சிற்றுண்டியில் உப்பு அதிகம் என மனைவி கொலை: இந்திய மனைவிகளின் நிலை பற்றிய அதிர்ச்சி தரவுகள்

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி ந்யூஸ், டெல்லி

இந்தியாவில் காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியைக் கொன்றதாக குற்றமசாட்டப்பட்ட 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைதுசெய்தனர்.

"மேற்கு நகரமான மும்பையின் அருகிலுள்ள தானேவில் ஒரு வங்கியில் பணிபுரியும் நிகேஷ் கக், தனது 40 வயது மனைவியின் கழுத்தை ஆத்திரத்தில் நெரித்தார். காரணம், அவர் பரிமாறிய ஜவ்வரிசி உப்புமாவில், உப்பு அதிகம் இருந்தது," என்று காவல்துறை அதிகாரி மிலிந்த். தேசாய் பிபிசியிடம் கூறினார்.

தன் தந்தை தனது தாயார் நிர்மலாவை பின்தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்று உப்பு பற்றி புகார் சொல்லியபடி அவரை அடிக்கத் தொடங்கினார் என்று இந்த குற்றத்தை நேரில் பார்த்த தம்பதியின் 12 வயது மகன் காவல்துறையிடம் கூறினார்.

"அடிப்பதை நிறுத்துமாறு தனது தந்தையிடம் சிறுவன் அழுது கொண்டே கெஞ்சினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியைத் தாக்கி, கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொன்றார்" என்று தேசாய் கூறினார். நிகேஷ் கக் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த சிறுவன் தனது தாய்வழி பாட்டி மற்றும் மாமாவை அழைத்தான்.

"நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, குடும்பத்தினர் அவரை ஏற்கனவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்," என்றார் திரு தேசாய் .

பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த குற்றம்சாட்டப்பட்டவர், தான் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாக அதிகாரிகளிடம் கூறினார். பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

கடந்த 15 நாட்களாக சில "வீட்டு பிரச்சனைகள்" தொடர்பாக கக், தனது மனைவி நிர்மலாவிடம் தகராறு செய்து வந்ததாக நிர்மலாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது அவரது குடும்பத்தினரிடமிருந்தோ இது குறித்து எந்த புகாரும் வரவில்லை என்று தேசாய் கூறினார்.

உணவிற்காக ஏற்பட்ட தகராறில், கணவனால் ஒரு பெண் கொலை செய்யப்படும் சம்பவம், இந்தியாவில் அவ்வப்போது தலைப்புச்செய்திகளில் இடம்பெறுகிறது.

சில சமீபத்திய வழக்குகளை எடுத்துக் பார்ப்போம்:

  • ஜனவரி மாதம், தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில், இரவு உணவை வழங்க மறுத்ததற்காக தனது மனைவியைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
  • 2021 ஜூன் மாதம், உத்திரபிரதேசத்தில் சாப்பாட்டுடன் சாலட் கொடுக்கவில்லை என்பதற்காக மனைவியைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
  • நான்கு மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் ஒரு நபர் , வறுத்த கோழியை சரியாக சமைக்கவில்லை என்பதற்காக மனைவியை அடித்துக் கொன்றார்.
  • 2017 இல், 60 வயது முதியவர் தனது இரவு உணவை தாமதமாக பரிமாறியதற்காக தனது மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பாலின ஆர்வலர் மாதவி குக்ரேஜா ,"மரணம் கவனத்தை ஈர்க்கிறது" என்று கூறுகிறார், ஆனால் இவை அனைத்தும் பாலின அடிப்படையிலான வன்முறைகள். ஆனால் அந்த அம்சம் "மறைந்து விடுகிறது" என்கிறார் அவர்.

"கணவன் அல்லது உறவினர்களால் கொடுமை" என்ற சட்டப்பூர்வ வார்த்தையின் கீழ் பெரும்பாலும் புகாரளிக்கப்படும் குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைக் குற்றமாகும். குற்றத் தரவுகள் கிடைக்கப்பெறும் கடைசி ஆண்டான 2020 இல், 1, 12, 292 பெண்களிடமிருந்து காவல்துறை புகார்களைப் பெற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நடக்கிறது.

இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே நடக்கிறது என்று சொல்ல முடியாது. உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்கிறார், அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் புள்ளிவிவரங்களும் இதே போலத்தான் உள்ளன.

இங்குள்ள ஆர்வலர்கள் அதைச் சூழ்ந்திருக்கும் மௌனத்திற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.அதிர்ச்சியூட்டும் வகையில் அத்தகைய வன்முறைக்கு பெரும் அங்கீகாரம் உள்ளது.

குடும்ப நல ஆய்வின் திடுக்கிடும் தகவல்கள்

அரசால் நடத்தப்பட்ட, இந்திய சமூகம் பற்றிய மிக விரிவான குடும்ப ஆய்வான, தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் (NFHS5) சமீபத்திய புள்ளிவிவரங்கள், திடுக்கிடும் தகவல்களை அளித்தன.

ஒரு மனைவி தனது மாமியாரை அவமதித்தால், தன் வீட்டை அல்லது குழந்தைகளை புறக்கணித்தால், கணவனிடம் சொல்லாமல் வெளியே சென்றால், சரியாக சமைக்கவில்லை என்றால்,உடலுறவுக்கு மறுத்தால் கணவன்அவளை அடிப்பது தப்பில்லை என்று 40% க்கும் அதிகமான பெண்களும் 38% ஆண்களும் அரசு கணக்கெடுப்பாளர்களிடம் கூறியுள்ளனர். நான்கு மாநிலங்களில், 77%க்கும் அதிகமான பெண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்களே, மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள். சரியாக சமைக்கவில்லை என்றால் ஒரு ஆண் தன் மனைவியை அடிப்பது தவறில்லை என்று ஆண்களை விட அதிகமான பெண்கள் நினைக்கிறார்கள். இதில் ஒரே விதிவிலக்கு கர்நாடகா மட்டுமே.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட முந்தைய கணக்கெடுப்பை விட இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அப்போது 52% பெண்கள் மற்றும் 42% ஆண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்தினர். ஆனால் மனப்போக்கு மாறவில்லை என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின் பாலின நீதித் திட்டத்திற்கு தலைமை தாங்கும் அமிதா பித்ரே கூறுகிறார்.

"பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதை நியாயப்படுத்தல், ஆணாதிக்கத்தில் வேரூன்றியுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் பெண்கள் கீழ்மட்ட பாலினமாக கருதப்படுகிறார்கள்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி நிலையான சமூக கருத்துக்கள் உள்ளன. அவள் எப்போதும் ஆணுக்கு அடிபணிய வேண்டும், எப்போதும் முடிவெடுப்பதில் தாமதிக்க வேண்டும், அவனுக்கு சேவை செய்ய வேண்டும், அவள் அவனை விட குறைவாக சம்பாதிக்க வேண்டும் போன்றவை. இவற்றுக்கு நேர்மாறானவற்றை ஏற்றுக்கொள்பவர்கள் குறைவு. அதனால், ஒரு பெண் எதிர்த்து நின்றால் அவளை அடக்குவது சரிதான் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது."

"ஆணாதிக்கம் பாலின விதிமுறைகளை வலுப்படுத்துகிறது மற்றும் பெண்கள் அதே கருத்துக்களை உள்வாங்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சமூகத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அதிகமான பெண்கள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துவதற்கு இதுவே காரணம்," என்று அமிதா பித்ரே கூறுகிறார்.

நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான வட இந்தியாவின் புந்தேல்கண்டில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக கால் நூற்றாண்டு காலமாக, பணிபுரியும் 'வணங்கானா' என்ற தொண்டு நிறுவனத்தை மாதவி குக்ரேஜா நிறுவியுள்ளார். "நீங்கள் உங்கள் புகுந்த வீட்டிற்கு ஒரு பல்லக்கில் செல்கிறீர்கள். உங்கள் இறுதி ஊர்வலம் மட்டுமே அங்கிருந்து வெளியேற வேண்டும்" என்று புது மணப்பெண்களுக்கு அளிக்கப்படும் ஒரு பிரபலமான அறிவுரை பற்றி அவர் கூறுகிறார்..

