கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

பட மூலாதாரம், Kamalhassan/Twitter

படக்குறிப்பு, கான் திரைப்பட விழாவில் கமல்ஹாசன்
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரான்ஸ் நாட்டின் கான் நகரில், 75வது கான் திரைப்பட விழா இந்த ஆண்டு கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல நட்சத்திரங்களது வருகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, இந்த வருடம் இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடிகர் அக்‌ஷய்குமார், மாதவன், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சிறப்பு செய்தியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், 75வது கான் திரைப்பட விழாவின் தங்க பனை விருதுக்கான நடுவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இதில் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டம், நடிகர் மாதவனின் 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கியுள்ள 'லீ மஸ்க்' திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படுகிறது.

விழாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஷ்வர்யா ராய், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, அவர்களின் கண்கவர் உடைகள், பேச்சுகள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவற்றின் தொகுப்பை இங்கே படிக்கலாம்.

கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

பட மூலாதாரம், Deepika Padukone/Instagram

நடிகை தீபிகா படுகோன்: 'இந்தியாவில் கான் விழா'

இந்த வருடம் நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக தான் பங்கேற்று இருப்பது எதிர்பாராத ஒன்று என தன் மகிழ்ச்சியை தீபிகா வெளிப்படுத்தி இருக்கிறார். "சினிமா துறைக்குள் 15 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது என் திறமையை யாரும் பெரிதாக மதிப்பிட்டு இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து இன்று கான் விழாவின் நடுவராக இருப்பது பெருமிதமான ஒன்று.

இந்திய கலைஞர்களின் திறமை மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த 75 வருட கான் திரைப்பட விழாவில் இந்தியர்களின் கலையும், கலைப்படைப்பும் நிறைய உள்ளது. அவர்களை போன்ற திறமையான முன்னோடிகளால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். இந்தியர்கள் கான் விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, இந்தியாவில் கான் விழா விரைவில் நடைபெறும்" என தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், படங்களை மதிப்பிடும் நடுவராக தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்தவர், "கிரியேட்டிவ் கலைஞர்களான நமக்கு படங்களை மதிப்பிடும் தகுதி இருக்குமா என தெரியவில்லை. நடுவர் என்பது பெரிய பொறுப்பு. அந்த அழுத்தத்தை எடுத்து கொள்ளாமல் பார்வையாளராக பங்கேற்கிறேன்" என கூறியுள்ளார்.

ஐஷ்வர்யா ராய்: 'படங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்'

கடந்த 2003ஆம் வருடம் இந்திய நடிகைகளில் முதன் முறையாக நடிகை ஐஷ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவின் நடுவராகப் பங்கேற்றார். அன்றில் இருந்து இன்று வரை கான் திரைப்பட விழாவில் ஐஷ்வர்யா ராயின் வரவு எப்போதும் ரசிகர்களிடையே கவனம் குவிக்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அவர் தன் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

பட மூலாதாரம், Aishwarya Rai Bachchan/Instagram

திரைப்பட விழாவில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் திரைப்படங்களில் நடிப்பில் பெண்களின் பங்களிப்பு, திரைத்துறை அவர்களை நடத்தும் விதம் குறித்து பேசியுள்ளார். "பெண்கள் இல்லாமல் திரைப்படம் செய்ய முடியாது என்ற உந்துதலையும் அவர்களுக்கான இடத்தையும் திரைத்துறையில் கொடுத்து தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் இன்னும் வெளிச்சம் போட்டு காண்பிக்க பட வேண்டும். ஒரு திரைப்படம் உருவாவதற்கு பெண்களின் பங்கு என்றுமே தவிர்க்க முடியாதது. எனவே ஆண், பெண் என வேறுபாடின்றி திறமைக்கும் ஆதரவும் வாய்ப்பும் தேவை" என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்: 'சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது'

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் ஜூன் மாதம் 3ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதை ஒட்டி இந்த படம் குறித்து பிரத்யேகமாக பேசி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டதாகவும், அதன்பிறகு அதோடு தான் சொன்ன கதையையும் வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை முடித்ததாக தெரிவித்தார்.

மேலும், கடைசி நேரத்தில் தான் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் உடனே ஒத்துக் கொண்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார் என்பதையும் தெரிவித்த அவர் சூர்யாவின் கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும் என்பதையும் தெரிவித்தார்.

கான் திரைப்பட விழா 2022: ஐஷ்வர்யா ராய் முதல் கமல்ஹாசன் வரை பேசியது என்ன?

பட மூலாதாரம், Hegde Pooja/Instagram

மேலும் பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், "பழைய 'விக்ரம்' படத்தில் உள்ள ஒரு சம்பவம் இந்த புதிய 'விக்ரம்' படத்திலும் இருக்கும். அது ஒன்று மட்டுமே பழைய விக்ரமுக்கும் இப்போதுள்ள விக்ரமுக்கும் உள்ள தொடர்பு" என்று கூறினார்.

இதுமட்டுமல்லாமல், 'பத்தல பத்தல' பாடலின் அரசியல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 'நான் எப்போதும் சினிமாவையும் அரசியலையும் பிரித்தது இல்லை. என்னுடைய பல படங்களிலும் வெளிப்படையாகவே அரசியல் பேசியிருக்கிறேன்' என்று கூறினார்.

பூஜா ஹெக்டே: 'கான் விழா என்னுடைய கனவு'

நடிகை பூஜா ஹெக்டேவும் இந்தியா சார்பாக இந்த 75வது கான் திரைப்பட விழாவில் முதன் முறையாக கலந்து கொண்டார். அங்கு இந்தியன் பெவிலியன் குறித்து அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய போது இந்தியா சார்பில் தான் கலந்து கொண்டு இருப்பது தனக்கு பெருமையான விஷயமாகவும், கான் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றது தன் கனவு நனவான தருணம் எனவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இயக்குநர் சத்யஜித் ரே படங்கள், 'நாயக்' திரைப்படம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நம் இந்திய படங்களை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்தி விட்டு நம் திறமைகளை நம் கதைகளை கொண்டாட வேண்டும். அப்படி தான், 'சாருலதா', 'நாயக்' போன்ற படங்கள் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது" என்று பேசினார்.

இயக்குநர் இரஞ்சித்: 'வேட்டுவம்' படத்தின் முதல் பார்வை வெளியீடு

இயக்குநர் பா. இரஞ்சித் தன்னுடைய 'வேட்டுவம்' படத்தின் முதல் பார்வையை கான் திரைப்பட விழாவில் வெளியிட்டு இருக்கிறார். அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கும் இந்த படத்தின் கதை கேங்ஸ்டர் தொடர்பானது என்கிறார் இரஞ்சித். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "சமூக ரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் அதிகாரத்தை நோக்கி எப்படி உயர்கிறான் என்பதுதான் கதை. அதிகாரத்தை பயன்படுத்துபவர்கள் வரலாற்று ரீதியாக விளிம்பு நிலை மக்களை எப்படி தாழ்வு மனப்பான்மைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நோக்கி கேள்வி எழுப்பும் படமாக 'வேட்டுவம்' அமையும்" எனவும் பேசி இருக்கிறார்.

Director Ranjith

பட மூலாதாரம், twitter@pro_Guna

இந்த படத்தை இயக்குநர் இரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'கோல்டன் பிலிம் ரேஷியோ'வின் அபயானந்த் சிங், பியுஷ் சிங், அஷ்வினி செளத்ரி, அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

மேலும் பல தசாப்தங்களாக திராவிட அரசியலில் தமிழ் சமூகத்தில் சாதி ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை குறிப்பிடுபவர், இது புறக்கணிக்கப்பட்ட கதைகளின் வழியைக் கண்டுபிடிக்க அனுமதிக்கவில்லை என்கிறார். அப்படியான கதைகளை மக்களிடம் வலுவாக கொண்டு போய் சேர்க்கும் ஊடகமாக சினிமாவை பயன்படுத்தி கொள்ள விரும்புவதையும் தெரிவித்தார்.

"என் முதல் படத்தின் ஒரு காட்சியில் அம்பேத்கர் படத்தை வைத்த போது அதை நீக்குமாறு பல அழுத்தங்களை எதிர்கொண்டேன். ஆனால், இப்போது குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் பல கலைஞர்கள் தங்கள் கதைகள், சவால்களை சினிமா எனும் இந்த ஊடகத்தின் மூலம் சொல்ல விரும்புகிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறு வழியை என்னால் அமைத்து கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி" என்கிறார்.

இது தவிர்த்து, இரஞ்சித் இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இது தவிர்த்து நடிகர் விக்ரமுடன் ஒரு படம், பாலிவுட்டில் அவர் இயக்கும் 'பிர்சாமுண்டா' திரைப்படம் இதுமட்டுமல்லாமல் மதுரையை பின்னணியாக கொண்ட கமல்ஹாசனுடன் ஒரு படம் ஆகியவை கைவசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன்: 'ராக்கெட்டரி' படத்திற்கு கிடைத்த பாராட்டு

ActorMadhavan

பட மூலாதாரம், twitter@ActorMadhavan

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் 'ராக்கெட்டரி: தி நம்பி விளைவு' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உலகம் முழுவதும் வருகிற ஜூலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் கான் திரைப்பட விழாவில் நேற்று (20.05.2022) திரையிடப்பட்டு அங்கு பாராட்டுகளையும் குவித்திருக்கிறது.

படம் குறித்து மாதவன் பேசும் போது, "இஸ்ரோ விஞ்ஞானி நம்பியின் கதையை படமாக்க அவரை திருவனந்தபுரத்தில் முதலில் சந்தித்த போது அத்தனை வருட கோபத்தோடு தான் அப்போதும் இருந்தார். தீர்ப்பு வெளி வராத சமயம் அது.

இயக்குநராக இவருடைய கதையை சரியாக அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருந்தது. அதனால் தான் வேறு எந்த படங்களிலும் கவனம் செலுத்தாமல் இத்தனை வருடமும் இதில் மட்டும் தான் வேலை செய்து கொண்டிருந்தேன். படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கானை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்குமே நூறு நாட்களை கடந்து இந்த படத்திற்கான ஒத்திகை முடிந்து தான் படப்பிடிப்பு தளத்திற்கே சென்றோம். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்தால் இரவு 2 மணியை கூட தாண்டி செல்லும்" என்றார்.

படப்பிடிப்பு தளத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தாலும் அவர் இந்த கதையை சினிமாவுக்கும் விதத்தில் எதிலும் தலையிடவில்லை எனவும் ராக்கெட் அறிவியல் அது குறித்தான காட்சிகளை புரிந்து கொள்ள உதவியதாகவும் கூறினார். மேலும், கான் விழாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய பிரதம் மோதியின் 'மைக்ரோ எக்கனாமி' திட்டம் வெற்றி பெற்ற ஒன்றாகவும் அது தான் புதிய இந்தியா என்பதையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.

காணொளிக் குறிப்பு, இந்தி மொழி சர்ச்சை: கன்னட நடிகருடன் மோதிய பாலிவுட் நட்சத்திரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: