35-ஏ இணைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இந்த இணக்க ஒப்பந்தத்தின்படி, சட்டம் இயேற்றுவது அல்லது ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் தலையிடுவதில் இந்தியா மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டுள்ளது.
அதிக சலுகைகளை சர்தார் படேல் அனுமதித்தார்
'Pate: A life' என்கிற புத்தகத்தில், ஜவஹர்லால் நேரு வெளிநாட்டில் இருந்தபோது, 1949ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசமைப்பு வரைவு பேரவையில் காஷ்மீர் பற்றி கலந்தாய்வு நடந்தது. அப்போது சர்தார் தனது கருத்தை தெரிவித்து அழுத்தம் கொடுக்காமல் விட்டார் என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்,
அரசியல் சட்ட வரைவுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்காலிக பிரதமராக செயல்பட்ட சர்தார், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
ஜவஹர்லால் நேரு வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னால் அறிவுறுத்திய சலுகைகளைவிட மேலதிகமான சலுகைகைளையும் சர்தார் அனுமதித்தார்,
அதிக சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கோரிக்கை வைக்க, அதற்கு அபுல் கலாம் ஆசாத் மற்றும் கோபாலசாமி ஆதரவு தெரிவித்தனர், எனவே, சர்தார் அதற்கு இசைந்தார்.

பட மூலாதாரம், GOVERNMENT OF INDIA
அபுல் கலாம் ஆசாத், ஷேக் அப்துல்லா மற்றும் கோபாலசாமி ஆகியோர் நேருவின் கருத்துக்களை பிரதிநிதித்துவம் செய்ததால், நேரு இல்லாத வேளையில் சர்தார் அவற்றை எதிர்க்கவில்லை. (பக்கம் எண் - 523)
அசோகா பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன், காஷ்மீர் தொடர்பாக நேரு மட்டுமே முடிவெடுத்தார் என்பது தவறானது என்கிறார்.
தனது கட்டுரையில் கீழ்கண்டவாறு ஸ்ரீநாத் ராகவன் எழுதியுள்ளார்.
"காஷ்மீர் பற்றி பல்வேறான கருத்துகள் இருந்தாலும், நேருவும், சர்தார் படேலும் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 தொடர்பாக செய்ததை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
இந்த முன்மொழிவு தொடர்பாக கோபாலசாமி ஐயங்கார், ஷேக் அப்துல்லா மற்றும் பலர் வேலை செய்தனர். இதுவொரு கடினமான கலந்துரையாடலாக இருந்தது. சர்தார் படேலின் அனுமதியில்லாமல் இது தொடர்பாக நேரு எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சர்தாரின் இல்லத்தில் மே மாதம் 15-16 வரை நடந்த கூட்டங்களில் நேரு கலந்து கொண்டார்.
ஷேக் அப்துல்லா மற்றும் நேரு ஏற்றுக்கொண்ட முன்மொழிவை சர்தார் பட்டேலுக்கு ஐயங்கார் அனுப்பியபோது, இது பற்றிய உங்களின் ஒப்புதலை தயவுசெய்து ஜவஹர்லாலிடம் தெரிவிப்பீர்களா? என்று குறிப்பிட்டிருந்தார். இதனை நீங்கள் ஏற்றுகொண்ட பின்னர்தான், நேரு, ஷேக் அப்துல்லாவுக்கு கடிதம் எழுதுவார் என்றும் அதில் ஐயங்கார் எழுதியிருந்தார்.
அடுத்து, அரசமைப்பு வரைவில், அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்த வேண்டாம். மாநில சட்டப்பேரவை இதுபற்றி முடிவு செய்து கொள்ளட்டும் என்று அப்துல்லா வலியுறுத்தியிருந்தார்,
இதனை ஏற்றுகொள்ளாத சர்தார் படேல், கோபாலசாமியிடம் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதை போலவே தொடர சொல்லிவிட்டார்,

பட மூலாதாரம், Getty Images
இந்நேரத்தில் நேரு வெளிநாட்டில் இருந்தார். அவர் இந்தியா திரும்பிய பின்னர், சர்தார் அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நீண்ட கலந்தாய்வுக்கு பின்னர் மட்டுமே, கட்சியை (காங்கிரஸ்) தன்னால் சம்மதிக்க செய்ய முடிந்தது" என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வை குறிப்பிட்டு எழுதியுள்ள ஸ்ரீநாத், சட்டப்பிரிவு 370-ஐ உருவாக்கியதில் சர்தார் படேலின் பங்கும் இருக்கிறது என்கிறார்.
'Patel: A Life' என்கிற புத்தகத்தில், ராஜ்மோகன் மேலும் கீழ்கண்டவாறு எழுதுகிறார்.
காஷ்மீர் பற்றிய இந்திய நடவடிக்கைகள் பலவற்றை வல்லபாய் படேல் விரும்பவில்லை".
"பொது வாக்கெடுப்பு, ஐக்கிய நாடுகள் அவைக்கு பிரச்சனையை கொண்டு செல்வது, பாகிஸ்தானிடம் பெரும் பகுதியை விட்டுவிட்டு போர்நிறுத்தம், அரசர் நாட்டை விட்டு வெளியேறுதல் ஆகியவற்றை படேல் விரும்பவில்லை".
"அவ்வப்போது, சில பரிந்துரைகளை வழங்கிய சர்தார் படேல் விமர்சனமும் செய்துள்ளார். ஆனால், காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு எதையும் அவர் வழங்கவில்லை.
"காஷ்மீர் பிரச்சனை தீர்வு காண முடியாத ஒன்று" என்று 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயபிரகாஷ் நாராயனிடம் படேல் கூறியுள்ளார்.
அப்போது ஜெயபிரகாஷ் நாராயன், "சர்தார் இறந்த பின்னர், உண்மையாகவே அவரால் மட்டும் இதற்கு எவ்வாறு தீர்வு கண்டிருக்க முடியும் என்பதை அவரது ஆதரவாளர்களாலேயே செல்ல முடியாமல் போகும்" என்று பதிலளித்திருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












