கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட தீவிளைவுகள் தொடர்பான தரவுகளை வெளியிடவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.
தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவதாகவும் அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்குவது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்கக் கோரியும், இந்தியாவில் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசியின் கிளினிகல் பரிசோதனை தொடர்பான தரவுகளை, சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப வெளியிடும்படி உத்தரவிடக் கோரியும் தடுப்பூசி தொடர்பான தேசிய நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜேக்கப் புலியல் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகு ஏற்படும் தீயவிளைவுகளைப் பற்றி அறிக்கை அளிப்பதற்கான முறை இந்தியாவில் தெளிவற்றதாகவும், தவறாகவும், மக்களுக்கு தெரியாததாகவும் இருப்பதாக கூறிய ஜேக்கப் புலியல், இந்த முறையை சீரமைக்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உடல் சார்ந்த சுதந்திரம்/உரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை. எனவே எவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
உடல் சார்ந்த சுதந்திரம், உரிமை ஆகியவற்றை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 பாதுகாப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கோவிட் தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பற்கும், வளங்களைப் பயன்படுத்துவதற்கும் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமற்றவை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அந்த கட்டப்பாடுகளை மாநிலங்கள் நீக்கலாம் என்று தெரிவித்தது.
அதே நேரம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
(இந்த செய்தி தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













