You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி ஜெர்மனி பயணத்தில் குழந்தை பாடிய பாடல் வைரலானபோது, தந்தை கொதித்தது ஏன்?
என் குழந்தையை உங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்தாதீங்க என்று கடுமையாகவே எதிர்வினையாற்றியிருக்கிறார் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வாழும் இந்திய வம்சாவளியினரான கணேஷ் போல்.
மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதன் ஒரு பகுதியாக ஜெர்மனி சென்றபோது அங்குள்ள இந்தியர்கள் சிலர் அவரை வரவேற்றனர்.
அப்போது அவரை வரவேற்ற கணேஷ் போலின் ஏழு வயது மகன் அவரிடம் ஒரு பாடலை பாடிக் காட்டினார். இது பெரிதாக வரவேற்பு நாளில் பேசப்படாவிட்டாலும் அந்த சிறுவன் பாடிக்காட்டிய காணொளியை வட மாநிலங்களில் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியனும் இந்தியாவில் வசிப்பவருமான கனால் கம்ரா தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
ஆனால், சிறுவன் பாடிய உண்மையான பாடலுக்கு பதிலாக இந்திய பணவீக்கத்தை கிண்டல் செய்யும் வகையில் 'பீப்லி லைவ்' என்ற இந்தி படத்தில் வரும் ஒரு நாட்டுப்புற பாடலை சிறுவனின் குரலுடன் எடிட்டிங் செய்து குனால் கம்ரா பகிர்ந்திருந்தார். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டது.
பலரும் இந்திய பிரதமர் மோதியிடமே நேருக்கு நேராக விமர்சன பாடலைப் பாடி சவால் விடுத்த சிறுவன் என்று கருத்துக்களை பகிர்ந்தனர். ஆனால், மறுபுறம், குனால் கம்ரா திரித்து வெளியிட்ட பாடலுக்கு எதிர்வினையும் கிளம்பியது.
இதன் உச்சமாக, சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தையான கணேஷ் போல், குனால் கம்ராவை அவரது ட்விட்டர் முகவரியில் டேக் செய்து "இதுதான் எனது ஏழு வயது மகன் தனது தாய்நாட்டுக்காக உண்மையாக பாடிய பாடல். அவன் மிகவும் இளையவன் என்றாலும் தனது தாய்நாட்டை நீங்கள் குனால் கம்ராவோ கச்ராவோ யாராக இருந்தாலும் அவன் உங்களை விட நிச்சயம் அதிகமாக நேசிக்கிறான். உங்களுடைய இழிவான அரசியலில் இருந்து பாவம் அந்த சிறுவனை விலக்கி வைத்து விட்டு உங்களுடைய மலிவான நகைச்சுவையில் கவனம் செலுத்துங்கள்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ட்விட்டர் பயனர்கள் பலர், "குனால் கம்ராவை கைது செய்யுங்கள்," என்று கோரினர். இதையடுத்து குனால் கம்ரா அந்த சிறுவனின் தந்தை பதிவிட்ட ட்விட்டர் கருத்துக்கு பதிலளிக்கையில், "இது உங்களுடைய மகனுடைய நகைச்சுவை அல்ல. உங்கள் மகனுடைய நாட்டுப் பற்றுப் பாடலை நீங்கள் ரசிக்கும் வேளையில், தமது நாட்டில் உள்ள மக்கள் அவருக்காக பாடும் பாடலை இந்திய பிரதமர் கேட்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
ஆனால், குனால் கம்ராவின் இந்தக் கருத்துக்கும் ட்விட்டரில் கடும் எதிர்வினை கிளம்பியது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இந்தியாவில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டது.
சர்ச்சைக்குரிய வகையில் குனால் கம்ரா பதிவிட்ட ட்விட்டர் இடுகையை நீக்க வேண்டும் என்று அந்த கவுன்சில் மும்பையில் உள்ள ட்விட்டர் நிறுவனத்துக்கு வியாழக்கிழமை இரவு கடிதம் அனுப்பியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாக குனால் கம்ரா தமது ட்விட்டர் இடுகையை நீக்கினார். ஆனாலும், அவருக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டர் பயனர்கள் தொடர்ந்து அவரது பக்கத்தில் டேக் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்