எனவே தொடர்ந்து அடி உதைகளை எதிர்கொள்ளும் பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள், இந்த வன்முறையை தங்கள் தலைவிதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். புகாரளிப்பதில்லை.

"கடந்த தசாப்தத்தில் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், இந்தியாவில் மனைவியை அடித்தல் மிகவும் குறைவாகவே பதிவாகிறது. இதுபோன்ற வழக்குகள் பற்றி புகாரளிப்பதும் பதிவு செய்வதும் கடினம். 'வீட்டில் நடப்பது வீட்டிலேயே இருக்க வேண்டும்' என்று பலர் கூறுவார்கள். அதனால், பெண்கள் காவல்துறையிடம் செல்வது ஊக்குவிக்கப்படுவதில்லை," என்று குக்ரேஜா கூறுகிறார்.

புகுந்த வீட்டை விட்டு வெளியேறினால்

மேலும், தங்கள் புகுந்த வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு வேறு போக்கிடமும் இல்லை என்று அவர் கூறினார்.

அவமானம் கருதி பெற்றோர்கள் அவர்களை வரவேற்பதில்லை. பல சமயங்களில், பெற்றோர் ஏழைகளாக இருப்பதால் மேலும் ஒருவருக்கு உணவளிக்க முடியாத சூழலில் உள்ளனர். இது போன்ற பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புமுறை இல்லை. தங்குமிடங்கள் மிகவும் குறைவு. மேலும் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மட்டுமே இருக்கிறது. தனக்கும், தன் குழந்தைகளுக்கும் உணவளிக்க க்கூட அது போதுமானது அல்ல."

வணங்கானாவின் தலைவரான புஷ்பா ஷர்மா, கடந்த மாதம் தன்னிடம் வந்த இரண்டு வழக்குகளைப் பற்றி என்னிடம் கூறினார். அதில் பெண்கள் தாக்கப்பட்டு ,சிறு குழந்தைகளுடன் கணவர்களால் கைவிடப்பட்டனர்.

"இரண்டு சம்பவங்களிலும் கணவர்கள் தங்கள் மனைவிகளை தலைமுடியைக் பிடித்து இழுத்து வெளியே தள்ளி, அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் அவர்களைத் தாக்கினர். அவர்கள் சரியாக சமைக்கவில்லை என்று கூறினர். அது எப்போதும் புகார்களின் ஒரு பகுதியாக உள்ளது. சாப்பாடு என்பது துவக்கப்புள்ளியாக இருக்கிறது."

எனக்கு பதில் சொல்லுங்கள்

"பெண்களைப் பெற்றெடுத்ததற்காக, 'ஆண் வாரிசு' தராததற்காக, கருமை நிறமாக இருப்பதற்காக, அழகாக இல்லாத காரணத்திற்காக, போதுமான வரதட்சணை கொண்டு வராததற்காக, கணவர் குடிபோதையில் இருந்தால், கணவர் வீட்டிற்கு திரும்பியவுடன் உணவு அல்லது தண்ணீரை விரைவாக வழங்கவில்லை என்பதற்காக, உணவில் அதிக உப்பைப் போட்டதற்காக அல்லது போட மறந்ததற்காக, ஒரு பெண் அடிக்கப்படுகிறாள்," என்று அவர் குறிப்பிட்டார்.

1997 இல், வணங்கானா வீட்டு வன்முறை பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக முஜே ஜவாப் தோ [எனக்கு பதில் சொல்லுங்கள்] என்ற தெரு நாடகத்தை தொடங்கியது.

"இந்தப்பருப்பில் உப்பு இல்லை... என்ற வரியுடன் நாடகம் தொடங்கியது" என்கிறார் திருமதி குக்ரேஜா.

"எங்கள் பிரச்சாரம் துவங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலமையில் சிறிதும் மாற்றம் இல்லை. அதற்குக் காரணம் திருமணத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம். திருமணத்தைக் காப்பாற்ற நாம் எல்லாவற்றையும் செய்கிறோம் . இது புனிதமானது, அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்."

"அந்த எண்ணம் மாற வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்கள் அடிப்பதை பொறுத்துக்கொள்ள தேவையில்லை," என்று அவர் உறுதிபடத்தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :