சென்னையில் புழக்கத்தில் போதை மாத்திரைகள் - மருத்துவர்களின் பெயரில் நடக்கும் மோசடி

ஆன்லைன் போதை மாத்திரைகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் தலைவலி மாத்திரையைக் கூட வாங்க வேண்டாம் என்று அரசு தொடர் பிரசாரம் செய்து வரும் நிலையில், ஆன்லைன் மூலமாக போதை தரக்கூடிய வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளைக் கூட சென்னை புறநகரில் எளிதில் வாங்கும் நிலை நிலவுகிறது. என்ன நடக்கிறது சென்னையின் புறநகர் பகுதிகளில்?

கடந்த ஏப்ரல் மாத இறுதியில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் இளைஞர்கள் சிலரிடம் சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து, முறையான பரிந்துரையின்றி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வலி நிவாரண மாத்திரைகள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த குழுவில் இருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 6 இளைஞர்களிடமிருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

எங்கிருந்து கிடைத்தன இந்த மாத்திரைகள்?

மருத்துவர்கள் பெயரில் நடைபெறும் மோசடிகள் இதில் பிரதானமானவை என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மருந்தாளுநர். இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை அவர் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

"மருத்துவர்' தனது நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகளை மருத்துவமனை ஊழியர்கள் மூலம் மருந்து கிடங்கில் இருந்து வாங்குவது வழக்கும். அப்படி வாங்கும்வேளையில்தான், மருத்துவரின் பெயரில் மோசடி நடைபெறுகிறது," என்கிறார் அவர்.

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், தனது நோயாளிகளுக்கு மிகவும் அவசியம் என தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, வலி நிவாரண மருந்துகளை பரிந்துரைக்கிறார். உதாரணத்திற்கு, மாதத்திற்கு ஐந்து நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்து வேண்டும் என அவர் பரிந்துரைத்தால், மருத்துவ கிடங்கிலிருந்து கூடுதல் எண்ணிக்கையில் மருந்துகள் வாங்கப்படுகின்றன. ஒருசில மருத்துவமனைகளின் ஊழியர்கள் இப்படி செய்கின்றனர். அதே சமயம், தன் பெயரில் இப்படி ஒரு மோசடி நடத்தப்படுவது பெரும்பாலான மருத்துவர்களுக்கு தெரியாது என்கிறார் அந்த மருந்தாளுநர்.

சட்ட விரோத மருந்துகளை மொத்தமாக வாங்குவது கிடையாது?

ஆன்லைனில் கிடைக்கும் ஆபத்தான மருந்துகள்

பல மருத்துவர்கள் பணியாற்றும் மருத்துவமனையில், ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டில் இருந்து கூடுதலாக வாரத்திற்கு 20 மாத்திரைகள் வாங்குகிறார்கள். இதேபோல், பல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டின் மூலம் மாதத்திற்கு, ஆண்டுக்கு எவ்வளவு மாத்திரைகள் பெறப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

இந்த மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுகின்றன. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாதபோதும், அவை விற்கப்படுகின்றன.

கைவசம் ஆதாரம் உள்ளது

இப்படி, ஆன்லைனில் நடைபெறும் மருந்து விநியோகம் தொடர்பான, ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் மனோகரன். இது குறித்து மேலும் அறிய மனோகரனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

மனோகரன்

பட மூலாதாரம், Manoharan

படக்குறிப்பு, மனோகரன்

"ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதால் தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சமுதாய சீரழிவை ஏற்படுத்தும் போதை மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகள், வீரிய மாத்திரைகள் போன்றவை ஆன்லைன் மூலம் எளிதாகக் கிடைக்கின்றன.

ஆன்லைனில் மருந்து வாங்க, மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், இந்த ஆன்லைன் வர்த்தகத்தில், போலியாக மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை அவர்களே வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்காக கூடுதல் கட்டணமும் பெற்றுக்கொள்கிறார்கள்.

இதுபோன்று, ஆன்லைனில் பல்வேறு இடங்களில் இருந்து வாங்கிய விற்பனை ரசீதுகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் தமிழக முதல்வரிடம் கொடுத்து உள்ளோம். விரைவில் ஆன்லைனில் சட்டவிரோதமாக மருந்துகளை இளைய சமூகத்தினர் வாங்குவதை தடுத்து ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்," என்கிறார் மனோகரன்.

காவல்துறை சொல்வது என்ன?

சமீபத்தில் பிடிபட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்பான போதை வலி நிவாரணிகள் பறிமுதல் வழக்கு குறித்து சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் மண்டல இயக்குநர் அரவிந்தனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, போதை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படும் மாணவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

மேலும், " வீரிய, வலி நிவாரண மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் பொழுது 3 மருந்து சீட்டுகளை வழங்க வேண்டும். ஒன்று அந்த சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் இருக்க வேண்டும். மற்றொன்று நோயாளியிடம் இருக்க வேண்டும். மற்றொன்று எந்த கடையில் மருந்து வாங்கப்படுகிறதோ அந்த கடையில் கொடுக்கப்பட வேண்டும். இதுதான் விதி. இந்த விதி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்," என்கிறார் அரவிந்தன்.

அரவிந்தன் ஐ.பி.எஸ்
படக்குறிப்பு, அரவிந்தன் ஐ.பி.எஸ்

இது குறித்து மருத்துவர்களுக்கும் மருந்தாளுநர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போதை தடுப்பு பிரிவு துறை சார்பில் நடத்தப்படும். அதேபோல் எந்த பகுதியில் ஆன்லைனில் மாத்திரைகள் அதிக அளவு வாங்கப்படுகின்றன என்பதை கண்காணித்து அந்த இடத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கிறோம். ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக நடைபெறும் விதிமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அரவிந்தன் கூறினார்.

போதை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் யாராக இருந்தாலும் நிச்சயம் ஜாமின் வழங்கப்பட மாட்டாது. குறைந்தது மூன்று மாதங்களாவது சிறையில் இருக்க வேண்டிய நிலை நேரிடும். எனவே இளைஞர்கள் மாணவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம்" எனவும் காவல் அதிகாரி அரவிந்தன் எச்சரித்தார்.

காணொளிக் குறிப்பு, போதைக்கு அடிமையானவரின் விஸ்வரூப மாற்றம் – யார் இவர்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :