தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தை கண்காணிக்க குழு - முழு விவரம்

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தப்போது பொதுமக்கள் பெரும்பாலானோர் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அன்றாடம் சில ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இதனால், தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
யார் தலைமையில் குழு இயங்கும்?
இந்த கண்காணிப்புக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்,கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார்கள்.
இக்குழுவின் பணி என்ன?
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், சரியான நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கும். இதேபோல், திடீர் ஆய்வு பணிகளையும் இந்த குழு மேற்கொள்ளும்.
மேலும், மாதம்தோறும் முதல் மற்றும் 3-வது திங்கள் கிழமைகளில் இந்த குழு கூடி, நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் ஆணையருக்கு மாதந்தோறும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

27 பேர் பணியிடை நீக்கம்!
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையின், இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆட்சி மாறும் பொழுது ஆரம்பத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் உயர்ரக தரத்தில் இருக்கும். அடுத்தடுத்து மாதங்கள், ஆண்டுகள் கடந்த பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தரமற்றதாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், செயலர்கள் என மொத்தம் 27 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் இடத்தில் முறையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்று பொறுப்பு அதிகாரிகளுக்கும், அவ்வாறு வந்தால் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சாமானிய மக்கள் என்ன சொல்கிறார்கள்?
விவசாயிகளிடமிருந்து உரிய நேரத்தில் நெல்களை கொள்முதல் செய்வதில்லை இதன் காரணமாகவே தரமில்லாத அரிசி வினியோகிக்கப்படுகிறது என்கிறார் காஞ்சிபுரத்தைச் சார்ந்த சங்கர் மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் நெல்கள் அனைத்துமே தரமானது தான். ஆனால் அவர்களிடம் நெல்களை கொள்முதல் செய்வதில் மிகுந்த காலதாமதம் ஆகிறது. இதனால் அதன் தன்மை மங்கி விடுகிறது. இதனால்தான் பொதுமக்களுக்கு தரமில்லாத அரிசி விநியோகிக்கப்படுகிறது எனவே விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்களை கொள்முதல் செய்வதோடு அதை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றார்.
எதார்த்தமான உண்மை என்னவென்றால் நூற்றுக்கு 25 பேர் மட்டுமே தான் ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் கள்ளச்சந்தையில் அரிசியை விற்பனை செய்கிறார்கள் என கூறுகிறார் மதுராந்தகம் பகுதியை சார்ந்த உதயகுமார்.
மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது: "மத்திய அரசு கொடுக்கும் இலவச அரிசியும் சேர்த்து ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தார்கள் என்றால் 40 கிலோ மாதம் அரிசி கிடைக்கிறது, கிலோ 5 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் பெரும்பாலானோர் விற்பனை செய்கிறார்கள். விற்பனை செய்யப்படும் அரிசி கோழிப்பண்ணைக்கு, மாட்டுக்கு தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்".
பச்சரிசி, குண்டு அரிசியை பெரும்பாலும் யாரும் விற்பனை செய்வதில்லை, வீட்டில் இட்லி மாவுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். மற்ற எந்த அரிசியாக இருந்தாலும் பெரும்பாலும் கள்ளச்சந்தையில் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 5 ரூபாய்க்கு வாங்கி சென்று அதை 15 முதல் 20 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்கிறார்கள் என்றார்.
ஏன் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன?
நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமாக இருப்பதை, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தான் முடிவு முடிவு செய்கிறார்கள். அரிசி தரமில்லை என்றால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்; ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிறார் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர்.

தினேஷ் மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது, "நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, அரிசி மூட்டைகள் லாரி மூலம் கடைக்கு கொண்டு வந்து இறக்கப்படுகிறது. அரிசி சரி இல்லை என்றால், அதற்கான பொறுப்பை தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தான் ஏற்க வேண்டும். கடைகளில் இறக்கி வைக்கப்பட்ட தரமற்ற அரிசிகளை திருப்பி எடுத்து செல்ல லாரி வாடகை ஏற்றுக்கூலி, இறக்கு கூலி என, இரண்டையும் கடை ஊழியர்கள் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், அதிகாரிகள் அதை அனுமதிப்பதில்லை" என்கிறார்.
அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் எடை குறைவு!
ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில் குறைந்தது 5 கிலோ எடை குறைவாகவே தான் வரும். இதேபோல்தான் மற்ற பொருட்களிலும் எடை குறைவு உள்ளது.பெரும்பாலான அனைத்து தனியார் சூப்பர் மார்க்கெட்டில் சிசிடிவி கேமரா இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நுகர் பொருள் வாணிப கிடங்குகளில் சிசிடிவி கேமரா என்பது கிடையாது? சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை! அது ஏன் என்று தெரியவில்லை.
கிடங்கில் அரிசியை முறையாக பாதுகாப்பது கிடையாது?
விவசாயிகளிடமிருந்து காரராக நெற்களை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் அதை முறையாக பாதுகாப்பது கிடையாது. வாணிப கிடங்கில் திறந்தவெளியில் பல ஆயிரம் டன் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து நாள்கணக்கில் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதனால் தரம் இல்லாமல் போய்விடுகிறது. பத்து மூட்டை தரமான அரிசி அனுப்பப்படுகிறது என்றால் அதில் தரமற்ற அரிசியையும் கலப்படம் செய்து தான் அனுப்புகிறார்கள் என்றார்.
அமைச்சர் சொல்வதென்ன?
ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பொருட்களின் தரத்தை காண்பித்து அவர்களின் அனுமதி பெற்ற பிறகே இனி பொருட்கள் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என்கிறார் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறுகையில்,"கடந்த கால ஆட்சியில், கிடங்கில் தேக்கி வைக்கப்பட்ட 17 லட்சம் நெல் மூட்டைகள் அரைகபடாமல் இருந்தது. தற்போது புதிய ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் பட்ட நெல்களையும் சேர்த்து முழுமையாக அரைத்து தொய்வு இல்லாமல் பொதுமக்களுக்கு நல்லபடியாக விநியோகம் செய்து வருகிறோம்," என்றார்.
நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து வழங்கப்பட்ட அரிசி உட்பட அனைத்துப் பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதற்கு ரேஷன் கடை பணியாளர்கள் பொறுப்பேற்க முடியாது! ஒருவேளை தவறுதலாக தரமில்லாத பொருட்கள் ரேஷன் கடைக்கு வந்து விட்டால் அப்பொருளை மக்களுக்கு கொடுக்காமல், அப்படியே வைத்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலமாக தரமான பொருட்கள் மட்டுமே தான் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












